என் மகனுக்கு ‘டிஸ்லெக்ஸியா’பாதிப்பு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வை ஸ்க்ரைப் உதவியுடன் எழுதி முடித்தான். இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் வரலாறு, பொருளியல் பிரிவில் படிக்கிறான். இதுபோன்ற மாணவர்களுக்கு அரசாங்கம் அல்லது தனியார் வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய படிப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.
- எம். அக்ஷயா, கோவில்பட்டி
பாரதி ராஜ்மோகன், கல்வி ஆலோசகர், சென்னை.
டிஸ்லெக்ஸியா பாதிக்கப்பட்ட குழந்தை களுக்காக இண்டிவிஜுவல் எஜுகேஷனல் பிளான் (Individual Educational Plan) என்னும் கல்வித் திட்டம் இருக்கிறது. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் அவர்களைப் படிக்க வைப்பதுதான் சிறந்தது. ஆனால், இப்போது உங்கள் மகன் பன்னிரண்டாம் வகுப்பு வந்துவிட்டதால் இதைப் பற்றி யோசிக்க முடியாது. தற்போது, உங்கள் மகனை வழக்கமான கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்க முடியும். ஆனால், அதற்குமுன் உங்கள் மகனுக்குத் தகுந்த படிப்பு எது என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்.
உங்கள் மகனின் ‘ஐக்யூ’ திறன் தற்போது எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் எழுதுவது, படிப்பது, புரிதல் என எந்த மாதிரியான ‘டிஸ்லெக்ஸியா’குறைபாடு அவருக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அவரது தனித் திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற படிப்பை அவரைப் படிக்கவைக்க முடியும். உங்கள் மகனைக் கல்லூரியில் சேர்ப்பதற்குமுன், ஒரு கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆலோசகரைஅணுகுவது நல்லது.
நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி. நான் தினமும் இரவு பதினோரு மணி முதல் காலை 4.30 மணிவரை தூங்குகிறேன். ஆனால் என் தூங்கும் நேரம் முழுதும் கனவுகளே நிரம்பியிருக்கின்றன. இப்படித் தூங்கும் நேரம் முழுவதும் கனவுகள் தொல்லை கொடுப்பதால் என் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? என் அன்றாட செயல்திறனை இந்தக் கனவுப் பிரச்சினை குறைக்குமா?
- வர்ஷா, சென்னை.
டாக்டர் எஸ். சிவராம கண்ணன், மூத்த உதவிப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி.
எல்லோருக்குமே தூங்கும்போது கனவுகள் வரும். ‘எனக்குக் கனவுகளே வராது’ என்று ஒருவர் சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். ஆனால், ஒருவர் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டால் கனவுகள் வராது. ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்பதுதான் உங்கள் பிரச்சினை. பொதுவாக, அதிகமான உடல் எடையுடன் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தூங்கும்போது குறட்டை விடுவார்கள். இவர்கள் மூச்சுக் குழாய்க்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இதை ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ (Obstructive Sleep Apnea Syndrome) என்று சொல்வார்கள்.
நீங்கள் உங்கள் தூக்க முறையை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு இந்த ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’வுக்கான பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தப் பரிசோதனை தெரியப்படுத்திவிடும். இதை உடல் எடை குறைப்பு சிகிச்சை மூலம் சரி செய்யமுடியும்.
சீரான தூக்கம் கிடைக்காதவரை, உங்களுடைய அன்றாடச் செயல்பாடுகள் நிச்சயம் பாதிக்கப்படவே செய்யும். அதனால் மருத்துவரைக் கலந்தாலோசித்து, தூக்கக் குறைபாடு இருந்தால் அதைச் சரிசெய்யுங்கள்.