பெண் இன்று

போகிற போக்கில்: பொழுதும் போகுது பணமும் கிடைக்குது

செய்திப்பிரிவு

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் எந்தக் கலையையும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் சென்னையைச் சேர்ந்த ஹேமமாலினி. குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்ற பிறகு கிடைக்கிற நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட நினைத்ததன் விளைவு, இன்று அவர் கைவினைக் கலைஞர். கேட்டரிங் சர்வீஸிலும் பிஸியாக இருக்கிறார்.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே கலைகள் மீது ஆர்வம் எல்லாம் கிடையாது. அதற்கான வாய்ப்பும் அப்போ இல்லை. படம் வரையறதுக்குப் பயந்துக்கிட்டு சயின்ஸ் குரூப்பே வேணாம்னு சொல்லிட்டேன். கல்யாணம் முடிஞ்சதும் கணவரோட வேலை காரணமா வெளிநாட்டுல குடியிருந்தோம். குழந்தைங்க வளர்ந்ததும் அவங்களோட படிப்புக்காக சென்னைக்கு வந்தோம். அவங்க ஸ்கூலுக்குப் போன பிறகு நிறைய நேரம் கிடைச்சது. சும்மா இருக்கற மனம் சாத்தானோட உலைக் களம்னு சொல்லுவாங்க. அதனால நான் என்னை எப்பவும் பிஸியா வச்சுக்கணும்னு நினைச்சேன். ஃபேஷன் நகைகள் செய்தா என்னன்னு தோணுச்சு. உடனே அதை செயல்படுத்திட்டேன். முதல்ல ஹேங்கிங்ஸ், ஹூக் டிராப்ஸ், நெக்லஸ் ஆகியவற்றைச் செய்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்படியே அடுத்தடுத்த கலைகளுக்கு என் எல்லையை விஸ்தரிச்சேன்” என்று சொல்லும் ஹேமா, நுணுக்கமான கலைகளை மட்டும் முறைப்படி பயின்றிருக்கிறார். மற்ற கலைகள் எல்லாம் கண் பார்க்க, கை செய்ததுதான் என்கிறார்.

வழிகாட்டிய நிகழ்ச்சிகள்

“டிவியில் வருகிற கைவினைக் கலை தொடர்பான எந்த நிகழ்ச்சியையும் தவறவிடுவதே இல்லை. அதில் பார்க்கிற விஷயங்களுடன் என் கற்பனையையும் கலந்து புதுவிதமா முயற்சி செய்து பார்ப்பேன்” என்று சொல்லும் இவர், டேபிள் மேட், வால் ஹேங்கிங்ஸ், லெட்டர் ஹோல்டர், ஃபர் டாய்ஸ், ஆரத்தித் தட்டு, சணல் பைகள், கிரிஸ்டல் பூக்கள், ஃபேஷன் நகைகள் எனப் பலவற்றிலும் தடம் பதிக்கிறார்.

“என்னோட இந்த ஆர்வம் என் குழந்தைகளுக்கும் பரவிடுச்சு. அவங்களும் டிராயிங் வகுப்புக்குப் போய் அடிப்படைகளை மட்டும் கத்துக்கிட்டாங்க. டைல்ஸ் பெயிண்டிங்க், எம்போஸ் பெயிண்டிங்னு அவங்க அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யறாங்க. கோடை விடுமுறையில சம்மர் கேம்ப் போக வேண்டிய அவசியமே அவங்களுக்கு இல்லை. எனக்கு உதவி செய்யறதே அவங்களுக்குப் புதுவிதமான கேம்ப்போல இருக்கு” என்று சொல்லும் ஹேமா, இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தன் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது என்கிறார்.

“நான் இப்படி எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருப்பதால் பொழுதும் போகிறது, பணமும் கிடைக்கிறது, மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?” என்று கேட்கிறார் ஹேமா. அதை ஆமோதிக்கின்றன அவருடைய வீட்டுச் சுவரை அலங்கரித்திருக்கும் ஓவியங்கள்.

படங்கள்: பிருந்தா

SCROLL FOR NEXT