சோழர்களின் வணிகத் தலைநகராக விளங்கிய பூம்புகாரின் மீனவப் பெண்களுக்கு, சங்க இலக்கியத்தில் பெருமைக்குரிய பண்பாடும் நாகரிகமும் வாழ்க்கைப்பாடும் அழகும் செறிவும் உண்டு. கரோனா ஊரடங்குக்குப் பிறகு இன்றைய நிலைமை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ்வரும் வாணகிரி ஊராட்சியைச் சேர்ந்த மீனவப் பெண்களின் வாழ்க்கை அதற்கான விடையாக இருக்கிறது.
வாணகிரியில் மொத்தம் 1,400 குடும்பங்கள் உள்ளன. மீனவ மகளிர் குழுவில் 1,100 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு சுமார் 400 பைபர் படகுகளும் 80 விசைப்படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவப் பெண்கள் பெரும்பாலும் ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளனர். ஏறத்தாழ 75 சதவீதப் பெண்களுக்குப் படிப்பறிவில்லை. முதியோர் கல்வி மூலம் படித்ததில் கையெழுத்திட மட்டும் கற்றுக்கொண்டுள்ளனர்.
“ஊரடங்கு காலத்துல மக்கள் மீன்தான் அதிகம் சாப்டாங்க. ஆனா, போக்குவரத்து வசதி இல்லாததால பிடிச்ச மீன்களைக்கூட எடுத்துட்டுப் போக முடியல. எங்களைப் பொதுவாகவே பழைய அரசுப் பேருந்துகளிலும் தனியார் பேருந்துகளிலும் மட்டும்தான் ஏற்றுவார்கள். புதிதாக விடப்பட்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் ஏற்றுவதில்லை. நாயை விரட்டுகிற மாதிரி எங்களை விரட்டுவாங்க. கரோனாவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பு இன்னும் அதிகமாகிவிட்டது” என்று சொல்லும் மீனவப் பெண்களை ஊரடங்கு பாடாய்ப்படுத்திவிட்டது.
மயிலாடுதுறை, குத்தாலம், திருவாழி, சீர்காழி என அருகில் இருக்கும் இடங்களுக்கு மீன்களை ஆட்டோவில் ஏற்றிச்செல்லும் பெண்களிடம் ஊரடங்கின்போது இருமடங்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவுக்குப் பயந்தே பல பெண்கள் ஏலம் எடுத்தும், மீன்களை விற்பதற்கு வேறு இடங்களுக்குச் செல்லவில்லை.
“நிலைமை இன்னும் மாறவில்லை. பத்து ரூபாய் வாங்கிய ஷேர் ஆட்டோவில் 20 ரூபாய் வாங்குறாங்க. 1,000 ரூபாய்க்கு மீன் விற்றால் போக்குவரத்துக்கே 400-500 ரூபாய் செலவாகிவிடும்" என்கிறார், ‘நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற பூம்புகார் கல்லூரிப் பேராசிரியர் சாந்தகுமாரி.
கரோனாவும் ஒற்றைப் பெண்களும்
பல்வேறு காரணங்களால் கணவனை இழந்து வாழும் பெண்கள் மீனவர்களிடையே அதிகம். மீன்பிடித் தடைக்காலத்தின்போது மாநில அரசு மீனவக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. கணவர் இல்லாத பெண்களுக்கு இத்தொகை கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாமல் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதா, இல்லையா எனத் தெரியாமல் பொருளாதாரச் சுமையோடு பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.
இரட்டிப்பாகி உயர்ந்து நிற்கும் விலைவாசி, அதிகரித்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் வீட்டுச் செலவுக்குக் கடன், தொழில் நடத்தக் கடன், மகள்களின் திருமணத்துக்குக் கடன், வளைகாப்பு, பிள்ளைப்பேறு, அடுத்தடுத்த சீர் வரிசைகளுக்கான கடன் எனக் கடனும் கடன் சார்ந்த வாழ்வாகவும் மாறியிருக்கிறது நெய்தல் நிலம். இந்தக் கடன்களைக் கழிப்பதும் அடைப்பதும் மட்டுமே கரோனாவுக்குப் பிறகு மொத்த வாழ்க்கையாகவும் இருக்கப்போகிறது இப்பெண்களுக்கு.
கருவாட்டு வாழ்க்கை
மீனவப்பெண்களின் நிலைமை இப்படியிருக்க, பூம்புகாரில் கருவாடு விற்பனை செய்யும் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் சுனாமி குடியிருப்பைச் சுற்றிலும் குப்பைகூளம், அதில் மேயும் பன்றிகள் எனச் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு மத்தியில்தான் அப்பெண்கள் வாழ்கிறார்கள்.
“ஆறு மாதத்துக்கு முன்பு 126 பெண்களுக்கு வங்கிக்கடன் பெற முயன்றோம். பான் கார்டு கேட்டார்கள். அதை எடுக்க ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருக்க வேண்டுமாம். பலருக்கும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் ஆதார் அட்டையில் பிறந்த தேதி இல்லை. இவர்களுக்கென சிறப்பு அடையாள அட்டைகூட இல்லை" என்கிறார், மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவி ஷர்மிளா சந்திரன்.
“மீன்வளத் துறையே சொசைட்டி மூலமாகப் பெண்களை மையப்படுத்தி இயங்க வேண்டும். நிதி ஒதுக்கி, ஆணைகளைப் பிறப்பித்து, வங்கி மூலமாகக் கடன் வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்வது சாத்தியப்படாது" என்கிறார், ‘நேஷனல் ஃபிஷ்வொர்க்கர்ஸ் ஃபோரம்’ அமைப்பின் துணைத்தலைவர் ஆர்.வி.குமரவேலு.
கரோனா தொற்றினால் ஏற்பட்ட பாலினரீதியிலான தாக்கங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கிய ‘மீனா சுவாமிநாதன் ஊடகக் கூட்டாய்வு’க்காகப் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in