நிற்க நேரமில்லாமல் ஓடிஓடிக் களைத்துப்போனேன். ஆனால், தற்போது நிலவிவரும் இந்த அசா தாரணமான ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே தனித்து இருக்க வேண்டிய கட்டாயம்.
தொடக்கத்தில் என் மகனையும் மகளையும் சமாளிப்பது சற்றுச் சிரமமாக இருந்தது. பிறகு இவர்கள் வீட்டுக்குள்ளேயே பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுவதற்காக என் கணவர் சில விளையாட்டுக்களையும் கதை வடிவிலான புத்தகங்களையும் ஏற்பாடுசெய்தார். அவர் தீவிர வாசிப்புப் பழக்கம் உடையவர். தினமும் ஐந்து நாளிதழ்களை வாசிப்பவர். இவ்வளவு நாட்களாக அந்தச் செய்தித்தாள்களைப் படித்துப் பயன்படுத்த நேரம் இல்லாமல் இருந்த குழந்தைகள், இப்போது செய்தித்தாள்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். சமையல் வேலையைக் கணவரும் குழந்தைகளும் பகிர்ந்துகொள்கின்றனர்.
என் மகள் சிறப்பாக நடனமாடுவாள். அதை மெருகேற்றும் விதமாக ஊக்கு வித்ததில் புதிய நடன அசைவுகளை இந்தக் காலத்தில் கற்றுக்கொண்டுவிட்டாள்.
தினமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அது தொடர்பான கருத்துகளை இணையத்திலிருந்தும் புத்தகங்களில் இருந்தும் தேடித் தொகுக்கும் பயிற்சியைக் குழந்தைகளுக்கு அளித்துவருகிறார் என் கணவர்.
என் கணவர் செஞ்சிலுவைச் சங்கம், தன்னார்வ அமைப்புகள் போன்ற வற்றின் மூலமாகத் தினமும் நான்கு மணி நேரம் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்திவருகிறார். இதைப் பார்க்கும் பிள்ளைகள் சமூகத்தின் மீது அக்கறை கொள்வதுடன், ஓய்வு நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்கின்றனர்.
குழந்தைகள் உற்சாகம் இழக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்ய அனுமதிப்பதுடன், தேவையானபோது உடனிருந்து வழிகாட்டுகிறோம். நானும் கதை, கவிதை என்று பல்வேறு எழுத்துச் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் அதைப் பார்க்கும் என்னுடைய பிள்ளைகளும் வாசிப்பு, எழுதுதல், ஓவியம் என்று பலவற்றையும் இப்போது முயன்றுவருகின்றனர்.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
- மா. கல்பனா பழனி, சின்ன பள்ளத்தூர், பெண்ணாகரம்.