கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே நானும் என் கணவரும் எங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றுகூடி, அரிதாகக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகக் கழிப்பது என்று விவாதித்தோம். மேல்நிலைப் பள்ளி மாணவர்களான இரண்டு குழந்தைகளுக்கும் இடையே வயது வித்தியாசம் குறைவு என்பதால் இருவரது கருத்துகளும் யோசனைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது சாதகமாக அமைந்தது.
பள்ளி நாட்களைப் போல் காலையில் சீக்கிரமாக எழுந்து, உற்சாகமாகத் தயாராவதுடன், பள்ளிக்குப் பதிலாகச் சமையலறையில் கணவர் எனக்குத் துணையிருக்க, சமையல் வேலைகளைக் குழந்தைகள் கவனித்துப் புரிந்துகொள்ளச் செய்தேன். சிறு சிறு வேலைகளை அவர்களைச் செய்யப் பழக்கினேன். சமையல் எனும் கலை பின்னாட்களில் நிச்சயம் பயன் தரும் எனப் புரிய வைத்தேன். பிறகு மூச்சுப் பயிற்சி, எளிமையான யோகா, முத்திரைப் பயிற்சி எனச் சிறிது நேரம் கழியும்.
சாப்பிட்டபின் படித்த பள்ளிப் பாடங்களை நினைவுறுத்திக்கொள்ளவும், படிக்கும் பழக்கம் தொய்வடையாதிருக்கவும் பள்ளி நேர அளவைவிடக் குறைவான நேரத்தை ஒதுக்குவோம். இடையே என் கணவர் பொது அறிவு, அன்றாட முக்கியச் செய்திகளைப் பகிர்ந்துகொள்வார். மாலை நால்வரும் சேர்ந்து கேரம், செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களை விளையாடுவோம். மீண்டும் எளிய உடற்பயிற்சி. இரவில் முக்கியச் செய்திகளுக்காக மட்டும் தொலைக்காட்சி பார்ப்போம். தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் போன்றவை ஏற்கெனவே திட்டமிட்டபடி அறவே கிடையாது.
இரவு உறங்கப் போகும்முன் அன்றைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து இரு குழந்தைகளில் ஒருவர் கூற வேண்டும். மாற்றங்கள் இருந்தால் காரணங்கள் கேட்டறியப்படும். அதேபோல் மறுநாளைய சமையல் திட்டம் முதல் படிப்பு, விளையாட்டுக்கான திட்டங்களும் விவாதிக்கப்படும்.
மொத்தத்தில், இந்த கரோனா ஊரடங்கை இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, உற்சாகமாக விருப்புடனும் பயனுள்ள முறையிலும் கழிக்கிறோம். இக்கட்டான இந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையை நல்வழியில் வாழக் கிடைத்த வாய்ப்பாகவே இதைப் பயன்படுத்திக்கொள்கிறோம். பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து, சரியான புரிதலை இந்த ஊரடங்கு தந்திருப்பதை அனுபவித்து உணர்கிறோம்.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
- ஜெயந்தி ராமநாதன், மதுரை.