பெண் இன்று

இப்போது என்ன செய்கிறேன்?: பாடலுடன் உதவியும் உண்டு

யுகன்

என்னைப் போன்ற இசைக் கலைஞர்களுக்கு எவ்வளவு நேரம் கிடைத்தாலும் புதிய புதிய பாடல்களைப் பாடிப் பார்ப்பது, ஏற்கெனவே பாடிவரும் பாடல்களில் பாடும் தரத்தை இன்னமும் மேம்படுத்துவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதற்கே சரியாக இருக்கும். அத்துடன் பொருட்களைப் பராமரிப்பது உட்பட வீட்டு வேலைகளைச் செய்வதிலேயே நேரம் கடந்துவிடுகிறது.

இவற்றைத் தவிர, இளம் கர்னாடக இசைக் கலைஞர்களுக்கும் இசையில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் பாரம்பரியமான இசை வடிவத்தில் பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். கர்னாடக இசை குறித்த புரிதல்களை மேலும் விரிவடையச் செய்வதற்காக என்னுடைய பெயரில் உருவாக்கியிருக்கும் யூடியூப் தளத்தில் கர்னாடக இசையின் சாரத்தைப் பற்றிய காணொலிகளை வெளியி்ட்டு வருகிறேன். என்னுடைய ரசிகர்கள் பலர் ஐரோப்பாவிலும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் ஆங்கிலத்தில் இந்தப் பதிவை மேற்கொண்டுவருகிறேன்.

‘கர்னாட்டிக் ஜர்னி’ என்னும் தலைப்பில் தொடர்ந்து வெளிவரும் காணொலிகளில் கர்னாடக இசையில் ஸ்ருதியில் தொடங்கி ஆலாபனை, நிரவல் போன்ற பல உத்திகளின் முக்கியத்துவங்களும் அதைப் பற்றிய விரிவான அணுகுமுறையுடன் கூடிய செயல்வடிவங்களும் விளக்கப்படுகின்றன. இப்படியொரு விஷயத்தை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சங்கீதம் படிக்கும் மாணவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த கரோனா ஊரடங்கில் அதை நான் செயல்படுத்திவருகிறேன்.

இதைத் தவிர, எனக்கு நன்கு அறிமுகமான முதியவர்களிடம் தினமும் பேசிவருகிறேன். அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை நிறைவேற்றித் தருகிறேன். சக இசைக் கலைஞர் நண்பர்கள் மூலமாக, உதவி தேவைப்படும் நலிந்த இசைக் கலைஞர்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவிவருகிறோம்.

SCROLL FOR NEXT