ஷீரடியில் ‘சாய் தர்பார்’ மிகப் பிரசித்தம். அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் பரப்பிய மகான் ஷீரடி சாய்பாபா. அவரின் ‘சாய் தர்பார்’ பெயரிலேயே குடும்பத்தின் உறவுகளையும் குடும்ப நண்பர்களையும் இணைத்திருந்தார் ஸ்வர்ணமால்யா.
இரண்டு மணிநேரம் நடந்த இந்த மெய்நிகர் நிகழ்வில் பெங்களூரு, கேரளா, கொல்கத்தா, பிஹார், ராஜஸ்தான் என இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சிங்கப்பூர், மலேசியா, துபாய், வியன்னா, நியூயார்க், லண்டன், குவைத் என உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஸ்வர்ணமால்யாவின் உறவினர்களும் குடும்ப நண்பர்களும் சாய் பக்தர்கள் எனும் ஒரே குடையின்கீழ் கலந்துகொண்டதும், அவர்களின் வீட்டுக் குழந்தைகள் பாடியதும் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு எனும் கலைப் பரிமாற்றத்தை அர்த்தபூர்வமாக்கியது.
“பெருந்தொற்றுப் பேரிடர் குறித்து வெறுமனே வருத்தப்படுவதைவிட, நம்மி டையே இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் எல்லோரையும் இணைக்கும் வழியை ஏன் நாம் உண்டாக்கக் கூடாது?” என்னும் யோசனையை வழக்குரைஞரான மாலினி கணேஷ் தன்னுடைய மகள்களிடம் தெரிவித்தார். அம்மாவின் இந்த யோசனையை அண்மையில் ‘ஜூம்’ மீட்டிங் வழியாக மெய்நிகர் வடிவில் ‘சாய் தர்பார்’ என்னும் பொருளில் செய்து காட்டினர் ஸ்வர்ணமால்யாவும் ராதிகாவும்.
“நவராத்திரி கொலு எங்கள் வீட்டில் மிகவும் விசேஷமாக நடக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு முக்கியமான இறைபக்தி சார்ந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் கொலு அமையும். இந்த முறை ஊரடங்கால் நாங்கள் வழக்கமாக வைக்கும் பிரம்மாண்டமான கொலுவை வைக்க வில்லை. வீட்டுக்கு வருபவர்களுக்கு விதவிதமான சுண்டல், பரிசுப் பொருட்கள், தாம்பூலம் கொடுக்கவில்லை. ஆனாலும், நிறைய முகங்களைப் பார்த்த மகிழ்ச்சியை இந்தக் கொலு எங்களுக்குக் கொடுத்தது. இதில் பங்கெடுத்தவர்களிடமும் அந்த மகிழ்ச்சி இருந்ததை அவர்களின் புன்னகை பூத்த முகங்கள் நிரூபித்தன” என்றார் ஸ்வர்ணமால்யா.