வாசிப்பு சில நேரம் பதிலறியா வினாக்களுக்கு விடையளிக்கும், சில நேரம் பல வினாக்களை எழுப்பி நம்மை விடை தேடச்செய்யும். எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘கார்ப்பரேட் கோடரி’ நூல் (விகடன் பிரசுரம்) அப்படியான தேடலை நோக்கி என்னை நகர்த்தியது. ‘மனிதர்களின் முதல் உற்பத்தி தொடங்கியது மண்ணில்தான்.
ஆனால், இன்றைய நவீன உற்பத்தி முறை அந்த மண்ணைத்தான் சீரழித்துக் கொண்டிருக்கிறது’ என்கிற முன்னுரையே நாம் எதிர்கொள்ள விருக்கும் ஆபத்தை உணர்த்துகிறது. உலகமயமாக்க லுக்குத் தேவையான கச்சாப்பொருள் புதைந்து கிடப்பது இந்த மண்ணுக்குள் என்பதால் கார்ப்பரேட்டு கள் மண்ணை வேட்டை யாடத் தொடங்கி விட்டனர். கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வெட்டி வீழ்த்தியது வேளாண்மையை மட்டுமல்ல; பல தொல்குடிகளான உழவர்களின் வாழ்விடங்களை யும் சேர்த்துத்தான் என்பதையும், சொந்த மண்ணிலேயே அவர்கள் தொழிலாளிகளாகவும் அகதிகளாகவும் மாற்றப்பட்ட கதையையும் விளக்குகிறது இந்நூல்.
மேலும், இந்திய வேளாண்மை மீதான வன்முறை, வெள்ளைத் தங்கம் என வர்ணிக்கப்பட்ட பருத்தியில் தொடங்கியது என பி.டி. பருத்தியின் தாக்கத்தையும், காருக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கத் தேவையான பொருள்கள் ரப்பர், இரும்பு, பிளாஸ்டிக் என்பது மாறி சோளம், கரும்பு, சோயா எனச் செல்லும் காலம் வந்துவிட்டதையும் உரக்கச் சொல்கிறது.
ஆப்பிரிக்க நாட்டின் கனிம வளங்களின் புள்ளிவிவரங்களைக் கூறி, வளமுள்ள நாடு எப்படி வளமற்ற நாடுகளால் சுரண்டலுக்கு உள்ளாகிறது என்கிற நிதர்சனத்தைப் போட்டுடைக்கிறார் ஆசிரியர்.
தமிழகம் நிலநடுக்கோட்டுக்குத் தெற்கு வடக்காக 20 பாகையுள்ள பகுதியில் அமைந் துள்ளதால் இது கோகோ விளைய ஏற்றதாக இருக்கும் என்பதால், தற்போது நமது மாநிலத்தில் கோகோ பயிர் ஊக்குவிக்கப்படுகிறது எனக் கூறி முன்னதாகப் பணப்பயிர்களான பாமாயில், ஜெட்ரோபா போன்றவற்றால் உழவர்கள் தோற்ற கதையை எடுத்துச்சொல்கிறார்.
உழவர்கள் சூழல்சார் அறிவோடு அரசியல் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்து கிறார் நக்கீரன். தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கும், விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் இந்த நேரத்தில், இந்நூல் நமது பார்வையை நிச்சயம் விசாலப்படுத்தும்.
| வாசிப்பை நேசிப்போம் புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப் பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங் களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |
- நா. ஜெஸிமா ஹுசைன். திருப்புவனம்புதூர்.