சுதா ரகுநாதன் கர்னாடக இசைப் பாடகி
வேலை, வேலை, அவசர வேலை என்கிற ஒரே நேர்கோட்டுப் பாதை இப்போது சற்றே திசை திரும்பியிருக்கிறது. இந்த ஊரடங்கு புதிய அனுபவத்தை அளித்திருப்பதுடன், வேறு ஒரு வழியில் புதிய உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. கடந்துவந்த பாதையைச் சற்று மாற்றிப் பார்க்க வைத்திருக்கிறது. தொற்றுநோயின் அச்சத்தைத் தீர்க்கும் பொருட்டு, தோத்திரப் பாடல்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.
சமையலில் ஆர்வம் கூடியிருக்கிறது. ஆரோக்கியமான நொறுக்குத்தீனியைச் செய்து, அவற்றை Sooda’s Kitchen என்ற பெயரில் வீடியோவாகவும் பதிவுசெய்கிறேன். இதில் ரெசிபியுடன் இசையும் வழியும். உதாரணத்துக்கு, முந்திரி பக்கோடா செய்தால், அதற்கு இசைவான ‘மந்தாரி’ ராகத்தைப் பாடியபடியே செய்வேன். மேலும், ‘எக்ஸ்பிரஷன்ஸ் எக்ஸ்பிரஸ்ஸோ’ அமைப்பின் வழியாகத் தொழிலதிபர்கள், இசை - நடனக்கலைஞர்கள், சபா நிர்வாகிகள் ஆகியோரைப் பேட்டி காண்கிறேன்.
பூமி நாள், ஶ்ரீராமநவமி, சங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மறைந்த இசைக்கலைஞர்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்ற முக்கியமான நாட்களில் பொருத்தமான பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளேன்.
‘சிக் ஷா’ என்னும் பெயரில் விருப்பமான மாணவர்களுக்கு இணையம் வழியாக இசைப்பயிற்சி அளித்துவருகிறேன்.
தினமும் நான் மேற்கொள்ளும் தியானம், யோகா, சங்கீதப் பயிற்சி, அடுத்து செய்யவுள்ள வேலைக்கான திட்டம் என அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் மனிதநேயம் தழைக்கும். மனிதநேயம் தழைத்தால் மட்டுமே இயற்கை பொய்க்காது என்ற கொள்கையை உள்ளடக்க காஞ்சிப் பெரியவர் எழுதிய பாடல் ‘மைத்ரீம் பஜத’, இந்தச் சூழலுக்கு அவசியமானது. அது சார்ந்து, ‘சர்வம்’ என்ற தலைப்பில் நானும் பாடகி மஹதியும் இணைந்து செயல்பட முடிவெடுத்த அடுத்த கணம், சுமார் ஐம்பது இசைக் கலைஞர்கள் அதில் பங்கேற்க உடனே சம்மதித்தது முக்கியமானது. அப்பாடல் விரைவில் வெளியிடப்படும்.
நாம் பெறுகிற ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒரு பாடமே. அந்தப் பாடத்தைப் படிப்பதுடன் அன்றாட வாழ்வில் அன்பைச் செலுத்தினால் மாற்றுப் பாதையோடு புதிய வழியும் பிறக்கும்.
தொகுப்பு: யுகன்