பெண் இன்று

விவாதம்: ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

செய்திப்பிரிவு

மீண்டும் கிளம்பிவிட்டது ஆடை பூதம். பெண்கள் மீதான ஆடைக் கட்டுப்பாடு என்பது தொடர்கதைதான் என்றாலும் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கென்று உள்ள ஆடை வரையறையை இதில் சேர்க்க முடியாது. ஆனால் பெரும்பாலான பெண்களால் விரும்பி அணியப்படும் பொதுவான ஆடைகளுக்கும் கல்வி நிறுவனங்களில் தடை விதிக்கப்படுவது விவாதிக்கத்தக்கதே. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஜீன்ஸ், டீ ஷர்ட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்றவை அணிய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம் அந்த வரிசையில் லெகிங்ஸ் எனப்படும் ஆடை வகையும் சேர்ந்துவிட்டது. கல்லூரிப் பெண்கள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள்வரை பெரும்பாலானோரால் விரும்பி அணியப்படுவது லெகிங்ஸ். இருசக்கர வாகனங்கள் ஓட்டவும், அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்யவும் வசதியாக இருப்பதால் பெண்கள் பலரும் லெகிங்ஸைத் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். இந்நிலையில்தான் இதற்குத் தடை விதித்திருக்கிறது மருத்துவக் கல்வி இயக்ககம்.

எது முக்கியம்?

பொதுவாகவே கண்ணியம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் போன்ற வார்த்தை ஜாலங்களை வைத்துதான் ஆடைக் கட்டுப்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. உடை என்பது அணிகிறவருக்குப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருந்தால் போதும். எந்த ஆடையுமே அணிகிற விதத்தையும் பார்க்கிற விதத்தையும் பொறுத்துதான் அதன் கண்ணியமும் கவர்ச்சியும்.

எப்படி அணியலாம் லெகிங்ஸ்

பரவலாக அலுவலக ஆடையாகவும் கல்லூரிகளுக்கு அணிந்து செல்ல உகந்ததாகவும் லெகிங்ஸ் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அடர்நிறங்களிலும் உறுதியான துணிகளிலும் லெகிங்ஸ் அணிந்தால் உடுத்தியிருக்கிறவர் களுக்கும் பார்க்கிறவர்களுக்கும் எந்த வித உறுத்தலும் இருக்காது. லெகிங்ஸ் அணியும்போது முட்டியைத் தொடுகிற நீளத்தில் டாப்ஸ் அணிவது உகந்தது. ஷார்ட் டாப்ஸ் வகையைச் சேர்ந்த மேலாடைகளைத் தவிர்க்கலாம். அல்லது டாப்ஸுக்கு மேல் மினுமினுப்பான பிளேசர் அணியலாம்.

SCROLL FOR NEXT