கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கும் கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதில் என் மகன்கள் இருவருக்கும் தாள முடியாத மகிழ்ச்சி. தேர்வு நேரத்தில் விடுமுறை கிடைத்ததில் இளையவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. என் கணவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்வதால் அவரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியச் சொல்லி விட்டார்கள். அதனால், அவரும் வீட்டில் இருக்கிறார்.
மகன்களின் சண்டையோடுதான் பொழுது புலர்கிறது. பள்ளி இல்லை என்பதால் அவர்கள் இருவரும் சாவகாசமாக எழுந்து ஏதாவதொரு விஷயத்துக்குச் சண்டை போட்டு, அதைச் சமாதானப்படுத்த என்னைக் கூப்பிட்டு, என்னாலும் முடியாதபோது வேலையைப் பாதியில் விட்டுவிட்டு என் கணவர் வர என வீடு இரண்டுபடுகிறது. கரோனாவைக்கூடச் சமாளித்துவிடலாம் போல என்று நினைக்கிற அளவுக்கு இருவரின் சேட்டைகளும் எல்லை மீறியபோதுதான் அவர்களை அடக்கிவைக்கும் உத்தியை யோசித்தேன்.
கரோனா தொற்றால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமரவும் விடுவதில்லை. பிறகு அவர்கள் என்னதான் செய்வார்கள்? அதனால், அவர்களின் மூளைக்கும் உடலுக்கும் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்கத் திட்டமிட்டேன். ஏற்கெனவே அவர்களுக்குச் சிறு சிறு வீட்டு வேலைகளைப் பழக்கியிருந்தேன். அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடிவெடுத்தேன். காலை எழுந்ததுமே இருவரையும் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னேன். பிறகு என்னுடன் சமையல் அறையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். பாலைக் காய்ச்சுவது இளையவனின் வேலை. அதை இருவருக்கும் கலந்து தருவது மூத்தவனின் வேலை. பிறகு காலைச் சிற்றுண்டிக்கு எனக்கு உதவுவார்கள்.
கணவர் வேலை செய்ய அமர்ந்ததும் நாங்கள் பரமபதம் விளையாட அமர்வோம். ஏதாவது கேலி பேசிக்கொண்டே இரண்டு, மூன்று ஆட்டங்கள் ஆடுவோம். பிறகு அன்றைய நாளிதழை எடுத்துவரச் சொல்லி இருவருக்கும் கேள்விகளைத் தருவேன். இளையவன் இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கிறான் என்பதால் அவனுக்கு மட்டும் எளிமையான கேள்விகள். இப்போது பரபரப்பாகப் பேசப்படுவது கரோனா தொற்று என்பதால் அது குறித்த விழிப்புணர்வு கேள்விகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
அது தவிர சில பொது அறிவுக் கேள்விகளையும் கேட்பேன். பெரியவன் கம்ப்யூட்டர் உதவியோடு பதில்களைத் தேடுவான். தம்பிக்கும் உதவுவான். இதனால் இருவரும் விழிப்புணர்வு பெறுவதுடன் உலக நடப்பையும் தெரிந்துகொள்கிறார்கள். தங்களுக்கு இவ்வளவு தகவல்கள் தெரிகின்றன என்பது அவர்களுக்குப் பெருமிதம் தருவதுடன் அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.
மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம். தூக்கம் வரவில்லையென்றாலும் சிறிது நேரம் படுத்திருக்க வேண்டும். பிறகு காயப்போட்ட துணிகளை எடுத்து வருவது, அவரவர் துணியை மடித்துவைப்பது, வீட்டைப் பெருக்குவது என இருவரும் பிஸியாகிவிடுவார்கள். அதிலும் சண்டை வரத்தான் செய்யும். ஆனால், யார் கச்சிதமாக வேலை செய்கிறார்கள் என்கிற ஆரோக்கிய சண்டை அது. மாலை விளையாட்டில் கணவரும் பங்கேற்பார். மாடியில் சிறிது நேரம் கிரிக்கெட், ஷட்டில் என ஏதாவது விளையாடுவார்கள்.
அப்பாவுடன் பேசி அரட்டையடிப்பார்கள். குழந்தைகளுடன் நேரத்தைக் கழிப்பது எவ்வளவு ஆனந்தமானது என்பதைக் கணவரும் இந்தச் சில நாட்களில் உணர்ந்துகொண்டார். பள்ளி, வீட்டுப்பாடம், டியூஷன் என எந்த நெருக்கடியும் இல்லாமல் நிறைய நேரம் கிடைப்பதால் குழந்தைகளும் தங்களது ஆசைகள், திட்டங்கள், கனவுகள் எனப் பலவற்றையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யும்போது அம்மாவுக்கு இவ்வளவு வேலைகளா என மலைத்துப்போய்க் கேட்டான் இளையவன். பள்ளி தொடங்கிய பிறகும் எனக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறான்.
கணவர் வீட்டில் இருப்பதால் மூன்று வேளையும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். பலவற்றையும் பேசிக்கொண்டே சாப்பிடுகிறோம். உணவின் ருசி கூடுகிறது. இரவில் கதைகள் பேசியபடி குழந்தைகளை உறங்க வைக்கிறோம். கனவுகளில் அவர்கள் மலர்ந்து சிரிக்கிறார்கள்.
-அபிதா சென்னை.
| இப்படித்தான் சமாளிக்கிறோம் வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவக்கூடும். |