குடும்ப அமைப்பு முறை, ஆணாதிக்க - சமூக அழுத்தங்கள் போன்றவை காரணமாகப் பெண்கள் தங்களுடைய லட்சியங்களை அடைவதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது வித்யா பாலன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சகுந்தலா தேவி’ இந்தித் திரைப்படம்.
ஆரியபட்டர், ராமானுஜர் போன்ற இந்திய கணித மேதைகளின் வரிசையில் 19-ம் நூற்றாண்டில் ‘மனித கணினி’ என்றழைக்கப்பட்டவர் கணித மேதை சகுந்தலா தேவி. பள்ளிக்குக்கூடம் செல்லாத இவர் தன் அசாத்திய கணிதத் திறமையால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் நடிகை வித்யா பாலன், சானியா மல்ஹோத்ரா ஆகியோரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘சகுந்தலா தேவி’.
அடக்குமுறையைத் தகர்த்தெறிந்தவர்
கணித மேதை சகுந்தலா தேவியின் மகள் அனுபமாவின் நினைவுக் குறிப்பிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோச்சியிருந்த காலத்தில் தனிப் பெண்ணாகத் தன் கணிதத் திறமையால் உலகை வலம் வந்தவர் சகுந்தலா தேவி. பெண் சுதந்திரம், பாலினப் பாகுபாடு, ஆண் - பெண் சமத்துவம், குடும்ப அமைப்பு முறை, தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை என இன்றைக்கு முக்கிய விவாதப் பொருளாக உள்ளவற்றைத் தான் வாழ்ந்த காலத்திலேயே தகர்த்தெறிந்து வெற்றிகண்டவர் சகுந்தலா தேவி. அவர் கடந்துவந்தவற்றை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர்.
இளமைக் காலம் முதல் முதுமைக் காலம்வரை அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கணிதத்தால் அடையாளம் காணப்படும் சகுந்தலா, பெண் என்ற காரணத்துக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. பாலின பேதங்களைக் கேள்விக்குட்படுத்தும் அவர், ஆண்களைச் சார்ந்திருக்கும் வாழ்க்கையை எதிர்க்கிறார். திருமணத்துக்குப் பிறகான குடும்ப அமைப்பு, குழந்தை என பிணைக்கப்படுகிறவர் மீண்டும் தன் கணிதத் திறமையை நிரூபிக்க நினைக்கிறார். இதற்குக் கணவர் பரிதோஷ் பானர்ஜி உறுதுணையாக உள்ளார். பின்னர் இரண்டு எண்களைப் பெருக்கி (7,686,369,774,870 × 2,465,099,745,779) 28 விநாடிகளிலேயே சரியான பதிலளித்து (18,947,668,177,995,426,462,773,730) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்.
வெற்றியும் வாழ்க்கையும் ஒருமுறைதான்
மேடை நிகழ்ச்சிகளில் புதிர்களுக்கான விடையை மட்டும் அளிக்காமல் ‘தாய்’ என்ற வட்டத்துக்குள் பெண்கள் அடைக்கப்படுவதை நகைச்சுவையுடன் கேலியாகச் சொல்கிறார். அதேநேரம் தன் மகளுடனான பிணைப்பை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார். இதுவே சகுந்தலா தேவியை அவருடைய மகளிடமிருந்து விலகி நிற்கச் செய்கிறது. மகள் அனுபமாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சானியா மல்ஹோத்ராவுக்கும் வித்யா பாலனுக்கும் இடையிலான உணர்ச்சிமிகு உரையாடல்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன.
வெற்றிகளுக்குப் பின்னால் ஓடும் தன் அம்மாவின் மனநிலையைத் தான் தாயாகிய பின்னர்தான் அனுபமா புரிந்துகொள்கிறார். சகுந்தலா தேவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வித்யாபாலனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் மிக இயல்பாக உள்ளன.
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தைப் பெண்கள் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும், தங்களுடைய கனவுகளை அடைய சிறு சறுக்கல்களைச் சந்திக்க நேர்ந்தாலும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதை அழுத்தமான திரைக்கதை மூலமாக உணர்த்துகிறது 'சகுந்தலா தேவி' திரைப்படம்.