பெண் இன்று

உலக தாய்ப்பால் வாரம் ஆக.1-7; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால்

எல்.ரேணுகா தேவி

கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அருமருந்து தாய்ப்பால்தான்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவது அவசியம். தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்

கரோனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில் தாய்ப்பாலின் அவசியத்தை முன்பைவிட அதிகமாக வலியுறுத்த வேண்டியுள்ளது. நோய்த் தடுப்பாற்றல் குறித்து அதிகம் பேசப்படும் இச்சூழலில் தாய்ப்பாலின் மகத்துவம் போற்றத்தக்கது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அதற்கான வாய்ப்பும் வசதியும் கிடைக்கச் செய்வதற்குப் பக்கபலமாகச் சமூகம் இருக்க வேண்டும். அவர்கள் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் பொதுவெளிகளிலும் பாலூட்டுவதற்கான சூழல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கரோனா பாதித்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்விக்கு, கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மிகத் தெளிவாகப் பதில் அளித்துள்ளது. அதேநேரம் குழந்தைக்குத் தொற்று ஏற்படாத வகையில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியிருந்தாலும் அல்லது கரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகம் இருந்தாலும் சில வழிமுறைகளைப் பின்பற்றி குழந்தைக்குப் பாலூட்டுவதைத் தாய்மார்கள் தொடரலாம். பாலூட்டுவதற்கு முன் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

தும்மும்போதும், சளியைச் சுத்தம் செய்யவும் டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்துவதோடு அதை உடனடியாக அகற்றிட வேண்டும். சானிடைசரால் கைகளைச் சுத்தப்படுத்திய பிறகு குழந்தையைத் தூக்கி தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். வாய்ப்புள்ள அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிவதையும், குழந்தையைத் தூக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என வழிகாட்டுகிறது உலக சுகாதார நிறுவனம்.

முகக்கவசம் இல்லையென்றாலும் பாலூட்டுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எந்தச் சூழலிலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டியதில்லை. கரோனாவை விஞ்சும் வகையிலான ஆற்றல் தாய்ப்பாலில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.

SCROLL FOR NEXT