பெண் இன்று

பார்வை: பெண்களின் திருமண வயதை எப்படி உயர்த்த வேண்டும்?

செய்திப்பிரிவு

ஏ.ஆர்.சாந்தி

உலக அளவில் பெண்களின் சட்டரீதியான திருமண வயது 14 முதல் 21 என நாட்டுக்கொன்றாக வேறுபட்டிருக்கிறது. இந்தியாவில் 1978-ம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த நிலையில் பேறுகாலத் தாய்மார்களின் இறப்பைக் குறைக்க வேண்டும், பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க வேண்டும் ஆகிய காரணங்களைச் சொல்லி, பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முயல்கிறது.

இந்தியாவில் இள வயது திருமணங்கள் நடைபெறாமல் இல்லை. வறுமை, வேலையின்மை, பெற்றோரை இழத்தல், ஆதரவற்ற நிலை, வீடின்றி சாலையோரங்களில் வசித்தல், கல்வியைத் தொடர முடியாத நிலை, கிராமப்புற வாழ்க்கை போன்றவை பெண்கள் மத்தியில் இளம் வயதுத் திருமணத்தை அதிகரிக்கின்றன. தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பெண்களிடம் இப்படியான திருமணங்கள் அதிகம்.

திருமண வயது ஏற்படுத்தும் பாதிப்புகள்

இள வயது திருமணத்தால் ரத்த சோகை, மிகை ரத்தஅழுத்தம், குறைப்பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், ரத்தப்போக்கு போன்ற உடல்நல பிரச்சினைகளுடன் மனநல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்தியப் பெண்களின் சட்டரீதி யான திருமண வயது 18 என்றபோதும் 2016-ம் ஆண்டுக் கணக்கின்படி, இந்திய அளவில் பெண்களின் சராசரி திருமண வயது 22.2. நிலைமை இப்படி இருக்கும்போது, அதை 21 வயதாக ஏன் உயர்த்த வேண்டும்? மாநில அளவிலும் சராசரித் திருமண வயது வேறுபடுகிறது. காஷ்மீரில் 24.7, மகாராஷ்டிரத்தில் 22.4, மேற்கு வங்கத்தில் 21.2, பிஹாரில் 21.5, ராஜஸ்தானில் 21.5 என்று சமச்சீரற்று உள்ளது. அதனால், இள வயதுத் திருமணங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆக உள்ளதால், இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிப்பதாகக் கருதும் சில அமைப்புகள் பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கோரிக்கைவிடுக்கின்றன. காதல், சாதி-மத மறுப்புத் திருமணங்களைத் தடுக்கும் நோக்கிலும் சிலர் இக்கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.

திருமண வயதும் பெண் கல்வியும்

தேசிய குடும்பநல நான்காம் ஆய்வு, கல்விபெறும் பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கேரளம், தமிழகம் போன்ற பெண் கல்வி மேம்பட்டுள்ள மாநிலங்களில் பேறுகாலத் தாய்மார் இறப்பு விகிதமும் குழந்தை பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளன. பெண் கல்வி குறைவாக உள்ள மாநிலங்களில் இவை அதிகம்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

பெண்களின் கல்வியும் பொருளாதார வளர்ச்சி யும் சிறந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக உள்ளன என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. அதனால் மத்திய, மாநில அரசுகள் பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை, கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். இலவச விடுதி வசதி, இலவச சைக்கிள், நூல்கள், மடிக்கணினி வழங்குவதுடன், ஒவ்வொரு கட்டத் தேர்ச்சிக்குப் பிறகும் பெண்களுக்கு நிதிஉதவி வழங்க வேண்டும்.

பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால், மாதவிடாய்க் காலங்களில் சிரமப்படும் மாணவிகள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகின்றனர். அதனால், அந்தக் குறைபாடும் களையப்பட வேண்டியதே. அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இலவச நாப்கின் வழங்க வேண்டும். பாலியல் கல்வி, சுகாதாரக் கல்வி அளிக்கப்பட வேண்டும். திருமணங்களை எளிமையாக நடத்த ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும். அரசு, தனியார் துறை வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமானால் அறிவில் சிறந்து விளங்கும் பெண்கள், இள வயது திருமணத்துக்கு இயல்பாகவே ஆளாக மாட்டார்கள்.

வறுமையும் குழந்தைத் திருமணமும்

பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதில் வறுமைக்கு முக்கியப் பங்குண்டு. ஏழைப் பெண்கள் மத்தியில்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ஐ.நா. அவையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பள்ளி இடைநிற்றலே குழந்தைத் திருமணங்களுக்கு முக்கிய காரணம். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இந்தியா முழுவதும் 9,570-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பல ஆயிரம் குழந்தைத் திருமணங்கள் கமுக்கமாக நடந்துள்ளன. இந்த குழந்தைத் திருமணங்கள் அனைத்தும் சில கட்சியினர்-சாதியினர் கூறுவதுபோல் ஹார்மோன்களாலோ காதலாலோ ஏற்படவில்லை. அனைத்தும் ஏற்பாட்டுத் திருமணங்களே.

ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணமா?

பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்ய திருமண வயதை உயர்த்த வேண்டும் என்பது அறிவார்ந்த கருத்தல்ல. வயதை உயர்த்தினால், ஊட்டச்சத்து எப்படிக் கிடைக்கும்? அதனால், உணவுப் பாதுகாப்பையும் அனைத்து வயதுப் பெண்களுக்கும் சத்தான, சரிவிகித உணவு கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்தி கல்லூரிவரை விரிவுபடுத்த வேண்டும். இத்திட்டம் மூலம் காலை உணவும் வழங்கப்பட வேண்டும். ஆணாதிக்கம் கோலோச்சும் குடும்பங்கள் உணவு வழங்குவதில், பெண் குழந்தைகளை வஞ்சிக்கின்றன. இதையெல்லாம் சரிசெய்யாமல், திருமண வயதை உயர்த்துவதால் மட்டும் எவ்வாறு சத்துக் குறைபாடு சரியாகும்? 21 வயதைக் கடந்த மணமான பெண்களிடமும் சத்துக் குறைபாடு அதிகமாகவே காணப்படுகிறது.

சில மோசமான விளைவுகள்

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது, பேறுகாலத் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவும். ஆனால், மருத்துவக் கட்டமைப்பு குறைபாடு, தரமான மருத்துவ வசதி கிட்டாமை போன்ற பல்வேறு காரணிகளையும் களைந்தாக வேண்டும். பெண்களின் திருமண வயது 21 வயதுக்கும் மேல் உயரும் வகையில் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் மூலம்செய்தால், அது பல மோசமான விளைவுகளை உருவாக்கும். 21 வயதுவரை பெண்களின் திருமணத்தைத் தள்ளிப்போட முடியாமல், பெற்றோர் நடத்தும் திருமணங்கள் சட்டத்துக்குப் புறம்பான திருமணமாகிவிடும். பல பெற்றோர்களும் பெண்களும் மிரட்டப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

21 வயதுக்குமுன் ஏற்படும் கர்ப்பங்கள் சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதப்படும். அதனால், பாதுகாப்பு இல்லாத கருகலைப்பு அதிகரிக்கும். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். பல்வேறு மோசமான பண்பாட்டு மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். எனவே, சட்டத்தின் மூலமாக அல்லாமல், பெண்களின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மூலம் இதைச் சாதிப்பதே நல்லது.

ஏ.ஆர்.சாந்தி

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர்.

தொடர்புக்கு: drshanthi.ar@gmail.com

SCROLL FOR NEXT