பெண் இன்று

அயல் வாழ்க்கை அனுபவம்: அமெரிக்க மனசுக்குள்ளே வாழும் சென்னை!

செய்திப்பிரிவு

பள்ளி மாணவியாக இருந்தபோது எனது வகுப்புத் தோழிகள் என்னைப் பார்த்து “ ரேவதியைப் பாருடி என்னவோ அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே செட்டில் ஆகிட்டமாதிரி பேசறா” என என்னைக் கேலி செய்வார்கள்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் நான். மயிலாப்பூர் ராணி மெய்யம்மை பள்ளியில் படித்தேன். 12-வது வகுப்பு படிக்கும்போது அடுத்த வருடம் எனது வாழ்க்கை அமெரிக்காவில் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. பள்ளிப் பருவக் காதல்தான் என்னை சூறாவளியாய்த் தூக்கிவந்து அமெரிக்காவில் போட்டது.

ஆரம்பத்தில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. இது எந்த இடம் என்றேன். கலிபோர்னியா என்றார்கள். அந்த இடத்தைப் பழகுவதற்குள் அடுத்த நகரம் அடுத்த நகரம் என்று அமெரிக்காவிலும் சூறாவளி வாழ்க்கைதான். எனது கணவர் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குபவராக இருந்தார். அந்த வேலையின் தன்மை ஊர் ஊராகச் சுற்றுவதாக இருந்தது. அவரது வேலை என்னை ரங்கராட்டினத்தில் வைத்துச் சுற்றியது போல சுற்ற வைத்தது. அந்தந்த ஊர்களில் பழகுகிற நட்புகள் பெரும்பாலும் ரயில் சினேகிதம் போலத்தான் அமைந்தன.

நமக்குத் தெரிந்த இங்கிலீஷ் எல்லாம் அங்கே செல்லாது. அமெரிக்கர்கள் இங்கிலீஷ் பேசுவதே சுத்தமாக புரியாது. இன்றைய தலைமுறையினர் அமெரிக்கா வருவதற்கு முன்பே இணையத்தில் அமெரிக்க ஆங்கிலத்தின் வட்டார வழக்குகளை கற்றுக்கொண்டு வருகிறார்கள். 20 வருடத்துக்கு முன்னால் இணைய வசதி எல்லாம் எனக்குக் கிடையாது. நாலு வார்த்தை பேசுவதே சவால்தான்.

ஒரு வகையான நாடோடி வாழ்க்கை சுமார் 5,6 வருடங்களுக்கு நீடித்தது. அதன்பிறகு கலிபோர்னியாவில் சொந்த வீடு வாங்கினோம். இரண்டு மகன்கள் பிறந்தனர். வாழ்க்கையில் ஒரு சமநிலை ஏற்பட்டது.

அமெரிக்காவில் நகருக்கு நகர் இருக்கிற தமிழ்ச் சங்கங்கள் பெரிய ஆறுதலாக இருக்கும். ஆரம்ப காலங்களில் அங்கே போய்விட்டால் நம்மூரில் இருப்பதுபோல இருக்கும். தமிழகத்திலிருந்து யாராவது ஒரு முக்கியமான நடிகரோ, பாடகரோ மாதந்தோறும் வந்து கொண்டுதான் இருப்பார்கள். இப்போது தகவல் தொடர்புகள் வளர்ந்துவிட்டன. தமிழகத்தில் வெளியாகிற அதே சினிமா அமெரிக்காவிலும் வெளியாகிறது. சென்னையிலிருக்கிற அம்மாவோடு இப்போதெல்லாம் வீடியோவில் பேசுகிறோம்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத்தான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இப்போது குழந்தைகள் கல்லூரி செல்லுமளவு வளர்ந்துவிட்டனர். வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருவது, அமெரிக்க நண்பர்களோடு சுற்றுலா செல்வது, சென்னையிலுள்ள நண்பர்களோடு எப்போதாவது பேசுவது என்று வாழ்க்கை சுழல்கிறது. எதையாவது படித்துக்கொண்டேயிருப்பது என் பழக்கம். அது இன்னும் தொடர்கிறது. அதுதான் வாழ்க்கையின் பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையிலும் என்னை உயிர்ப்போடு வைத்துள்ளது.

குழந்தைகளுக்கு அமெரிக்க வாழ்க்கைதான் இயல்பாக இருக்கிறது. சென்னையில் வாழ்ந்த அனுபவங்கள் அவ்வப்போது என் மனதில் வந்து போகத்தான் செய்கின்றன. ஆனாலும் பழைய மெட்ராஸ் பெண்ணாக மட்டும் நான் இல்லை. சூறாவளி எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. அமெரிக்காவில் எனது கால்கள் இப்போது நன்றாகப் பதிந்துவிட்டன.

- ரேவதி, கலிபோர்னியா.

SCROLL FOR NEXT