பெண் இன்று

நலமும் நமதே: பெண்கள் விளையாட இடம் உண்டா?

செய்திப்பிரிவு

சிறுவர்களும் இளைஞர்களும் மைதானங்களில் விளையாடுவதைப் பார்த்துப் பழகிய கண்களுக்குப் பெண்கள் அப்படி விளையாடும் காட்சி கானல்நீராகத்தான் தெரியும். குறிப்பிட்ட வயதிலேயே பெண்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு, வீடுகளில் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். ஆர்வம் இருக்கிற பெற்றோர்கூட உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கிறார்கள். காரணம், பொது வெளியில் பெண்கள் விளையாடுவதை ஏற்றுக்கொள்வதில் உள்ள மனத்தடைதான். ஆனால், பெண்களும் இந்த மனநிலைக்குப் பழகிவிட்டத்துதான் வேதனை.

பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் பெண்களின் விளையாட்டு ஆர்வத்தைத் தணிக்கின்றனவா என்ற கேள்விக்கு நேர்மறை பதில் கிடைக்காது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பிரத்யேக விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் மாணவிகளின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பள்ளி அளவிலேயே ஆண்களுடன் ஒரே மைதானத்தில் விளையாடுவதை மாணவி கள் விரும்புவதில்லை. சரி, மகளிர் பள்ளிகளி லாவது அவர்கள் விளையாடு கிறார்களா என்றால், பெரும்பாலான பள்ளிகளில் மைதானம் இருப்பதில்லை.

விளையாட இடமில்லை

பள்ளி, கல்லூரிகளில்தான் இந்த நிலை என்றால் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானங்களில் பெண்கள் விளையாடு கிறார்களா? இல்லை. பெண்களின் பட்டியலில் அதற்கு இடமில்லை. காரணம், தயக்கம். பலர் பார்க்க விளையாடுவதில், பெண்களுக்கு இருக்கும் இயல்பான மனத்தடையே அவர்களை விளையாட விடாமல் தடுக்கிறது. மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, பெண்கள் தங்கள் உடலையும் மனத்தையும் உறுதியுடன் வைத்திருக்க ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. ஆனால், அப்படி நடப்பதே இல்லை.

பொதுவெளியில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் எல்லாமே ஆண்கள் மட்டுமே விளையாடுகிற இடங்களாகவே இருக்கின்றன. சில இடங்களில் பெண்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதுடன் நிறுத்திக்கொள்கின்றனர். அதுவும் வயதான பெண்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பார்கள். மற்றபடி பொதுவெளியில் ஆண்கள் மத்தியில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள பெண்கள் முன்வருவதில்லை.

தயக்கம் ஏன்?

“சென்னை மாநகராட்சி சார்பில் கோபாலபுரம், புரசைவாக்கம் பகுதியில் மகளிர் உடற்யிற்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. அங்கே குறிப்பிடும்படியாகப் பெண்கள் வருவதே இல்லை. கோபாலபுரம் பகுதியில் பெண்கள் வருகை இல்லாததால், அது மூடப்பட்டது. புரசைவாக்கம் பகுதியில் அன்றாடம் ஐந்து பேருக்கும் குறைவானவர்களே வருகின்றனர். இருப்பினும் ஒரு பணியாளரை நியமித்து அன்றாடம் திறக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கென தனி விளையாட்டு அரங்கம் வேண்டும் என்றோ, உடற்பயிற்சிக் கூடம் வேண்டும் என்றோ கோரிக்கை ஏதும் பெண்களிடமிருந்து மாநகராட்சிக்கு வருவதில்லை. பெண்களின் விருப்பம் இன்றி, யாருக்கும் பயன்படாத திடலை பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்க மாநகராட்சி நிர்வாகம் விரும்பாது” என்கிற மாநகராட்சி அதிகாரிகளின் வார்த்தைகள், பெண்களுக்கும் விளையாட்டுக்கும் இடையே உள்ள தொலைவை உணர்த்துகின்றன.

இந்நிலையில் பெண்களுக்கென்று தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க வலியுறுத்தி, பிரதமருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறார் வணிக வரித்துறை ஓய்வுபெற்ற அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

“தனி விளையாட்டு மைதானம் பாலினச் சமத்துவத்துக்கு எதிரானது என்கிற பேச்செல்லாம் நடைமுறைக்கு மாறானது. குறைந்தபட்சம் மாவட்டத் தலைநகரங்களில் மட்டுமாவது, பெண்களுக்கான தனி விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தொடங்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு வெளியே, பெண்கள் விளையாட இடமே இல்லை. சமூக விடுதலை, பொருளாதார விடுதலையுடன் வலுவான உடல் ஆரோக்கியமும் பெண் சுதந்திரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. இதை வழங்குவது, மக்கள்நல அரசின் அத்தியாவசியக் கடமை” என்கிறார் அவர்.

எதற்கெடுத்தாலும் அச்சப்பட்டுக் கொண்டும் நாணப்பட்டுக்கொண்டும் இருந்தால் ஆரோக்கியம் நம்மைவிட்டு விலகிப்போய்விடும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மகன்களை விளையாட அனுமதிக்கும் பெற்றோர் மகள்களையும் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT