பெண்மையப் படங்களை மீட்டெடுத்தவர்
தமிழ் வெகுஜனத் திரைப்பட உலகில் கதாநாயகிகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்ற நிலையை மாற்றி அமைத்தவர் நயன்தாரா. 2004-ல் ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக அறிமுக மானவர் இன்று ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று புகழப்படும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். ‘மாயா’, ‘அறம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோலமாவு கோகிலா’ என இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் குவித்தன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண்மையப் படங்கள், பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட திரைப்படங்களுக்கான வணிக மதிப்பை மீட்டெடுத்தது இவரது மைல்கல் சாதனை.
அசலான பெண் உணர்வுகளைப் பதிவுசெய்தவர்
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பெண் கலைஞர்கள் கோலோச்சத் தொடங்கினர். அவர்களில் முதன்மையானவர் கவிஞர் தாமரை. 1998 முதல் பாடலாசிரியராகச் செயல்பட்டுவரும் இவர், பல மறக்க முடியாத பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் வெற்றிக் கூட்டணிகளில் இடம்பெற்ற நடிகை அல்லாத முதல் பெண் தாமரைதான். பெண் கதாபாத்திரங்களுக்கான பாடல்களையும் ஆண்களே எழுதிக்கொண்டிருந்த நிலையில் இவரது வருகைக்குப் பின் அசலான பெண் உணர்வுகள் தமிழ் சினிமாப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டன.
முன்னுதாரணப் படைப்பாளி
பெண் இயக்குநர்கள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்களை மட்டுமே எடுப்பார்கள் என்ற பார்வையை உடைத்தவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள சுதா, இயக்குநராக அறி முகமான ‘வெப்பம்’ 2011-ல் வெளியானது. ஆனால், 2016-ல் வெளியாகி வணிகத்திலும் விமர்சனத்திலும் வெற்றிபெற்ற ‘இறுதிச் சுற்று’ அவரது முகவரியாக அமைந்தது. முன்னணி நட்சத்திரமான சூர்யாவை வைத்து இவர் இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ விரைவில் வெளியாகவிருக்கிறது. பெண் இயக்குநர் ஒருவர் முன்னணி நட்சத்திரத்தை இயக்குவதும் புதிய முன்னுதாரணமே.
இரண்டாம் சாவித்திரி
2018-ல் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப் பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான ‘மகாநடி’ / ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. கேரளத்தில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்குத் திரையுலகங்களின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவர். தலைமுறைகளைத் தாண்டி மக்கள் மனத்தில் இடம்பிடித்துவிட்ட ஒரு ஆளுமையைத் திரையில் மீண்டும் உயிர்ப்பித்தது இவரது மலைக்க வைக்கும் சாதனை.
திரைக்கு வெளியேயும் ஒலிக்கும் குரல்
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாகத் திகழ்ந்துவருபவர் ரோகிணி. கதாநாயகியாக இருந்தபோதும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர். பின்னணிக் குரல் கலைஞராகவும் பாடலாசிரியராகவும் முக்கியத் தடங்களைப் பதித்தவர். பொது விவகாரங்களிலும் சமூக, அரசியல் பிரச்சினைகளிலும் தன் கருத்துகளையும் விமர்சனங்களையும் துணிச்சலாகப் பொதுவெளியில் பதிவு செய்துவருபவர் ரோகிணி. தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
- கோபால்