எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம், பிப்ரவரி 8ஆம் தேதி காலமானார். 1942-ல்திருச்சியில் பிறந்தவர் இவர். தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான இவர், ஆன்மிகக் கட்டுரைகளையும் ஆன்மிக நூல்களையும் எழுதியுள்ளார். தெளிவான உச்சரிப்பும், சிந்தை நிறைக்கும் கருத்துகளையும் கொண்ட ஆன்மிகச் சொற்பொழிவுக்காக 'சொற்சுவை நாயகி', 'செந்தமிழ்ச் செல்வி' ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியான இவரது கதைகளும் ஆன்மிகக் கட்டுரைகளும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. லட்சுமி ராஜரத்தினம், இசைத் துறையிலும் தேர்ந்தவர். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் பாடியுள்ளார். இவரது நாவல்கள் சமூக நோக்குடன் எழுதப்பட்டவை. வரலாற்று நாவல்கள் எழுதிய மிகச் சில பெண் எழுத்தாளர்களில் இவர் குறிப்பிடத்தகுந்தவர்.