எனக்கு 26 வயது. நான் கருவுற்று மூன்று மாதங்களாகிறது. எனக்குப் புளிப்புச் சுவையுடைய உணவைச் சாப்பிட ஆசையாக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் சாப்பிடக் கூடாது, சூடான உணவையும் மாவுப் பொருட்களையும் தவிர்க்கும்படி என் மாமியார் சொல்கிறார். ஆனால் டாக்டரோ அனைத்தையும் சாப்பிடலாம் என்கிறார். இந்த மாதிரி சமயத்தில் எந்த உணவைச் சாப்பிடுவது?
- தமிழரசி, அரக்கோணம்.
திவ்யா கிருஷ்ணமூர்த்தி, உணவு ஆலோசகர், சத்யபாமா பல்கலைக்கழகம், பொது மருத்துவமனை.
புளிப்புச் சுவைக்காக மாங்காய் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அதை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது அசிடிட்டி உருவாகும். அதனால், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் (தர்பூசணி, மாதுளை, ஆப்பிள் சாறு), பச்சைக் காய்கறிகள் (வெள்ளரி, கீரை வகைகள்) போன்றவற்றையும் சமமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இது புளிப்புச் சுவை உருவாகுவதை ஓரளவு கட்டுப்படுத்தும்.
மாவுப்பொருட்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் அழற்சி ஏற்படும். அதனால், அரிசி, கோதுமை போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு தானியங்கள், பருப்பு வகையை அதிகமாக சாப்பிடலாம். முட்டையை அவித்துச் சாப்பிடலாம். அசைவ உணவை வறுத்துச் சாப்பிடாமல் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். அத்துடன், பால் பொருட்களுடன் பேரிச்சை, உலர் திராட்சை, அக்ரூட், பாதாம் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய உணவைச் சாப்பிடுவதன்மூலம் உங்களுக்கு சரிவிகித வைட்டமின்களும், தாதுக்களும் கிடைக்கும்.
நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான்கு மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் ஒருவன் அறிமுகமானான். பொதுவான விஷயங்களைப் பற்றி இருவரும் ‘சாட்’ செய்வதில் தொடங்கியது எங்கள் நட்பு. இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் எங்கள் இருவருக்கும் இடையே ஆழமான புரிதல் உருவாகியிருக்கிறது. இப்போது வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னால் என் பேஸ்புக் நண்பனை மறக்க முடியவில்லை. அதனாலேயே திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறேன். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன். ஆலோசனை சொல்லுங்களேன்.
- பவித்ரா, சென்னை.
டாக்டர் அபிலாஷா, உளவியல் நிபுணர், சென்னை.
பேஸ்புக்கை உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கான இடமாக நிச்சயம் கருதியிருக்க மாட்டீர்கள். அங்கே, புதிதாக ஒருவருடன் ‘சாட்’ செய்யும்போது அதை நட்பு ரீதியான ஒரு செய்கையாக நினைத்துத்தான் நீங்கள் செய்திருப்பீர்கள். அந்த நட்பு ரீதியான செய்கை தொடரவே, அந்த நபர் மீது உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. இந்த ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அந்த நபருடன் இதுவரை நீங்கள் நேரடியாகப் பழகியதில்லை. பேஸ்புக்கில் அவர் உங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை வைத்தே உங்களுக்கு அவரைத் தெரியும். அதனால், உங்கள் பேஸ்புக் நண்பரின் நம்பகத்தன்மை உங்களுடைய முதல் பிரச்சினை.
உண்மையான அடையாளங் களையும், குணாதிசயங்களையும் மறைத்துக்கூட அவர் உங்களுடன் போலியாகப் பழகியிருக்கலாம். அதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. அதனால், இந்த நபரைக் காரணமாக வைத்து கண்மூடித்தனமாக உங்கள் வீட்டில் பார்க்கும் வரன்களைத் தட்டிக்கழிப்பது சரியானதல்ல. இப்படியே தொடர்ந்தால், வீட்டில் உங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை அது உருவாக்கும்.
அப்படியில்லாவிட்டால், அந்த பேஸ்புக் நண்பரை நேரடியாகச் சந்தித்துப் பேசுங்கள். அவர் சரியான நபர்தானா என்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு, உங்கள் இருவருக்கும் சரிப்பட்டுவருமா, உங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே சரியான புரிதல் ஏற்படுமா போன்ற நடைமுறை விஷயங்களைப் பேசுங்கள். பேஸ்புக்கில் இப்போது நட்புச் சுரண்டல், அன்புச் சுரண்டல் போன்ற விஷயங்கள் பெருகிவருகின்றன. அதனால், பேஸ்புக் செயல்பாடுகளை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.