நல்லதுக்கு போனை
யூஸு பண்ணு
பருவப் பொண்ணுக்கு
இதுவும் ஒண்ணு
தற்காப்புக் கலைகள்
தெரிஞ்சுக்கிட்டா
தெறிச்சு எவனும்
ஓடுவான் கண்ணு
எஸ்.ஓ.எஸ். ‘ஆப்’தனை
எல்லாருமே வச்சுக்கோங்க
ஏதாவது ஆபத்துன்னா
எடுத்து அதை டச் பண்ணுங்க
பாடல் வழியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பது காவலர் சசிகலாவின் கட்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக இவரே எழுதிப் பாடிய விழிப்புணர்வுப் பாடல் மக்களிடையே வரவேற்பையும் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவரும் சசிகலா (24) புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இளம் வயதிலேயே பாடல்களை எழுதி பள்ளி, கல்லூரி மேடைகளில் பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் அவருக்குப் பரிசுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
பி.எஸ்சி. முடித்துவிட்டுக் காவல் துறையில் சேர்ந்த பிறகு, தன் பாடல் எழுதும் திறனைச் சமுதாயத்துக்குப் பயன்தரும் வகையில் பயன்படுத்த நினைத்தார். கரோனா ஊரடங்குக் காலத்தில் முகக் கவசம் அணிவதன் அவசியம், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதால் கிடைக்கும் பலன், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் நோக்கம் போன்றவற்றைக் குறித்து விழிப்புணர்வுப் பாடலை எழுதினார். பணிபுரிந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனிடம் அதைப் பாடிக் காண்பித்தார். அவரிடமிருந்து பாராட்டு கிடைக்க, அந்த உற்சாகத்தில் மேலும் ஒரு விழிப்புணர்வுப் பாடலை எழுதி, இரண்டையும் தன் சொந்த செலவில் குறுந்தகடாகவும் வெளியிட்டார்.
அவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு, காவல்துறையினரும் நண்பர்களும் பாராட்டினர்.
“கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவாகும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணைக்காக திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்குச் செல்வது வழக்கம். அப்போதுதான் இது போன்ற குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வுப் பாடலை எழுதி, பாடி சமூக வலைத்தளத்தில் பரப்ப நினைத்தேன்” என்கிறார் சசிகலா.
சசிகலா வெளியிட்ட ‘குட்டிமா’ விழிப்புணர்வுப் பாடல் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களிலும் தமிழகக் காவல் துறையின் இணையதளத்திலும் ஒளிபரப்பானது. 14 நாட்களில் சுமார் 8.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர். ‘குட்டிமா’ பாடலை மத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பாராட்டி, நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
“பதின் பருவத்திலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோ ருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடலை வெளியிடவிருக்கிறேன்” என்கிறார் சசிகலா. பாடலை காண: https://www.youtube.com/watch?v=Y2gDmChmv6o
பாடலை காண: https://bit.ly/3qElJ18