பெண் இன்று

பெண் திரை: பேசினால்தான் விடியும்

செய்திப்பிரிவு

ப்ரதிமா

எப்போதுமே புறக்கணிக்கப்படுகிற பெண்களின் குரல், இந்த கரோனா ஊரடங்கு நாட்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் குரலற்றவர்களாக இருப்பதைத்தான் ஆணாதிக்கச் சமூகமும் விரும்புகிறது. பெண்மை, தாய்மை, கற்பு, குடும்பப் பெண் என்று பல்வேறு கற்பிதங்களை உருவாக்கி, பெண்களைப் பேசவிடாமல் ஒடுக்கி மகிழ்கிறது. இத்தகைய ஒடுக்குதல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பதுதான் பெண்களுக்கு மீட்சி தரும். நடிகையும் செயற்பாட்டாளருமான நந்திதா தாஸ் எழுதி, இயக்கியிருக்கும் ‘Listen To Her’ என்ற குறும்படம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கால் குடும்ப வன்முறை என்னும் கொடிய பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் இதை உறுதிசெய்கின்றன. வன்முறையில் ஈடுபடுகிற ஆணின் நேரடிக் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இருக்க வேண்டிய சூழலில் பெண்களால் வன்முறை குறித்து, புகார் சொல்லவோ பிறரது உதவியை நாடவோ முடிவதில்லை.

எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் பேச்சு, பெண்களை வன்முறையிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாக்கும் என்பதை இந்தக் குறும்படம் உணர்த்துகிறது. மூச்சு விடாமல் அடங்கிப்போவதைவிடக் குறைந்தபட்சம் முனகலாம்; பேசலாம்; ஒரு படி மேலே போய்க் கத்தலாம். இவையும் எதிர்ப்பின் வடிவங்களே என்பதையும் குறும்படம் சுட்டிக்காட்டுகிறது.

பெண்ணுக்குப் பெண்ணே துணை

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்துகொண்டு ‘சூப்பர் வுமன்’களாக வலம்வரும் பெரும்பாலான பெண்களின் நிலையையும் இந்தக் குறும்படம் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஏன் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்ய வேண்டும்? வீட்டுக் கதவைத் திறக்கும்படி தன் கணவனிடம் சொல்வதன்மூலமாக இந்தக் கேள்விக்கு நந்திதா தாஸ் பதில் அளிக்கிறார்.

குரலெழுப்புகிறவர்களாக மட்டுமல்லாமல், சில நேரம் குரலைக் கேட்கிறவர்களாகவும் பெண்கள் இருக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. குறும்படத்தின் ஆரம்பத்தில் நந்திதாவின் மகன் ஆக்டோபஸ்ஸைப் பற்றிக் குறிப்பிடுவான். மூன்று இதயங்களைக் கொண்ட ஆக்டோபஸ், தலையைத் துண்டித்த பிறகும் ஒரு மணி நேரம் உயிருடன் இருக்குமாம். பெண்களுக்கும் இத்தகைய உறுதியும் போராட்டக் குணமும் அவசியம். அது வன்முறைக்கு எதிரான சிறு முனகலாகவும் இருக்கலாம்.

குறும்படத்தைக் காண: https://bit.ly/3dgSCe7

SCROLL FOR NEXT