பெண் இன்று

என் பாதையில்: தயக்கம் ஆபத்தில் முடியலாம்

செய்திப்பிரிவு

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பாக அக்டோபர் 17 அன்று நடத்தப்பட்ட இணையவழிக் கருத்தரங்கைப் பார்த்தேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பொதுவாக நிபுணர்களை மட்டுமே அழைத்துப் பேச வைப்பார்கள். இதுவே, பாதிக்கப்பட்டவர்களைப் பேச வைக்கும்போது வார்த்தைகளுக்கு வலிமை கிடைக்கும், வாசலும் திறக்கும்.

மார்பகப் புற்றுநோயுடன் போராடி அதிலிருந்து மீண்டிருக்கும் ரத்னா, கிருஷ்ணவேணி இருவரது வாக்குமூலமும் நம்பிக்கைக் காற்று வரும் அளவுக்கு வாசலை நன்றாகத் திறந்துவிட்டன. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் கவிதா, மடமடவெனப் பொழிந்து தள்ளிவிட்டார். மார்பகப் புற்றுநோய் வருவதற்கு அவர் பல காரணங்களைச் சொன்னார். காரணமே இல்லாமலும் வருகிறது என்பதும் ஒரு காரணம்.

இங்கே பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். நமது வளர்ப்புமுறைதான் இதற்குக் காரணம். மார்பகம் என்பதும் மற்ற உறுப்புகளைப் போன்றதுதான். இருந்தாலும், நம் சமூகம் இன்னும்கூட அதை வெட்கப்பட வேண்டிய அங்கமாகத்தான் பெண்களுக்குச் சொல்லித்தந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிப் பெண்களிடம் பேசக்கூட கூச்சப்படும் அளவுக்குத்தான் நாம் அவர்களை மழுங்கிப்போக வைத்திருக்கிறோம்.

அந்தக் கூச்சம்தான் அவர்களை தொடக்கக் கட்டத்திலேயே மருத்துவர்களிடம் செல்ல விடாமல் தடுக்கிறது; பின்பு நோய் முற்றிய நிலையில் உயிர் பயம் வந்ததும் மருத்துவரிடம் ஓட வைக்கிறது. நானும் அப்படித்தான் இருந்தேன். கூச்சத்தில் நாள்களைக் கடத்திப் பின் அச்சத்தில் மூன்றாம் நிலையில் மருத்துவரிடம் ஓடினேன். இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன் என்றாலும் முதல் நிலையிலேயே சென்றிருந்தால் சிகிச்சை இன்னும் எளிதாக இருந்திருக்கும்.

மார்பு என்பது மற்ற உறுப்புகளைப் போலவே சாதாரண உறுப்பு என்பதை மக்கள் உணரும் சூழல் வந்தாலே போதும். பாதிக்கப்பட்ட பெண்கள் தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிடுவார்கள். மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறையும்.

உடன் இருந்தவர்களின் அக்கறையே தன்னைப் பெருமளவு காப்பாற்றியது என்று ரத்னா சொன்னது நிதர்சனமான பேச்சு. காரணம் சுற்றி இருக்கிறவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயமும்கூடப் பலர் தங்கள் குறைபாட்டை மறைக்கக் காரணம். அதனால், குடும்பத்தினரும் சுற்றத்தினரும் அன்பும் அரவணைப்பும் காட்டினால், நோயிலிருந்து மீள மன உறுதி கிடைக்கும்.

‘எந்தத் தீய பழக்கமும் இல்லையே, எதனால் வந்தது இந்த நோய்?’ என்கிற கேள்வி அவருக்கும் வந்தது; கிருஷ்ணவேணிக்கும் வந்தது; எனக்கும் வந்தது. ஆனால், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் உண்மை. அதனால், மார்பில் சிறு மாற்றம் தென்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். காரணம், தயக்கத்தால் சிகிச்சையைத் தள்ளிப்போட்டதன் விளைவை நான் அனுபவித்திருக்கிறேன்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

SCROLL FOR NEXT