எல்.ரேணுகாதேவி
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மே 3-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் ஆரம்ப நாட்களை விடுமுறைபோல் கழித்த மக்களுக்குத் தற்போது நீட்டிக்கப் பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் நாட்கள் குறித்த நிச்சயமற்றதன்மையை அதிகரித்துள்ளது. பலருக்கும் வீட்டிலிருப்பது தனிமையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே விடுமுறை கிடைத்தால் குடும்பத்தினர், நண்பர்களுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாகச் செலவழிக்க நினைப்பதுதான் பலரது இயல்பு. ஆனால், ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரவர் சூழலுக்கு ஏற்பப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டை வலி, இருமல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நோய் குறித்த அச்சம் முன்பைவிட மேலும் அதிகரித்துள்ளது.
“ஆனால், இப்படியொரு நெருக்கடியான சூழலுக்கு நாம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமே ஆட்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்” என்கிறார் சேலம் ‘மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’யின் மனநல மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் வி.அபிராமி.
குழந்தைகளைப் புரிந்துகொள்வோம்
“குழந்தைகளைப் பொறுத்தவரையில் இந்த நோய் குறித்துப் புரிந்துகொள்ளும் தன்மை குறைவாகத்தான் இருக்கும். வெளியே போக வேண்டும், விளையாட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்படுவோம் என்றுதான் அவர்களுக்குத் தோன்றும். குழந்தைகளுடைய இந்த மனநிலையை மாற்ற அவர்களுடன் நேரம் செலவழிக்கப் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும். ஆனால், பெரியவர்களோ அத்தியாவசியத் தேவைகள், அன்றாட உணவு, கணவன் - மனைவி இடையிலான சண்டை, குடும்பப் பிரச்சினை போன்றவை குறித்து கவனம் செலுத்துவார்கள். இதனால், பெற்றோரின் கவனத்தைப் பெறக் குழந்தைகள் தேவையில்லாத விஷயங்களைச் செய்யலாம். குழந்தைகளின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்றாற்போல் நோய் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை தற்காலிகமானதுதான், இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகள் மனத்தில் ஏற்படுத்துவதுதான் பெற்றோர்களின் முக்கியக் கடமை” என்று சொல்லும் அபிராமி, பெற்றோர் தங்கள் பயம், பதற்றம், கோபம் போன்ற எதையும் குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
குழந்தைகள் தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றில் அதிக நேரம் செலவழிக்கப் பெற்றோரே துணையாக இருக்கக் கூடாது. அதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால் போதும். வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் பொதுவாகவே தங்களுடைய நண்பர்களுடன் இருக்கத்தான் விரும்புவார்கள். இப்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வரலாம் என உணர்வுவயப்பட்டு முடிவெடுப்பார்கள். இதுபோன்ற நேரத்தில் ஊரடங்கு காலத்தைப் பெற்றோர் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் அபிராமி. “வளரிளம் பருவக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவர்களின் உடல், மனரீதியான பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள அவர்களுடன் நண்பர்களைப் போல் பெற்றோர் நேரம் செலவழிக்க வேண்டும்” என்கிறார் அவர்.
அரசிடம் இருக்கிறது மருந்து
தினமும் கரோனா குறித்த செய்திகளைக் கவனித்துக்கொண்டே இருக்கத் தேவையில்லை. “காலையில் நாளிதழையும் மாலை ஒரு முறை செய்தி அலைவரிசைகளையும் பார்த்தால் போதும். கரோனா வைரஸை அழிக்கத் தற்போதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோய் குறித்துத் தொடர்ச்சியாகச் செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருப்பது தேவையில்லாத அச்சத்தை உருவாக்கும். பொதுவாக, கரோனா நோய்த்தொற்று முதியவர்களையே அதிகம் தாக்குவதால் இந்தச் சூழ்நிலையில் முதியவர்களுடைய மனநிலை கூடுதலாக பாதிக்கப்பட்டு இருக்கும்.
ஏற்கெனவே தனிமையான சூழ்நிலையில் இருக்கும் அவர்களுக்கு, தங்களுக்குக் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் தங்களை யாரும் கவனிக்காமல் விட்டுவிடுவார்களோ என்ற யோசனை இருக்கும். இதனால், வீட்டில் உள்ள முதியவர்களிடம் நோய் குறித்து அதிகமாகப் பேசாமல் வேறு சில விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். முதியவர்களுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான கதைகளை இந்தக் காலத்தில் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், இந்த ஊரடங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை அதிகரித் துள்ளது. பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால், சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுக்குத் தள்ளப்படும் ஆபத்தும் உண்டு. குடும்ப வன்முறைகளில் இருந்து விடுபட, பெண்கள் மன நல ஆலோசனையைப் பெறலாம். மகளிர் ஆணையம் அளித்துள்ள எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த ஊரடங்கு பெரும்பாலும் ஏழைகளைத்தான் பாதித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அன்றாட வருமானத்தை நம்பி தங்களுடைய வாழ்க்கையை நடத்தியவர்களுக்கு ஒரு நாளைக் கடத்துவதே பெரிய விஷயம். தினக்கூலியை நம்பியுள்ளவர்கள் இந்த ஊரடங்கால் பொருளாதாரச் சிக்கல், வாழ்க்கைச் சிக்கல் ஆகியவற்றால் மனத்தளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதைச் சரிசெய்யவும் எதிர்வரும் நாட்களை அவர்கள் நம்பிக்கையுடன் நகர்த்தவும் அரசின் திட்டங்கள்தாம் உதவியாக இருக்கும். அரசால்தான் மக்களின் அச்சத்தைப் போக்கும் மருந்தைத் தர முடியும்” என்கிறார் டாக்டர் அபிராமி