பெண் இன்று

வாசகர் வாசல்: மருத்துவரைச் சந்திப்பதும் சிக்கலா?

செய்திப்பிரிவு

மார்பகப் புற்றுநோய் குறித்து ‘இந்து தமிழ்திசை’ சார்பாக நடைபெற்ற இணையவழி கருத்தரங்கு குறித்து அக்டோபர் 25 அன்று வெளியான ‘தயக்கம் ஆபத்தில் முடியலாம்’ கட்டுரையைப் படித்தேன். அதில் குறிப்பிட்டதைப் போல, தயக்கம் எங்கே ஆபத்தில் கொண்டுவிடுமோ என்கிற அச்சத்தில் மருத்துவரை அணுகினாலும், அது சில நேரம் எதிர்மறையான விளைவைத் தந்துவிடுகிறது. அதிலும், என்னைப் போன்ற இளம் வயதினர் பாடு திண்டாட்டமாக உள்ளது.

தன் மகளுக்கு மாதாமாதம் மாதவிடாய் வருகிறதா, மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு சீராக இருக்கிறதா என்று கேட்டுத்தெரிந்துகொள்ளும் அம்மாக்களும்கூட, மார்பகத்தில் ஏற்படும் சிக்கலில் சறுக்கிவிடுகிறார்கள். அம்மாக்களுக்கே விழிப்புணர்வு இல்லாத நிலையில், அறிகுறிகளை வைத்து மருத்துவரைச் சந்தித்த எனக்குக் கசப்பான அனுபவமே கிடைத்தது. 25 வயதைத் தாண்டாதவள் நான். சில மாதங்களுக்கு முன்பு மார்பில் கடுமையான வலி. மருத்துவரை அணுகினால், எனக்குக் குடல் புண் இருப்பதால், எதனால் வலிக்கிறது என்பதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை என்றார்.

15 நாள்கள் வயிற்றுப்புண் மாத்திரைகளைச் சாப்பிட்ட பின்பு வலி தொடர்ந்தால், திரும்ப வரச் சொன்னார். எனக்கோ மாத்திரைகளை உட்கொண்டிருக்கும்போதே, வலி அதிகரித்தது. பின்பு, உறவினர் முயற்சியால், வேறொரு மருத்துவரை அணுகினோம். பரிசோதித்துவிட்டு ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட்டு 15 நாட்களுக்கு மாத்திரைகளைக் கொடுத்தார். இடையில் வலியிருந்தால் திரும்ப வரச்சொன்னார்.

நான் முதலில் அணுகிய மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளும் அடுத்து சென்ற மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளும் ஏறத்தாழ ஒன்றே! வேறொரு உறவினர் முயற்சியில், அந்த ஊரிலே கைராசிக்காரர் என்று புகழப்படும் ஒரு மருத்துவ நிபுணரை அணுகினேன். ஸ்கேன் செய்ததில், ஃபைப்ராய்டு அடினோசிஸ் இருப்பதால் வலி ஏற்படுகிறதென்று கூறினார். இதை மாத்திரைகளைக் கொண்டு குறைத்துவிடலாம், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றார். அவர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டபோது வலி கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.

அடுத்த ஆலோசனைக்குச் சென்றபோது அவர் கூறிய வார்த்தை களைக் கேட்டு மனம் துவண்டு போனேன். தேவைப்பட்டால், மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரைக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றார். இது ஒரு பக்கம் என்றால் மகப்பேறு மருத்துவர்கள் சிலர் அடிப்படையில் சில அணுகுமுறையைக் கையாள்கின்றனர் என்பதையே என் அனுபவம் உணர்த்தியது. இளம் வயதினர் என்றால், அவர்களின் பார்வை நேரத்தைப் பாதியாகக் குறைத்து விடுகின்றனர்.

அதிலும், மணமாகாதவர் என்றால், பார்வையாளரின் வாயைத் திறக்க விடுவதே இல்லை. மணமாகாத நிலையில் மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பதிலும் சிக்கல் இருக்கவே செய்கிறது. காரணம், மகப்பேறு மருத்துவர் என்றாலே, கருத்தரிப்பு மட்டுமே என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். மணமாகாத இவர், மகப்பேறு மருத்துவரை ஏன் சந்திக்கிறார் என்று தங்களுக்குளாகவே பேசிக்கொள்வார்கள். சிலர் தேவையற்ற வதந்தியைப் பரப்பிவிடவும்கூடும்.

எனக்கு மார்பில் வலி ஏற்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. வலியும் தீர்ந்த பாடில்லை. மார்பகத்தில் என்ன பிரச்சினை என்றும் தெரியவில்லை. சிகிச்சையுடன் சேர்த்து, நோயாளிக்குத் தெளிவு ஏற்படும்விதமாகப் பேசினாலே பாதி நோய் குறைந்துவிடும். மாதவிடாய் தொடர்பாக இருந்த அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் எப்படித் திருத்தப்பட்டுவருகின்றனவோ அதே போன்று மார்பகம் தொடர்பான பிரச்சினைகளும் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும்.

பள்ளி மாணவியர், இளம்பெண்கள், 40 வயதைக் கடந்தவர் எனப் பலதரப்புப் பெண்களிடமும் மார்பகம் தொடர்பான தொடர் உரையாடல் நடத்தப்பட வேண்டும். மார்பகப் புற்றுநோய் மட்டுமில்லாமல் மார்பகம் தொடர்பான அனைத்துவித பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றைக் கடமையே என்று செய்யாமல் மருத்துவர்களுடன் சேர்ந்து தன்னார்வலர்களும் அரசும் இதுபோன்ற முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

SCROLL FOR NEXT