பெண் இன்று

வானவில் பெண்கள்: கேரளத்தின்முதல் திருநங்கை மருத்துவர்

ப்ரதிமா

திருநங்கையரின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் தொடங்கியிருக்கிறது. நம்பிக்கை தரும் மாற்றத்தின் சமீபத்திய வரவு டாக்டர் வி.எஸ். பிரியா. கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் இவர். ஜினு சசிதரனாகப் பிறந்த இவர், டாக்டர் பிரியா வாகப் பரிணமித்ததில் தன் குடும்பத்தின் பங்கு முதன்மையானது என்கிறார்.

பள்ளி நாள்களிலேயே தனக்குள் இருந்த பெண்மையை இனம் கண்டுகொண்ட பிரியா, அதை எப்படிக் கையாள்வது என்கிற தேடலில் இறங்கினார். கல்வியில் சிறந்து விளங்குவது அவசியம் என்று நினைத்தவர் தனக்குள் நிகழ்ந்த போராட்டங்களுக்கு நடுவே படிப்பில் கவனம்செலுத்தினார். திருச்சூரில் வைத்தியரத்னம் ஆயுர்வேத கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவப் படிப்பை நிறைவுசெய்தார். பிறகு, மங்களூருவில் மேற்படிப்பை முடித்தார். பட்டாம்பி, கன்னூர், திருப்புனித்துறை ஆகிய இடங்களில் பணியாற்றியபோதுதான் பாலின மாற்றத்துக்குத் தயாரானார்.

திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபோது ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன் அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். இதன்மூலம் கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் என்கிற அடையாளத்தை பிரியா பெற்றிருக்கிறார். குரல் மாற்ற சிகிச்சை உள்ளிட்ட இன்னும் சில சிகிச்சைகளை இவர் மேற்கொள்ளவிருக்கிறார். அறுவைசிகிச்சை முடிந்து தன்னை பிரியாவாக அறிவித்தபோது, “என்னைக் கண்டடைந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் பெண்மையைக் கொண்டாடுகிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்குள் நிலவிய மாறுபாடுகளை வெற்றிகரமாகக் கடந்துவந்துவிட்டேன்” என்று கூறினார்.

காத்திருந்த கனவு

எல்லோரையும் போலவே தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தைப் பெற்றோரிடம் சொல்ல பிரியாவும் பயப்பட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தன் பிரச்சினைகளைப் பற்றி ஒரு டயரியில் எழுதி அதைப் பெற்றோரின் பார்வை படும் இடத்தில் வைத்துவிட்டார். விவரம் அறிந்ததுமே அவருடைய பெற்றோர் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவரோ, பிரியாவுக்கு மனரீதியாக எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

தன்னைப் பற்றித் தெரிந்தால் சக மாணவர்களும் சுற்றியிருக்கிறவர்களும் கேலிசெய்வார்கள் என்று 15 வயதில் பிரியா பயந்தார். அதனால் தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்தார். தன் இயல்பான குணங்களை அடக்கிக்கொண்டு வாழ்வது மிகப்பெரிய கொடுமையாக இருந்தாலும் அதை ஏற்றார். பெற்றோர் இருவரும் செவிலியர் என்பதால் அவர்கள் விருப்பப்படி மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். ஆண் என்கிற அடையாளத்துடன் மருத்துவப் படிப்பை முடித்தவர், திருமணப் பேச்சைத் தள்ளிப்போடுவதற்காக ஆயுர்வேத மருத்துவ மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

துணை நின்ற குடும்பம்

தன் உண்மையான அடையாளத்தை மறைத்து போலியாக வாழ்வது தனக்குத் தானே செய்துகொள்கிற துரோகம் என்பது பிரியாவை உறுத்திக்கொண்டே இருந்தது. பாலின மாற்று சிகிச்சைகள் குறித்துத் தகவல் திரட்டினார். அதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட பிறகு தன் பெற்றோரிடம் விருப்பத்தைக் கூறினார்.

அவர்கள் அதிர்ச்சிக்கு பதிலாக வேதனையடைந்தனர். “அவர்களின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மையை மறைத்து வாழ்வது நியாயமல்ல. அவர்களும் என்னைப் புரிந்துகொண்டனர். எனக்காக மருத்துவமனையில் என் அம்மா துணையாக இருந்தார். மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அவர்கள் துணையாக இருந்ததால்தான் என் அடையாளத்தை எவ்விதத் தடையும் இன்றி வெளிப்படுத்த முடிந்தது” என்கிறார் பிரியா.

தான் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகமும் சக ஊழியர்களும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற தயக்கம் பிரியாவுக்கு இருந்தது. ஆனால், அனைவருமே அவரை நல்லவிதமாக அணுகினர். தன்னிடம் வழக்கமாகச் சிகிச்சை பெறுகிறவர்களிடமும் தன் அறுவைசிகிச்சை குறித்துச் சொல்லிவிட்டார் பிரியா. “அவர்களுக்கு இந்த சிகிச்சை முறைகள் குறித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. அவர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னேன். அது ஒரு திருநங்கை மருத்துவராக என் கடமையும்தான்” என்கிறார்.

மக்களும் சமூகமும் இன்று ஓரளவுக்கு மாறியிருந்தாலும் மாற்றுப் பாலினத்தவர் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்கிறார் பிரியா. அது உண்மை என்பதை, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT