இயற்கையான மனித உணர்வுகளில் அடிப்படை உணர்வான பாலுணர்வு பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு இன்னும் சுதந்திரமான சூழல் இந்தியாவில் உருவாகவேயில்லை. இந்தச் சூழலில் பெண் மாற்றுத் திறனாளிகள் தங்களது பாலுணர்வையும் அது சார்ந்து எழும் சந்தேகங்களையும் பேசுவதற்கோ தீர்வு காணுவதற்கோ இடமேயில்லாத சூழலே இன்றும் இங்கே நிலவுகிறது. கல்கி கோச்லின் மாற்றுத் திறனாளியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த இந்தித் திரைப்படமான ‘மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’ திரைப்படம் இந்தப் பிரச்சினைகளின் மீது பொதுச் சமூகத்தின் கவனத்தைக் குவித்துள்ளது.
பெண் மாற்றுத் திறனாளிகளின் பாலுணர்வு சார்ந்த சந்தேகங்கள், குடும்ப உறவு ஆலோசனைகளுக்காகவே ஒரு இணையதளம் கடந்த மூன்றாண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தின் முகவரி http://www.sexualityanddisability.org/default.aspx மும்பையைச் சேர்ந்த பிஷகா தத்தா என்பவரின் தொண்டு நிறுவனமான ‘பாய்ன்ட் ஆஃப் வியூ’வும், டெல்லியைச் சேர்ந்த ‘க்ரியா’ என்ற பெண்ணிய மனித உரிமைகள் அமைப்பும் சேர்ந்து உருவாக்கிய இணையதளம் இது.
இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த மே மாதத்தில் 13 லட்ச ரூபாய் திரட்டி, இந்த ஆங்கில இணையதளத்தின் உள்ளடக்கத்தை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்துப் பரவலாக்கும் முயற்சியையும் தொடங்கியுள்ளனர்.
உடலின் இயற்கையான உணர்வுகளைப் போற்றுதல், உறவுகளைக் கையாளுவது, திருமண ஆலோசனை, குழந்தைப் பேறு, சுயபராமரிப்பு தொடர்பான எத்தனையோ கேள்விகள் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு இருந்துவருகின்றன. அதற்குச் சரியான பதில்களைத் தருவதற்கான இடமாக இந்த இணையதளம் இருக்கிறது. பெண் மாற்றுத் திறனாளிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல், குடும்ப வன்முறை, பணியிடத்துப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தத் தகவல்களும் இந்த இணையதளத்தில் உண்டு. பல மாற்றுத் திறனாளிகள் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றனர். அத்துடன் மாற்றுத் திறனாளிகளின் உறவினர்கள், குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் அதிகம் உள்ளன. “ஊனமுற்ற நபர் ஒருவருக்கு செக்ஸ் தேவையே எழாது என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள்” என்கிறார் பிஷகா தத்தா.
இந்தியாவைப் பொருத்தவரை மாற்றுத் திறனாளிகளின் பிற தேவைகள் சார்ந்த ஆலோசனைகள், வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள், உடல்நல சிகிச்சைகள்வரை வழிகாட்டுவதற்காக பல அமைப்புகள் உள்ளன. பெண் மாற்றுத் திறனாளிகளின் பாலுணர்வு தொடர்பான ஆலோசனைகளுக்குத் தீர்வளிக்கும் முதல் செயல்பாட்டை தத்தா தொடங்கியுள்ளார்.
இந்த இணையதளத்தின் சிறப்பம்சம் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் வழிகாட்டுவதற்கான வசதிகள்தான். ஸ்க்ரீன் ரீடர் மூலம், இதன் உள்ளடக்கத்தைப் பேச்சாகக் கேட்கலாம். தற்போதைக்கு இந்த இணையதளம் 13 மொழிகளில் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்குள்ளேயே தங்கள் உடல் மற்றும் பாலுணர்வு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு கற்றுக்கொள்ளும் வசதிகள் இருந்தால்தான், அதிகாரப் படிநிலையின்றி அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான பயிற்சித் திட்டங்களிலும் இறங்கியுள்ளார் தத்தா.