என் மகளுக்கு 2019 நவம்பரில் குறைப் பிரசவத்தில் (30 வாரங்கள்) மகள் பிறந்தாள். குழந்தையின் எடை 1.3 கிலோ. பச்சிளங்குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நவம்பர் மாதம் முழுவதும் அவள் இருந்தாள். குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக நாள்தோறும் மூன்று முறை மட்டுமே என் மகள் அங்கே செல்ல வேண்டும்.
இந்த மாதிரி எந்தச் சிக்கலையும் அதுவரை சந்தித்ததில்லை என்பதால் நானும் என் கணவரும் திக்குமுக்காடிப்போனோம். சமாளிக்க முடியாமல் மத்திய அரசுப் பணியில் நல்ல பதவியில் இருந்தும் ஆறு மாதப் பணிக்காலம் இருக்கும்போதே விருப்ப ஓய்வு எடுக்க நேரிட்டது. 2020 மார்ச் மாதம் குழந்தைக்கு எல்லாவிதப் பரிசோதனைகளும் முடிந்த நிலையில் ஆறு மாதம் கழித்து வந்தால் போதும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அப்போது கரோனா பரவத் தொடங்கி விட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே சுய தனிமை குறித்தும் சுகாதாரமாக இருப்பது குறித்தும் எங்கள் பேத்தி எங்களுக்குக் கற்றுத்தந்துவிட்டிருந்தாள். அதனால், குழந்தையோடு வீட்டுக்கு வந்த முதலே நாங்கள் ‘வீடடங்கு’ போட்டுக்கொண்டோம். குழந்தைக்கு எந்தவிதத் தொற்றும் வரக் கூடாது என்பதால் யாரையும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டோம்.
நாங்களும் அவசியத் தேவை தவிர வேறு எதற்கும் வெளியே செல்லவில்லை. மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் 93 வயதான என் தந்தையைக்கூடப் பார்க்கச் செல்லவில்லை. நாங்களும் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதால் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட்டோ சானிடைசர் தடவிக்கொண்டோதான் குழந்தையைத் தொடுவோம். இதை டிசம்பர் மாதத்திலிருந்தே பின்பற்றிவருவதால் புதிதாகத் தோன்றவில்லை.
பேத்தியைப் பார்த்துக்கொள்ளும் கவனத்தோடுதான் மகளையும் பார்த்துக்கொண்டோம். என் மகளுக்கு மனச்சோர்வும் உடல் சோர்வும் வந்துவிடக் கூடாதென்று அவளுடன் அதிக நேரம் செலவிடுகிறோம். நான் பணியில் இருந்த காலத்தில் என்னால் வீட்டைச் சரிவர கவனித்துக்கொள்ள முடியவில்லை. இப்போது கிடைக்கும் சிறிது நேரத்தையும் வீட்டுப் பராமரிப்புக்கு ஒதுக்கிவிடுகிறேன்.
நிறையச் செடிகளை வளர்க்கிறோம். இப்போது எங்கள் பேத்தி நன்றாக இருக்கிறாள். ஊரடங்கு எப்படி இருக்கும் என்பதை அதை அமல்படுத்துவதற்கு முன்பே எங்கள் பேத்தி கற்றுக்கொடுத்துவிட்டாள். அதனால், ஊரடங்கை நல்லவிதமாகவே எதிர்கொண்டுவருகிறோம். என் மகளும் பேத்தியும் அமெரிக்காவில் இருக்கும் எங்கள் மாப்பிள்ளையுடன் சேரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.
| நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள். |
- அமுதா கிருபாநிதி, சென்னை