பெண் இன்று

கோணம் புதிது: யார் மாற வேண்டும்?

மைத்ரி

அலுவலகம் கிளம்பும் நேரத்தில் வீட்டுக்கு வந்திருந்த தோழி, அவசரமாக ஏதோ ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தாள். பேசி முடித்துக் கிளம்பும்போது, “ஆபீஸுக்கா” என்று கேட்டேன். “இல்ல. இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு ஆபீஸ் போக மாட்டேன்” என்றாள்.

அப்போதுதான் அவள் உடையைக் கவனித்தேன். கறுப்பு டி-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தாள். அந்த உடை அவளுக்கு அழகாக இருந்தது. அவள் அலுவலகத்தில் உடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. “ஏன் இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன குறைச்சல்?” என்றேன். “இந்த ட்ரெஸ்ல போனா ஆஃபீஸ்ல இருக்கற ஆண்கள் எல்லாம் என் டேபிளையே சுத்தி வராங்க” என்றாள்.

தோழி கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அவள் சொன்ன விஷயம் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. நடைமுறைச் சிக்கலை, சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக மேற்கொண்ட முடிவு என்னும் வகையில் அந்த முடிவைப் புரிந்துகொள்ள முடிந்தபோதிலும் அதை முழுமையாக ஏற்க முடியவில்லை. எங்கே எந்த உடையை எப்படி உடுத்திச் செல்வது என்பதற்கான வரையறைகளில் தெளிவாக இருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே அவர்கள் பல சமயம் தங்கள் உடையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தோழியும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்திதான். அவள் அணிந்திருந்த உடை அவள் அலுவலகச் சூழலுக்குப் பொருந்தாது என்று என எந்த வகையிலும் சொல்ல முடியாது. ஆனால் சக ஊழியர்களான சில ஆண்களின் தடுமாற்றத்தால் விளையும் சங்கடத்தைத் தவிர்க்க அவள் விரும்புவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் இதன் எல்லை எது? வழக்கமாக சல்வார் அல்லது சுடிதார் அணியும் ஒரு பெண் ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டால் சங்கடம் வருகிறது என்று அதைத் தவிர்த்தால், அதன் தர்க்க ரீதியான நீட்சி என்ன? குர்தா பைஜாமா அணியும்போதும் இதே பிரச்சினை வந்தால்? புடவை அணியும்போது இதே பிரச்சினை வந்தால்? சுடிதாரிலேயே வித்தியாசமான மாடலை அணியும்போது இதே பிரச்சினை வந்தால்?

இதே கேள்வியைச் சற்று விஸ்தரித்துப் பார்க்கலாம். உடன் வேலைசெய்யும் பெண்ணின் முக அழகைப் பார்த்துச் சக ஆண் ஊழியர்கள் அவளைச் சுற்றி வந்தால்? அவள் சிரிப்பு, புன்னகையின் அழகில் கிறங்கி அவள் மேசையை ஆண்கள் மொய்த்துக் கொண்டிருந்தால்? கண்ணழகில் மயங்கி சொக்கி விழுந்தால்?

பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, உடையை மாற்றிவிடலாம். ஆனால் முகத்தையோ சிரிப்பையோ கண்களையோ மாற்றிக்கொள்ள முடியுமா? இப்படியே போனால் எல்லாருமே கருப்புக் கண்ணாடியும் முகத்திலிருந்து கால்வரை மறைக்கும் அங்கியும் போட்டுக்கொண்டல்லவா வெளியில் செல்ல வேண்டியிருக்கும்?

தங்களது உடல் அமைப்பு, விருப்பம், சூழலைப் பொறுத்துத் தாங்கள் எடுக்கும் தீர்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பெண் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை அவள் பிறருக்காக மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. பிறருக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தால் அது மேலே சொன்னபடி கருப்புக் கண்ணாடியும் ஆளுயர அங்கியுமாகத்தான் போய் முடியும்.

அடுத்த முறை தோழியைப் பார்க்கும்போது, “மாற வேண்டியது உன் சகாக்கள்தானே தவிர, நீ அல்ல” என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

SCROLL FOR NEXT