பெண் இன்று

புத்தாயிரப் பெண்கள் 2000- 2019: அரசியல் அறிவோம்

செய்திப்பிரிவு

ஓங்கி ஒலிக்கும் திராவிட இயக்கக் குரல்

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி. திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் அரசியல் கட்சிகளின் வழிகாட்டியாகத் திகழ்கிறது திராவிடர் கழகம். டிஜிட்டல் யுகத்தில் பலவகையான ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் கருத்துகளை எளிமையான நட்பார்ந்த மொழியில் விளக்கிச் சொல்வதிலும் முக்கியப் பங்காற்றிவருபவர் அருள்மொழி. மூவலூர் ராமாமிர்தம் தொடங்கி திராவிட இயக்கப் பெண் செயற்பாட்டாளர்களின் நெடிய பாரம்பரியத்தில் நிகழ்கால முக்கிய ஆளுமை இவர்.

புதிய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்

2019-ல் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை செளந்தரராஜன், 2014-ல் உருவாக்கப்பட்ட அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர். தற்போது இந்திய ஆளுநர்களாக இருப்பவர்களில் மிகக் குறைந்த வயதுடையவரும் இவரே. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை, பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்து படிப்படியாக முன்னேறியவர். 2013-ல் பாஜக தேசியச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2014 முதல் 2019வரை அக்கட்சியின் தமிழகக் கிளையின் தலைவராகச் செயல்பட்டார். மருத்துவரான தமிழிசை மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

போராடத் தயங்காத பொதுவுடைமைவாதி

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக மூன்று முறை பணியாற்றியவர் க.பாலபாரதி (2001-2015). பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகிய கட்சியின் துணை அமைப்புகளில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார். மக்களுக்கான சமூகநீதிப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் களப்போராளியாகச் செயல்பட்டுவருகிறார். பெண் அரசியல்வாதிகள் குறித்து இவர் எழுதிய ‘பெண் அரசியல்’ நூல் குறிப்பிடத்தகுந்தது.

களப்பணியால் உயரம் தொட்டவர்

காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணி, 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் வென்றார். மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்றதால் உள்ளூர் மக்களிடம் இவர் பெற்ற அபிமானத்துக்குக் கிடைத்த வெற்றி இது.
1975-ல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிறந்த ஜோதிமணி 20 வயதிலிருந்து அரசியலில் இயங்கிவருகிறார். 1996 முதல் 2006வரை கே.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். பெண்ணியம், சுற்றுச்சூழல், இலக்கியம் ஆகிய தளங்களிலும் தீவிரமாக இயங்கிவருகிறார். ‘ஒற்றை வாசனை’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘சித்திரக் கூடு’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

திமுகவின் முதன்மைப் பெண்

2019-ல் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மு.க.கனிமொழி, நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் நிகழ்கால முக்கியப் பெண் ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் என்ற அடையாளத்தைத் தாண்டி எழுத்து, களச் செயல்பாடு, அரசியல் ஆகிய தளங்களில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். 1990களில் இதழாளராகவும் கவிஞராகவும் கவனம்பெறத் தொடங்கிய கனிமொழி 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகநீதி உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.

SCROLL FOR NEXT