வழக்கறிஞர் அஜிதா
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு மூன்று மாதங்கள் முன்புவரை கடுமையான பணி. திட்டமிட்ட வேலைகளைச் செய்ய முடியாத நிலை. தற்போது வீட்டில் இருக்கும் இந்நேரத்தில் அவற்றைச் செய்துவருகிறேன். வீட்டிலேயே நடைப்பயிற்சி செய்கிறேன். கணவருக்கும் மகனுக்கும் சமையல் கற்றுக் கொடுக்கிறேன்.
பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் எழுதிய ‘பண்பாட்டு அசைவுகள்’, எழுத்தாளர் பொ.வேல்சாமி எழுதிய ‘கோவில் - நிலம் - சாதி’, 13, 18-ம் நூற்றாண்டுகளில் கிடைத்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து எழுத்தாளர் அ.கா. பெருமாள் எழுதிய ‘முதலியார் ஓலைகள்’ உள்ளிட்ட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
சேரர், சோழர் காலத்தில் சாதி என்ற அமைப்பு எப்படி வந்தது, பதினெண் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களில் சாதியைப் பற்றி எவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள், பார்ப்பனிய பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுவதற்கு முன்பிருந்த தமிழர்களுடைய மரபு என்ன, மேல்சாதியினர் மரபுதான் தமிழரின் மரபா என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் வகையில் இந்தப் புத்தகங்கள் உள்ளன. காரல் மார்க்ஸ், அம்பேத்கரின் எழுத்துகளையும் படித்துவருகிறேன். நாம் வாழும் சமூகம் பற்றிய புரிதலை இதுபோன்ற புத்தகங்கள்தாம் ஏற்படுத்தும்.
மீதமுள்ள நாட்களுக்குத் தேவையான நிறைய வேலைகளைத் திட்டமிட்டு வைத்துள்ளேன். கரோனா வைரஸ் பரவலால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து ‘கரோனா தடுப்பு செயல்பாட்டுக்கான விழிப்புணர்வு மையம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு நாளும் இணையம் வழியாகக் கூட்டங்களை நடத்து கிறோம். வீட்டு வேலைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்துள்ள நல உதவியை அந்த மக்களுடைய வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதனால், அரசின் உதவிக்காக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க முடியும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய், விலைவாசி அதிகமாக உள்ள இந்நாளில் மிகக் குறைவான தொகை. இந்தத் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை அரசு அமைப்பு அதற்கான பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள் ளோம். மருத்துவ நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களுக்காக நாம் பேசவில்லையென்றால் வேறு யார் பேசுவார்கள்?