பெண் இன்று

கரோனா பாடம்: மனத்தில் ஒலிக்கும் குரல்

செய்திப்பிரிவு

ஊரடங்குக் காலத்தில் எந்நேரமும் மனத்தின் ஆழத்தில் இருந்து பரிதாபமான அலறல் ஒன்று எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. ஓர் அவலக் குரல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது. குடும்பத்தைக் கவனிப்பது பெண்ணுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது முழு மனநிறைவைத் தரவில்லையே. தந்திருந்தால் மனம் நிம்மதி அடைந்திருக்குமே. இந்த அலறல் சத்தமும் நின்றிருக்குமே!

நாள்கள் செல்லச் செல்லத்தான் குடும்பத்தை மட்டுமே நடத்துவது என்பது ஒருவிதத் தன்னலம் என்று உள்ளத்துக்கு உறைத்தது. தன்னலம் என்றைக்குத் தன்னிறைவைத் தந்திருக்கிறது? பிறகுதான் கவனித்தேன். என்னைச் சுற்றிப் பலர், பலவிதத் துன்பச் சூழல்களில் உழன்று கொண்டிருக்கின்றனர். நான் நினைத்தால் ஓரளவாவது அவர்களது துயரத்தைப் போக்க முடியும். களத்தில் குதித்தேன். என் மனத்துக்குப் பட்ட சின்னச்சின்ன உதவிகளையெல்லாம் செய்தேன். இப்போது அந்தப் பரிதாபமான அலறல் சத்தம், சற்றே குறைந்திருக்கிறதே தவிர முற்றிலும் ஒழிந்தபாடில்லை.

ஏதோ ஒருவித இறுக்கம் என்னை அலைக் கழித்துக்கொண்டே இருந்தது. வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது. ஒருவிதமான ஆற்றாமை, எரிச்சல். மூச்சுவிடக்கூடச் சிரமமாக இருந்தது. நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தபோது, எனக்கே அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு நாள் வலுக்கட்டாயமாகச் சில வேலைகளை உதறினேன். மஞ்சள், சிவப்பு, நீலம் என பல வண்ணக் காகிதங்களில் பூக்கள் செய்தேன்.

எனக்குப் பிடித்த வேலையை நான் ரசித்து செய்தபோது, மன பாரம் சரசரவென்ற வேகத்தில் குறைவதை உணர முடிந்தது. எளிதாகச் சுவாசிக்க முடிந்தது. அப்புறமென்ன? அடுத்துவந்த நாள்களில் எனக்கென்று பல நிமிடங்களைச் சேகரித்தேன். அந்த நேரம் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் மாறியது. கம்பளி நூல் கரடியானது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அலறல் அறவே நின்றுபோனது. மனத்தில் ஆற்றாமை இல்லை, எரிச்சல் இல்லை. அந்த இடத்தில் அமைதி குடிகொண்டுவிட்டது.

இதுதான் கரோனா கற்றுத்தந்த பாடம். பெண்கள் கட்டாயமாக அவர்களுக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்ததை அவர்களே செய்யாவிட்டால், வேறு யார் செய்ய முடியும்? பெண்கள் அவர்களுக்காகவும் வாழ வேண்டும். அப்போதுதான் ஆற்றாமை இருக்காது, எரிச்சல் இருக்காது. நான் எல்லோருக்கும் பார்த்துப்பார்த்துச் செய்கிறேன். எனக்குச் செய்ய யாருமில்லையே என்ற சுய பச்சாதாபம் எழாது. வாழ்க்கையை வாழாமல் போய் விட்டோமே என்ற புலம்பல் வரவே வராது.

- ஜே. லூர்து, மதுரை.

SCROLL FOR NEXT