பெண் இன்று

கேளாய் பெண்ணே: எதிர்த்துப் பேசும் மகனை என்ன செய்வது?

செய்திப்பிரிவு

எனக்கு அடிக்கடி லோ பிரஷர் ஏற்படுகிறது. சில சமயம் சாப்பிட்டதும் மயக்கம் வருவது போல இருக்கிறது. அதற்கு என்ன காரணம்? நான் எந்த மாதிரி உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்?

- தேவி, திருச்சி.

கோமதி, ஊட்டச்சத்து நிபுணர், சென்னை

குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். எடை குறைவாக இருந்தாலும் குறை ரத்த அழுத்தம் ஏற்படலாம். தவிர மூன்று விதமான குறை ரத்த அழுத்தம் உண்டு. மருந்துகளால் குணப்படுத்தக்கூடிய வகையை உணவால் மட்டுமே சரிப்படுத்த முடியாது என்பதால் மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

உயரத்துக்கு ஏற்ற சரியான எடையுடன் இருப்பவர்கள், சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால் குறை ரத்த அழுத்தத்தை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். அதிகமாக அரிசி உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவைச் சாப்பிடலாம். அதிக எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும். காலையில் இட்லிக்குப் பொடியைத் தவிர்த்து, சாம்பார் சாப்பிடலாம். மதிய உணவாக ஒரு கப் சாதத்துடன் பருப்பு, நெய், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கிழங்கு வகைகள், கீரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் சாம்பார் சாப்பிட்டால் மறுநாள் மோர்க்குழம்பு, காரக் குழம்பு என்று மாற்றிச் சாப்பிடலாம். காரமும் புளிப்பும் குறைவாகச் சாப்பிடவேண்டும். அவற்றுடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவதும் நல்லது.

என் மகனுக்குப் பதினோறு வயதாகிறது. இத்தனை நாட்களாக இருக்கிற இடம் தெரியாமல் நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டிருந்தவன், இப்போதெல்லாம் எதிர்த்துப் பேசுகிறான். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறான். வேலைக்கும் போய்க்கொண்டு இவனைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்கிறது. என்ன செய்வது?

- சுதா, சென்னை.

டாக்டர் தேவகி, மனநல ஆலோசகர், சென்னை.

நீங்கள் மட்டுமல்ல சுதா, பெரும்பாலான தாய்மார்கள் எதிர்கொள்கிற பிரச்சினை இது. பொதுவான பன்னிரெண்டு வயது முதல் வளரிளம் பருவம் தொடங்கும். தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால் பெண் குழந்தைகள் சிறிய வயதிலேயே பருவம் அடைவதைப் போல, ஆண் குழந்தைகளுக்கும் பத்து அல்லது பதினோறு வயதிலேயே பருவ மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. உடலால் குழந்தையாக இருந்தாலும் மனதால் பெரியவர்களைப் போல நடந்துகொள்வார்கள். இந்தப் பருவத்தைத்தான் ரெண்டுங்கெட்டான் வயது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்த வயது குழந்தைகளிடம் கோபம், தேவையற்ற எரிச்சல், எதிர்த்துப் பேசுதல் போன்றவை ஏற்படுவது இயல்பு. அதை நாம் தான் பொறுமையாகக் கையாள வேண்டும். கோபப்பட்டு பேசும் குழந்தையிடம் நாமும் கோபப்படுவதாலோ, அடிப்பதாலோ எந்த மாற்றமும் நிகழாது. அவன் அமைதியாக இருக்கும் நேரங்களில் அவனிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவனது குறை அல்லது தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள். வளர்ந்த பிறகு பெண் குழந்தைகள் அம்மாவிடம் நெருக்கமாக இருப்பதைப் போல ஆண் குழந்தைகள் அப்பாவின் நெருக்கத்தை நாடுவது இயல்பு. அதனால் உங்கள் கணவரின் துணையோடு மகனுடைய செயல்பாடுகளை அனுகுங்கள்.

அவன் அளவுக்கதிகமாகக் கோபப்படுவதாக நினைத்தால் அவனது கோபத்தைக் குறைக்க யோகா, தியானம் போன்ற வகுப்புகளில் சேர்த்துவிடுங்கள். சில சமயம் இந்த வயதில் கூடா நட்பு ஏற்படலாம். அதன் தாக்கமாகவும் இந்த மாறுதல்கள் ஏற்படலாம். அதானல் மகனின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள்.

SCROLL FOR NEXT