பெண் இன்று

இப்போது என்ன செய்கிறேன்? - தீர்வை நோக்கிய காத்திருப்பு

செய்திப்பிரிவு

தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த நாட்களில் அதிகாலையில் சூரியநமஸ்காரம், பிராணாயாமத்துடன் தொடங்குகிறது ஒரு நாள். வீட்டு வேலைப் பணியாளர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் வீட்டைத் தூய்மைப்படுத்துவது, துணிகளை மடித்துவைப்பதைப் போன்ற அன்றாடப் பணிகள் சில மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

வயதில் முதிர்ந்த இரண்டு குழந்தைகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறேன். ஒருவர் என்னுடைய மாமனார் (94 வயது), இன்னொருவர் என்னுடைய அம்மா (80 வயது). இருவருடனும் பேசுவது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, அவர்களுக்குத் தேவைப்படுவதைக் கவனித்துச்செய்வது என்று மணித்துளிகள் நகரும். இவற்றைத் தவிர, சில அறைகளில் சில பொருட்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தவற்றைச் செயல்படுத்த ஊரடங்கின் முதல் வாரத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.

நான் டெல்லியில் அதிக நாட்கள் தங்கியிருந்ததால், இங்கே வளர்த்துவரும் செடிகளைப் பராமரிக்க முடியாத நிலை இடையில் இருந்தது. இப்போது செடிகளுக்கு நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பதிலும், ஒரு ரொட்டித் துண்டைக் கவனமாகச் சமைப்பதிலும், வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதிலும்கூட ஒரு கவிதையை நேசிப்புடன் எழுதுவதைப் போன்ற அனுபவத்தைப் பெறுகிறேன்.

தென்சென்னைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் செயல்படுவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் பேசி மக்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்துவருகிறேன். கட்சியின் மாவட்டச் செயலாளர்களை ஒருங்கிணைத்து கட்சிப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறேன். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதில் பல புதிய அனுபவங்களும் இந்த ஊரடங்கு காலத்தில் கிடைத்திருக்கின்றன. அந்த நேரத்தை அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடன் அளவளாவவும் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு குறித்து ஆலோசிக்கவும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அன்றாடம் வேலை செய்தால்தான் உணவு கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் கூலித் தொழிலாளர்களின் பிரச்சினைகள், அவர்களின் வாழ்க்கைப் போராட்டம், பல கி.மீ. தொலைவுக்கு நடந்தே சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வாழ்க்கைப்பாடுகளை நினைக்கும்போது, உறக்கம் வருவதில்லை. கவிதை எழுதுவதற்கோ படிப்பதற்கோ மனம் செல்வதில்லை. இயற்கையிடம், வனப்பேச்சியிடம் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்கும் கனத்த இரவுகளோடு கழிகின்றன இந்த ஊரடங்கு நாட்கள்.

SCROLL FOR NEXT