பெண் இன்று

முகங்கள்: ஆரோக்கியத்தால் பெருகும் வருமானம்

செய்திப்பிரிவு

எல்.ரேணுகாதேவி

ஆரோக்கிய உணவெல்லாம் பாட்டி காலத்துடனே போய்விட்டது எனப் பெருமூச்சுவிடுபவர்களுக்கு ஜென்சிலின் வினோத் ஆச்சரியம் தருகிறார். இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட 180 விதமான உணவுப் பொருட்களை ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அளவுக்கு இவர் விற்பனை செய்துவருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2,500 ரூபாய் முதலீட்டில் ‘ஃபார்ம் டூ ஹோம் - ஒரு அம்மாவின் வாக்குறுதி’ என்ற பெயரிலான நிறுவனத்தை வீட்டிலிருந்தபடியே ஜென்சிலின் தொடங்கினார். அது இன்றைக்குத் தமிழகம் மட்டு மல்லாமல், வெளி நாட்டிலும் வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

அம்மா போட்டுத்தந்த பாதை

கன்னியாகுமரியைப் பூர்விகமாகக் கொண்ட ஜென்சிலின், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு, தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்தவர். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவர், திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டுவிட்டுக் கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

பொதுவாகவே, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க விரும்பாத ஜென்சிலின், தன்னுடைய குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவை வீட்டிலேயே தயாரித்துக்கொடுத்தார். குழந்தைக்குத் தரும் கஞ்சி மாவைக் கடைகளில் வாங்காமல் நேந்திரன்பழம், சிவப்பரிசி, கேழ்வரகு ஆகியவற்றைக் காயவைத்து மாவாக அரைத்துக்கொடுத்தார். சிறுதானியங் களில் தின்பண்டங்களைத் தயாரித்துக்கொடுத்தார்.

“நான் தயாரிக்கும் உணவு வகை எல்லாமே, ஒரு காலத்தில் நம் வீடுகளில் செய்யப்பட்டவையே. ஆனால், காலப்போக்கில் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், துரித உணவின் மீது நம் கவனம் திரும்பிவிட்டது. எனக்குச் சமையல் குறிப்புகளைக் கற்றுத்தந்தவர் என் அம்மா குளோரி. நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோதே, சமையல் செய்யக் கற்றுக்கொண்டேன்.

சிறுதானியங்களில் நூடுல்ஸ், கஞ்சி, தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் என ஏராளமானவற்றை அம்மா தயாரித்துக்கொடுப்பார். என் தாத்தா நாட்டுவைத்தியர் என்பதால், எங்கள் வீட்டில் எப்போதும் பாரம்பரிய உணவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவும் குளிர்பானங்களும் பிடிக்காது. அதனால்தான் என் குழந்தைகளுக்கும் வேதிப்பொருட்கள் கலப்பில்லாத உணவை தயாரித்துக்கொடுக்கத் தொடங்கினேன்” என்கிறார் ஜென்சிலின்.

23-ம் முறை கிடைத்த வெற்றி

தொடக்கத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக உணவு வகைகளைச் செய்யத் தொடங்கிய ஜென்சிலின், பின்னர் அதையே தொழிலாகத் தொடங்க முடிவெடுத்தார். ‘ஃபார்ம் டூ ஹோம் - ஒரு அம்மாவின் வாக்குறுதி’ என்ற நிறுவனத்தை 2018-ல் தொடங்கினார். குழந்தைகளுக்கான கஞ்சி வகைகள், சத்துமாவு போன்றவற்றுடன் விற்பனையைத் தொடங்கினார். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளக் குழுக் களை உருவாக்கி அவற்றில் நண்பர் களையும் உறவினர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்தார். சுயதொழில் அனுபவம் இல்லாத தால், ஒவ்வோர் அடியையும் முன்தயாரிப்புடன் முறையாகத் திட்டமிட்டு எடுத்துவைத்தார் ஜென்சிலின்.

தற்போது குழந்தைகளுக்கான 40 வகைக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கு 16 வகை உணவு, உடனடியாகத் தயாரிக்கக்கூடிய 20 வகைக் காலை சிற்றுண்டி, நீரிழிவு நோயாளிகளுக்கு 12 வகை உணவு, சிறுதானியத்தில் செய்யப்பட்ட நான்கு வகை நூடுல்ஸ் போன்றவற்றுடன் சிகைக்காய், குளியல் பொடி, முகப்பூச்சு உள்ளிட்ட 180 வகைப் பொருட்களைத் தயாரித்து அசத்துகிறார்.

ஒவ்வொரு உணவையும் மிகக் கவனமாகத் தயாரிக்கும் ஜென்சிலின் ரோஜா இதழ், பீட்ரூட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ் மில்க் குளிர்பானத்தைச் சரியான பதத்தில் கொண்டுவர 22 முறை முயன்றிருக்கிறார். இரண்டு மாதத் தொடர் முயற்சிக்குப் பிறகு 23-ம் முறைதான் சரியான பதத்தில் ரோஸ் மில்க் சிரப்பைத் தயாரித்திருக்கிறார். வெள்ளைச் சர்க்கரை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வேதிப்பொருட்கள் போன்ற எதையும் அவர் சேர்ப்பதில்லை.

சமரசமின்மையே வெற்றி தரும்

இரண்டு ஆண்டுகளில் ஜென்சிலின் கண்டிருக்கும் இந்த அசத்தல் வளர்ச்சி நமக்கு மலைப்பை ஏற்படுத்தினாலும், அதற்குப் பின்னால் பலரின் கூட்டு உழைப்பு அடங்கியுள்ளது என்கிறார் அவர். “நான் சுயதொழில் தொடங்கலாமா எனக் கணவரிடம் கேட்டபோது தொழிலில் வருமானத்தைவிட நேர்மையாக இருப்பதுதான் முக்கியம் என நம்பிக்கை அளித்தார். கன்னியாகுமரியில் வசிக்கும் என் பெற்றோரும் உறவினர்களும் எனக்கு உதவியாக இருந்தனர். எங்கள் நிறுவனத்தில் ஆறு பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

தானியங்கள், அரிசி வகைகள், மூலிகைகள் போன்றவற்றை ஊரி லிருந்து வரவழைத்துக்கொள்கிறேன். வாரத்துக்கு ஒருமுறை கேரட், பீட்ரூட் போன்ற காய்களை ஊட்டியிலிருந்து வரவழைத்துக் காயவைத்துப் பொடித்துக்கொள்கிறேன். இயற்கை முறையில் காயவைப்பதால் கண்டிப்பாகக் கால்வாசி சத்து போய்விடும். அதற்கு ஈடாகச் சத்து நிறைந்த முந்திரி, பாதாம், எள், கசகசா, குங்குமப்பூ போன்றவற்றைச் சேர்த்துக்கொள்கிறேன். 18 வகையான பொருட்களைச் சேர்த்து அரைக்கும் சத்துமாவைக் குறைந்தது முக்கால் மணி நேரம் வாணலியில் வறுத்தால்தான் அவை கெடாமல் இருக்கும். மத்திய அரசின் உணவுச் சான்றிதழ் பெற்று முறையாக விற்பனைசெய்கிறோம்.

பொதுவாகச் சத்தான உணவு என்றாலே ருசியாக இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. இந்தக் கருத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை. உணவின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. பாரம்பரிய உணவை அடிப்படையாகக் கொண்ட தொழிலில் நேர்மையாக இருந்தால்தான் சாதிக்க முடியும்” என்கிறார் ஜென்சிலின் வினோத்.

SCROLL FOR NEXT