பெண் இன்று

ஆட்டிப்படைத்த பிரச்சினைகள்

செய்திப்பிரிவு

காலமாற்றமும் நவீன சிந்தனைப்போக்கும் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங் களைக் கொண்டுவந்திருக்கின்றன. பெண் சமூகம் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது.இருந்தாலும் ஆதிகாலம் தொட்டுப் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் இன்னும் நீடித்துக்கொண்டும் புதிய வடிவங்களை எடுத்துக்கொண்டும்தான் இருக்கின்றன. காலமாற்றத்தின் துணைப்பயனாய் தலைதூக்கும் புதிய பிரச்சினைகளை எதிர்த்தும் பெண்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெருந்தொற்றுப் பேரிடருடன் கழிந்த 2020ஆம் ஆண்டில் பெண்கள் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினைகளின் தொகுப்பு:

ஊரடங்கின் கூடுதல் சுமைகள்

கோவிட்-19 பெருந்தொற்றாலும் அதன் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்குக் கட்டுப்பாடுகளாலும் பெண்கள் கூடுதல் சுமைகளைச் சுமந்தார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலைக்குப் போகும் பெண்களில் அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்களே அதிகம். முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட மாதங்களில் அவர்கள் முற்றிலும் வருமானத்தை இழந்து மற்றவர்களின் நிதியுதவி, கடனால் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலகில், கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதரச் சீர்கேட்டால் மேலும் 4 கோடியே 70 லட்சம் பெண்களும் சிறுமிகளும் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

தடைபட்ட உரிமைப் போராட்டம்

2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'குடியுரிமைத் திருத்தச் சட்டம்' இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கானது என்று நாடு முழுவதும் தொடங்கிய போராட்டங்களில் பெண்கள் முன்களத்தில் நின்றனர். குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் அமைதிவழியில் போராடத் தொடங்கினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 50 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்த போராட்டம், ஊரடங்கு விதிகளின் காரணமாக நிறுத்தப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற பெண்களின் போராட்டங்களும் நிறுத்தப்பட்டன.

ஊடக அத்துமீறலுக்கு ஆளான நடிகைகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வாங்கிக்கொடுத்த குற்றச்சாட்டில் அவருடைய தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக வட இந்திய ஊடகங்கள் பலவும் ரியாவின் தனிப்பட்ட கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் தனிநபர் உரிமைகளை மீறும் வகையிலும் செய்திகளை வெளியிட்டன. இந்த வழக்கின் நீட்சியாக திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் மீதும் இதே போன்ற ஊடகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சமூக அடுக்கில் எந்த நிலையில் இருந்தாலும் தம் மீதான அத்துமீறல்களிலிருந்து பெண்கள் முழுமையாக விடுபட்டுவிட முடியாது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

உழவர் போராட்டத்தில் உறுதிமிக்க பெண்கள்

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் குவிந்தனர். முதியவர்கள் முதல் சிறுமியர்வரை அனைத்து வயதுப் பெண்களும் இந்தப் போராட்டக் களத்தில் நிலைகொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் போராடச் சென்றவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது, பொருள்களை விளைவித்து அனுப்புவது, மற்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவது எனக் களத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தபடியும் பெண்கள் பங்களித்துவருகின்றனர்.

மரண தண்டனையும் மாறா அவலமும்

ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொன்ற டெல்லி ‘நிர்பயா’ வழக்குக் குற்றவாளிகளில் எஞ்சியவர்களான நால்வருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் குற்ற வழக்கில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த காலமான எட்டு ஆண்டுகளுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2018-19இல் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளன.

மதத்தின் பெயரால் மறுக்கப்படும் உரிமை

உத்தரப்பிரதேசத்தில் காதல், திருமணத்தின் பெயரில் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய ஆண்கள் சிலர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். பெண்களைக் காதலிக்கவோ திருமணம் செய்துகொள்ளவோ வற்புறுத்துவதைத் தண்டிப்பதற்கு ஏற்கெனவே சட்டங்கள் இருக்கும் நிலையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மதம் கடந்து காதலிக்கும் பெண்களின் உரிமையைப் பறிப்பதற்கான முயற்சி என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மதம் கடந்த திருமணங்களுக்கு எதிரான தனிப்பட்ட வழக்குகளில் இதுவரை தீர்ப்பு வழங்கியுள்ள பல நீதிபதிகள், திருமண வயதை எட்டிய அனைவரும் மதம், சாதி, இன அடையாளங்களைக் கடந்து தாம் விரும்பியவரை மணந்துகொள்வதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.

சாதியத்தின் சாபக்கேடு

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் சாதி இந்துக்கள் நால்வரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்தார். சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம்காட்டி இறந்த பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக காவல்துறை எரியூட்டியது. இறந்த பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள், அவருக்காக நீதி கேட்டுப் போராட முயன்றவர்கள், காவல்துறையால் தாங்கள் மிரட்டப்பட்டதாக குற்றம்சாட்டினர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட நால்வர் மீதும் கூட்டுப் பாலியல் வல்லுறவு, கொலை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளுர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. 2009-2019 காலகட்டத்தில் இந்தியாவில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது 159 சதவீதம் அதிகரித்துள்ளது என்னும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவு, ஹாத்ரஸில் நடைபெற்ற சம்பவத்தைத் தனித்த நிகழ்வல்ல என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.

ஒடுக்குமுறையின் உச்சம்

அதிகாரத்துக்கு வரும் தலித் பெண்களும் சாதிய அவமதிப்பிலிருந்து விடுபடுவதில்லை. கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது தரையில் அமர வைக்கப்பட்ட ஒளிப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவலான கண்டனங்களைப் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம், சுதந்திர நாளன்று தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தன்னைத் தடுத்ததாக ஆதிக்க சாதி உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டினார். பரவலான ஊடகக் கவனத்தைப் பெற்ற இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உயர் பதவிகளுக்கு வரும் பெண் தலைவர்கள் பெயரளவு அதிகாரத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்கள் என்னும் நிலையே நீடிக்கிறது.

ஆணவக்கொலையில் தொடரும் அநீதி

ஊடகக் கவனம் பெறும் அனைத்து வழக்குகளிலும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விரைவாக நியாயம் கிடைத்துவிடுவதில்லை. 2016இல் உடுமலையில் சங்கர் எனும் தலித் இளைஞர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரடியாக ஈடுபட்ட ஐவருக்கு மரண தண்டனையும் கொலையைத் தூண்டியதற்காக சங்கரைத் திருமணம் செய்துகொண்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி 2018இல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் 2020இல் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் கெளசல்யாவின் தந்தையைக் குற்றமற்றவர் என்று விடுவித்ததுடன், மற்ற ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

SCROLL FOR NEXT