பெண் இன்று

பெண்ணால் முடியும்: கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தலைவிகள்

செய்திப்பிரிவு

ப்ரதிமா

பெண் அடையக்கூடிய அதிகபட்ச உயரம் என்பது ஆண் செய்கிற அனைத்தையும் செய்வதல்ல; ஆணால் முடியாததைக்கூடச் சாதித்துக் காட்டுவது. கரோனா பேரிடர் காலத்தில் அதை மெய்ப்பித்திருக்கிறார்கள் பெண் தலைவிகள் சிலர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவை கரோனா வைரஸ் பரவலில் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் ஆண்களால் ஆளப்படுபவை. அதேநேரம் பெண்களால் ஆளப்படும் நியூசிலாந்து, தைவான், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு.

எதேச்சாதிகாரம், தன் முனைப்பு, அறிவியல் மீது நம்பிக்கையின்மை, மனிதநேயமற்ற செயல்பாடுகள் போன்றவை இந்த ஆண் தலைவர்களிடம் உள்ள பொதுவான இயல்புகள். அதற்காகப் பெண்கள் அனைவரும் தாய்மை உணர்வோடும் பொங்கிப் பெருகும் மனிதநேயத்துடனும் பிறந்துவிடவில்லை. மாறாக, சூழலுக்கு ஏற்ற வகையில் துரிதமாகச் செயல்படுவதுடன் எந்தச் சிக்கல் குறித்தும் பல்வேறு கோணங்களிலும் அவர்கள் சிந்திக்கின்றனர். பதற்றமான பொழுதுகளிலும் நிதானமாக முடிவெடுக்கின்றனர்.

மனிதநேயமும் அறிவியல் அறிவும்

பதவி என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பீடமல்ல என்பதையும் இந்தப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆதர்ன் எளிய உடையில் தோன்றி மக்களிடம் பேசியிருக்கிறார். இறுக்கமான முகத்துடன் காட்சியளிக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், தான் முனைவர் பட்டம் பெற்ற குவாண்டம் வேதியியலின் துணையோடு தன் நாட்டு மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த அறிவியல் தகவல்களைப் பொறுமையாகச் சொல்லியிருக்கிறார். பின்லாந்து பிரதமர் சன்னா மரின் வயதுக்கு மீறிய பக்குவத்துடன் செயல்படுகிறார். அதிகபட்ச பரிசோதனையும் தொற்றாளர்களின் தடமறிந்து தனிமைப்படுத்துவதும்தான் கரோனாவி லிருந்து மீள வழி எனத் தன் நாட்டு மக்களுக்கு அறிவியலை எளிய மொழியில் ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் கூறியிருக்கிறார்.

இந்த உலகப் பெண் தலைவர்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கேரளத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெற்றிருக்கிறார். இந்தியாவின் முதல் மூன்று கரோனா தொற்றுகள் கேரளத்தில்தான் கண்டறியப்பட்டன. ஆனால், சிறப்பான நிர்வாகத்தாலும் துரிதமான செயல்பாடுகளாலும் இரண்டு இலக்கங்களுக்கு மேல் இறப்பு எண்ணிக்கை கூடிவிடாமல் பார்த்துக்கொண்டதில் ஷைலஜாவுக்குப் பெரும்பங்கு உண்டு.

கரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்குத் தேவைப்படுவது வார்த்தை ஜாலமல்ல. பெருந்தொற்றிலிருந்து அனைவரும் காக்கப்படுவோம் என்ற நம்பிக்கையும் எது நடந்தாலும் அரசு நம்மைக் கைவிடாது என்ற உத்தரவாதமும்தாம். ஆண் தலை வர்கள் கைகொள்ளத்தவறிய இவற்றைக் கச்சிதமாகச் செயல்படுத்திவருவதால்தான் பெண் தலைவர்கள் வழிநடத்தும் நாடுகள் மருந்துகளோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையிலும் கரோனாவை வெல்வதில் முன்னிலை வகிக்கின்றன.

SCROLL FOR NEXT