கடற்பகுதிகளில் வாழும் மீனவப் பெண்கள் தங்களுக்குரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது என்பது தனித்தன்மையுடன் கூடிய சவால். இதிலும் கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன் விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசியைச் சேகரிக்கும் ராமேசுவரம் மீனவப் பெண் லெட்சுமி, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாயைச் சேர்ந்த கடல்சார் ஆய்வு மையத்தின் (சீகாலஜி) 2014-ம் ஆண்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் கடல்பாசி சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் பாசி சேகரிப்பு, மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதைக் காட்டிலும் சிரமமானது. கடலுக்குள் ஆழத்தில் எவ்விதமான நீச்சல் உபகரணங்களும் இன்றி மூச்சைப் பிடித்துப் பாசிகளைச் சேகரிக்க மீனவப் பெண்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துயரங்கள் ஏராளம். அத்தகைய துயரங்களைத் தாங்கும் மன உறுதியை அங்கீகரிக்கும் விதமாக மீனவப் பெண்களுக்கு அமெரிக்க விருது கிடைத்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பாலம் மீனவக் கிராமத்தில் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவி லெட்சுமியைச் சந்தித்தோம்.
“எங்களை மாதிரி மீனவப் பெண்களுக்கு கடல் ஒண்ணும் புதுசு இல்லை. பொறந்ததுல இருந்து இந்த கடலம்மாவை பார்த்துக்கிட்டுதான இருக்கோம். சின்ன வயசுல இருந்தே அப்பாகூட கடலுக்குப் போறதும் அம்மாவோட சேர்ந்துகிட்டு பாசி சேகரிக்கறதும் இங்கே சகஜம்” என்று சொல்கிறார் லெட்சுமி.
சின்னப்பாலத்துக்கு அருகில் மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியவை உள்ளன. இவை பவளத் திட்டுகளும் பாசிகளும் நிறைந்தவை.
“அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு கஞ்சி, கருவாட்டை தூக்குச் சட்டியில எடுத்துக்குவோம். சூரிய உதயத்துக்கு போட்டியா படகில் ஏறி நாங்களே துடுப்பு போட்டுக்கிட்டு கடலுக்குள்ள போவோம். ஐந்து ஆள் பாகத்தில் மரிக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகள் வளர்ந்து இருக்கும். ரெண்டு நிமிசத்திற்கும் மேல மூச்சை தம் கட்டி கடல் அடியில் வளர்ந்திருக்கற பாசிகளை கண்டுபுடிச்சி, அதையெல்லாம் எடுத்துக்கிட்டு படகுல ஏத்துவோம். சாதாரண நாள்னா பரவாயில்லை. மாதவிடாய் சமயத்துல கடலுக்குள்ள இறங்குறது நரக வேதனை” என்று சொல்லும் லெட்சுமி, கண்களில் துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்தபடி தொடர்கிறார்.
“மத்தியானத்துக்கு அப்புறம் படகைக் கரைக்கு கொண்டுவந்து பாசிகளைக் காயவைப்போம். 15 கிலோவில் இருந்து 20 வரைக்கும் தனியார் கம்பேனிகாரர்கள் எடுப்பார்கள். மாசத்துக்கு மூவாயிரம் கிடைச்சாலே பெரிய விசயம். மழைக் காலம் வந்துட்டா பாசி சேகரிக்க முடியாது. நாங்க எடுக்குற கடல்பாசியில் இருந்துதான் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான உணவு, குளிர்பானங்கள், மாத்திரைகள் எல்லாம் தயாரிக்கிறதா சொல்லுவாங்க. அந்த சந்தோசம் எங்க காயத்தைக் கடத்திடும்” என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார்.
“2002-ம் ஆண்டுக்கு அப்புறம் பாசிகள் சேகரிக்கக்கூடாதுன்னு மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பக வனத்துறை அதிகாரிங்க தடை விதிச்சாங்க. சில சமயத்துல எங்க படகுகளைப் புடிச்சு வச்சுக்கிட்டு ஆயிரக்கணக்குல அபராதம் எல்லாம் போட்டிருக்காங்க. தரக்குறைவா கெட்ட வார்த்தையில எல்லாம் திட்டியிருக்காங்க. அதெல்லாம் இன்னும் இந்தக் கடல் காத்துல ஒலிச்சிக்கிட்டுதான் இருக்கு. ” – லெட்சுமியின் வார்த்தைகளில் வேதனை நிறைந்திருக்கிறது.
“எங்க பெண்டுகளுக்குப் பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாது. கடலை விட்டா வேறு தொழிலுக்கும் போக முடியாது. இந்த நிலையில்தான் பாசி சேகரிக்கற பெண்களை ஒருங்கிணைச்சு மீனவ மகளிர் கூட்டமைப்பு உருவாக்கினோம். உறுப்பினர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கியிருக்கோம்.
நாங்கள் படும் கஷ்டங்களை ‘பாட்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ராமநாதபுரம் ஆட்சியர், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பக அதிகாரிகள், வனத்துறையினர் இப்படி அனைத்து அரசு தரப்பினரிடமும் கடல் வளத்துக்கு எந்தவிதமான சேதமும் இல்லாமல் பாரம்பரிய முறையில பாசி சேகரிக்கற முறை குறித்து விளக்கமளித்தோம். இதை ஏத்துக்கிட்ட அரசு அதிகாரிகள் மாசத்துல 12 நாட்கள் மட்டுமே பாசி சேகரிக்க அனுமதி தந்தாங்க.
‘பாட்’ தன்னார்வ தொண்டு நிறுவனத் தின் பரிந்துரை அடிப்படையில எனக்கு அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்க விருது கொடுக்கப்போறாங்க. விருதுடன் பத்தாயிரம் டாலர் பணமும் கிடைக்கும். இதன் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளோட கல்விக்கும், பாசி சேகரிக்கும் மீனவ மகளிர் கூட்டமைப்புக்கும் கொடுக்கப்போறேன்.
எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து கடலில் மூழ்கி நீச்சல் அடிக்கப் பயன்படும் ஸ்கூபா சாதனங்கள், பைபர் படகுகள் தர வேண்டும். அதோடு, நாங்கள் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால், எங்கள் மீனவப் பெண்களின் வாழ்க்கை உயரும்” என்கிறார் லெட்சுமி.