பி.டி.ரவிச்சந்திரன்
தன்னுடைய தந்தையின் கனவைத் தன் மகத்தான வெற்றியின் மூலம் நனவாக்கியிருக்கிறார் கலைவாணி. இவர் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டைப் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் பெற்றுத்தந்திருக்கிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசனுடைய மகள் கலைவாணி. தந்தை குத்துச்சண்டை வீரர் என்பதால் அவரே கலைவாணிக்குக் குருவானார். நான்காம் வகுப்புப் படித்தபோதே சிறுவர்களுக்கான தேசிய அளவிலான சப் ஜூனியர் ‘கப் பாக்ஸிங்’ போட்டியில் வெள்ளி வென்றார். இதுதான் அவரது முதல் போட்டி. கலைவாணியின் திறமையை உணர்ந்த தந்தை, பயிற்சியைத் தீவிரப்படுத்தினார். கலைவாணியின் அண்ணன் ரஞ்சித்குமாரும் குத்துச்சண்டை வீரர் என்பதால் அவரிடமும் கலைவாணி பயிற்சிபெற்றார்.
அறுவரில் ஒருவர்
ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது தேசியப் போட்டியில் தங்கம் வென்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைக் குவித்த கலைவாணியின் திறமையை அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று அவரது பயிற்சிக்கு உதவியது. இதன்மூலம் அவரால் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தனிப் பயிற்சி மேற்கொள்ள முடிந்தது.
சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தவர், திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என்., கல்லூரியில் பி.எஸ்சி., உடற்கல்வியியல் படிப்பில் சேர்ந்தார்.
படிப்புடன் பயிற்சியையும் தொடர்ந்தார். அப்போது அவர் இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்ததால் தெற்காசியப் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்தது. குத்துச்சண்டை அணியில் அறுவரில் ஒருவராகத் தேர்வானார்.
ஒலிம்பிக் கனவு
“என் அப்பா ஒரு பாக்ஸர். குத்துச் சண்டைப் போட்டிகளில் விருதுகளைக் குவிக்கணும் என்பது அவரோட கனவு. ஆனால், அவர் பாக்ஸிங் பயிற்சி எடுத்தால் முரட்டுத்தனம் வந்துவிடும், அடிதடியில் ஈடுபட்டு வாழ்க்கை தடம் மாறிவிடும் எனத் தாத்தாவும் பாட்டியும் பயந்தனர். அப்பாவை பாக்ஸிங் பயிற்சியைவிட்டு நிற்கச் செய்தனர்.
பாக்ஸிங்கில் சாதிக்க வேண்டும் என்ற அவரது கனவு தகர்ந்தது. ஆனால், மகளான எனக்குப் பயிற்சி கொடுத்து அதன் மூலம் தன் கனவை நிறைவேற்ற அப்பா நினைத்தார். அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு ஒவ்வொரு போட்டியிலும் களம் இறங்கினேன். தெற்காசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் உறுதி என்ற நிலையிலும் தங்கத்துக்காகப் போராடினேன், வென்றேன். அப்பாவின் கனவை நனவாக்கிவிட்டேன்” என்று ஆனந்தக் கண்ணீருடன் சொல்கிறார் கலைவாணி.
அவர் படித்துவரும் கல்லூரி நிர்வாகம் கலைவாணியைத் திண்டுக்கல் நகரில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டு விழா நடத்தியது. அது தன் உத்வேகத்தைக் கூட்டியிருப்பதாகச் சொல்கிறார் கலைவாணி.
“இன்னொரு கனவு பாக்கி இருக்கிறது. ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வதுடன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் பெற்றுத்தர வேண்டும். கடும் பயிற்சியும் விடாமுயற்சியும் என் கனவுக்குக் கைகொடுக்கும் என நம்புகிறேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் கலைவாணி.