இன்று கரோனாவைத் தவிர வேறெதைப் பற்றியும் யாரிடமும் பேசத் தோன்றுவதில்லை. மூன்று மாதங்களாக நீடிக்கும் கரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சிக்கலுடன் மனப் பதற்றத்தையும் அச்சத்தையும் சேர்ந்தே ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்க அரசு செய்துவரும் செயல்பாடுகளில் மாற்றுக்கருத்து இருக்கும்போதும், நம்மிடையே சிலரது பொறுப்பற்ற செயலை நினைத்தால் கடும் கோபம் வருகிறது.
கரோனா வைரஸ் பரவலின் தீவிரம் குறித்துப் பலரும் அறிந்திருக்கும் நிலையிலும் கரோனாவால் இறக்கிறவர் களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலை யிலும்கூட ஊரடங்கை வெறும் சடங்காகவே நம்மில் பலர் கடைப்பிடிக்கிறோம். இதை விடுமுறைக் காலம்போல் கருதி நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளுக்குச் செல்வதும் விருந்து உண்பதுமாக இருக்கின்றனர்.
திருமண நிகழ்வில் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்கின்றனர். இன்னும் சிலரோ திருமணத்தைக் கோயிலில் நடத்திவிட்டு, வீட்டில் வரவேற்பு நிகழ்வை வைக்கின்றனர். ஊரில் உள்ள பாதிப் பேர் அந்த வரவேற்பில் பங்கேற்கின்றனர். அப்படியொரு திருமண நிகழ்வில் மாப்பிள்ளைக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையும் செய்தியில் படித்திருப்போம். அதன் பிறகும் இதெல்லாம் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்த நெருக்கடியான காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையா? குழந்தைகள் அடம்பிடித்தாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் விளையக்கூடிய பாதகங்களை எடுத்துச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்தானே. எங்களுக்குத் தெரிந்த ஒருவரது வீட்டில் குழந்தைக்குப் பிறந்தநாள் கொண்டாடினார்கள். அதில் பங்கேற்ற நால்வருக்கு கரோனா தொற்று இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது குடும்பமாக அமர்ந்து கவலைப் படுவதால் என்ன பலன்? பொது இடத்தில் கிரிக்கெட் விளையாடிய ஏழு சிறுவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகும், சிலர் தங்கள் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புகின்றனர்.
இறப்பு வீட்டிலும் கூடுமானவரை கூட்டத் தைத் தவிர்ப்பது நல்லது. சென்னையில் உடல்நலக் குறைவால் இறந்தவரை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற பிறகே, அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததாக ஒரு செய்தியைப் படித்தேன். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 400 பேரை அடையாளம் கண்டறிந்து அவர்களில் 154 பேருக்குப் பரிசோதனை மாதிரிகளை எடுத்திருக்கிறார்களாம். இவையெல்லாம் நம் மருத்துவப் பணியாளர்களுக்கும் அரசுக்கும் கூடுதல் சுமைதானே. இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுதான் ஆக வேண்டும் என்றால் மொத்தமாகச் செல்லாமல் நான்கைந்து பேராக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் சென்றிருந்தால், இதைத் தடுத்திருக்கலாமே.
மண்டலங்களுக்குள் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் என்று அரசு அறிவுறுத்தினாலும் பலரும் அதைச் சரியான வகையில் கடைப்பிடிப்பதில்லை. நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து உள்ளூர் சாலைகள் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். குறிப்பாக அதிகாலை நேரத்திலும் இரவிலும் சென்று விடுகின்றனர். மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்திப் பரிசோதிக்கும் அலுவலர் கள், நம் பாதுகாப்பைக் கருதித்தான் செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் இதுபோன்ற பயணங்கள்.
இன்னும் சிலரோ மருத்துவர்கள் அறிவுறுத்தும் எதுவும் தமக்கில்லை என்று நினைத்து மெத்தனத்துடன் செயல்படு கின்றனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தபோதும் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதில்லை. காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக்கொண்டு, கஷாயம் வைத்துக் குடித்துவிடுகின்றனர். அவர்களுக்கு கரோனா தொற்று இல்லாத பட்சத்தில் இது தவறல்ல. ஆனால், அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால், அது வீட்டில் உள்ளவர்களையும் அவர்கள் சந்திக்கிற நபர்களையும் சேர்த்துப் பாதிக்கும்தானே. அனைத்தையும் அரசு பார்த்துக்கொள்ளும் என்று நினைக் காமல் மக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டால்தானே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்க முடியும்?
| நீங்களும் சொல்லுங்கேளன்... தோழிகேள, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்கைளப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம்வைர எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் |
- தேவி, சென்னை.