பெண் இன்று

இப்படித்தான் சமாளிக்கிறோம்: புதிய வாசல் திறந்தது

செய்திப்பிரிவு

மகன் வீட்டுக்குச் சென்ற எனக்கு ஊரடங்கால் அவர்களுடனேயே தங்க நேர்ந்துவிட்டது. மகனும் மருமகளும் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைசெய்கிறார்கள். ஏழு வயதுப் பேத்திக்கு இரண்டு நாட்களிலேயே விளையாட்டில் சலிப்பு வந்துவிட்டது. அவளை உற்சாகப்படுத்த வேண்டுமே. கைபேசி, ஐபேட் போன்றவற்றில் விளையாடக் கூடாது என்று அவளிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ஏன் என்று கேட்டவளிடம் அது கண்ணுக்குக் கெடுதல் என்று விளக்கியதுமே, ஒப்புக்கொண்டாள்.

என்னென்ன விளையாடலாம் என்று நானும் அவளும் திட்டம் போட்டோம். அதன்படி முதலில் நாள்தோறும் அவரவருக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்வது என முடிவானது. கதையில் அவள் தெரிந்துகொண்டதைச் சொல்லச் சொன்னேன். எனக்குத் தெரிந்த தெனாலி ராமன், அக்பர், பீர்பால் கதைகளை நடித்துக் காட்டி அவளைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறேன்.

அவளுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த கேரம் போர்டு பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. அதை எடுத்து விளையாடினோம். பட்டம் செய்து மொட்டை மாடியில் பறக்கவிட்டு மகிழ்ந்தாள். பிறகு ஓவியம் தீட்டத் தொடங்கினோம். வானவில், பட்டாம்பூச்சி, வீடு, மலை, வனவிலங்குகள் எனத் நாள்தோறும் ஒன்றை வரைகிறாள். அவளுடைய கற்பனைத் திறனும் சிறகு விரிக்கிறது. வண்ணம் தீட்டுவதில் அவளுக்கு இருக்கும் திறமையை அறிந்துகொண்டோம்.

பேத்திக்கு கேக் பிடிக்கும் என்பதால் மாவு, வெண்ணெய், சர்க்கரை என்று தேவையானவற்றை எல்லாம் அவளையே எடுத்துவரச் சொல்லி செய்ததில் அவளுக்கு மகிழ்ச்சி. கொத்தமல்லி, வெந்தயம், தக்காளி விதைகளைச் சிறிய பேப்பர் கப்பில் போடச் சொல்லி விதைக்க வைத்திருக்கிறேன். முளை விடுவதைக் காண ஆவலாய் இருக்கிறாள். செடிகளுக்கு நீர் விடுவது, வாசல் கூட்டுவது, அவளுடைய துணியை மடிப்பது, பொருட்களை அடுக்கிவைப்பது என்று ஏதாவது ஒரு வேலையை என்னுடன் சேர்ந்து செய்யவைக்கிறேன்.

இப்படி நாள் முழுக்க அவளுடன் பேசி, சிரித்து விளையாடியதில் நானும் குழந்தையாகவே மாறிவிட்டேன். நேரம் போவதே தெரியவில்லை. மகனும் மருமகளும் வீட்டில் பெரியவர்கள் அவசியம் தேவை என்பதை உணர்ந்து, என்னை அவர்களுடனேயே இருக்கச் சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த ஊரடங்கு புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருக்கிறது.

உங்கள் வீட்டில் எப்படி?

வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும்.

மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

- வெ. ஜெயலட்சுமி, கோவை.

SCROLL FOR NEXT