பெண் இன்று

கேளாய் பெண்ணே: தாழ்வு மனப்பான்மையில் மறுகும் கணவன்

செய்திப்பிரிவு

எனக்குத் தலைமுடி அதிகமாக உதிர்கிறது. எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் முடி உதிர்வது நிற்கவில்லை. பொடுகுத் தொல்லையும் இருக்கிறது. எந்த எண்ணெய் பயன்படுத்துவது? எப்படிப் பராமரிப்பது?

- கீதா, மதுரை

டாக்டர் பி. மல்லிகா, துணை மருத்துவ அலுவலர் (சித்தா), அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க நீங்களே எண்ணெய் தயாரிக்க முடியும். இந்த எண்ணெயைப் பயன்படுத்திவந்தால் முடி உதிர்வதும் பொடுகுத் தொல்லையும் இருக்காது. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள். கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, பொடுதலை போன்றவற்றை 100 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

வெட்டிவேர், விலாமிச்சை வேர், வெந்தயம், வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கார்போக அரிசி, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, மகிழம்பூ, தடாநாஞ்சில் போன்ற பொருட்களைப் பத்து கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றை அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து, அதில் சாற்றையும் பொடியையும் சேர்த்துக் கலக்குங்கள். மெழுகு போன்ற பதம் வரும்வரை அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். பிறகு ஆறவைத்து வடிகட்டி, பயன்படுத்தலாம். தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்திவந்தால் முடி உதிர்வது குறையும்.

நான் என் அத்தை மகனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். அவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் சிறிய அளவில் சுயதொழில் செய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், எங்களுக்கு நிறைய கடனாகிவிட்டது. நாங்கள் வசித்த சிறிய நகரத்தில் எங்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால், என் பெற்றோரின் உதவியோடு சென்னைக்குக் குடிவந்துவிட்டோம்.

ஆனால், இப்போது இங்கே வந்ததிலிருந்து எனக்கும் என் கணவருக்கும் தீராத பிரச்சினையாக இருக்கிறது. என்னைச் சுற்றி எல்லோரும் இருப்பதாகவும், அவரைச் சுற்றி யாரும் இல்லாத மாதிரியும் அவர் உணர்கிறார். நான் அவர் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றுதான் சென்னைக்கு அழைத்துவந்தேன். ஆனால், நான் என் பெற்றோருடன் இருப்பதற்காகவே இங்கே வந்திருப்பதாக அவர் நினைக்கிறார். ஒவ்வொரு நாளும் மனக்கசப்புடன்தான் கழிகிறது. நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது?

- பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.

டாக்டர் பி.என். பிரபாகரன், உளவியல் நிபுணர், சென்னை.

உங்கள் கணவருக்கு இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. முதல் பிரச்சினை அவரது தாழ்வு மனப்பான்மை. இரண்டாவது பிரச்சினை அவருக்கு இருக்கும் தவறான புரிதல். அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாலேயே அவர் தான்தான் சரி என்பதுபோல் உங்களிடம் நடந்துகொள்கிறார். இந்தப் பிரச்சினை, அவரிடம் நீங்கள் பதிலுக்குப் பதில் பேசுவதால் அதிகரிக்கவே செய்யும். அதனால், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது இருவரும் வெளியே ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்று மனம்விட்டுப் பேசுங்கள்.

அவரது பிரச்சினைகளை நிதானமாகக் கேளுங்கள். குடும்ப வளர்ச்சிக்காகத்தான் அவரை சென்னைக்கு அழைத்துவந்தீர்கள் என்பதை அவருக்கு அன்பாகப் புரிய வையுங்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரது விருப்பம் என்னவென்று கேட்டு அதை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அத்துடன், அவரது தாழ்வுமனப்பான்மையை நீக்கி, அவரைத் தன்னம்பிக்கை நிறைந்த வெற்றிகரமான மனிதராக மாற்றுவதற்கு உங்கள் தரப்பில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசியுங்கள்.

தன்னுடைய சாதனைக்குத் தூண்டுதலாக இருக்கும் பெண்ணையே ஆண் மூளை ஏற்றுக்கொள்ளும். அவரது தாழ்வு மனப்பான்மை நீங்கினால் மட்டுமே உங்கள் பிரச்சினை தீரும்.

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: enindru@thehindutamil.co.in

SCROLL FOR NEXT