மருத்துவ சேவை
சௌமியா சுவாமிநாதன்
சென்னையைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன், ராணுவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பும் முடித்தார். சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் 1992-ல் பணியில் சேர்ந்தவர், பின்னாட்களில் அதற்கு இயக்குநராக உயர்ந்தார். ‘காசநோய் இல்லாத நகரத் திட்டம்’ என்ற திட்டத்தின் மூலம், உள்ளூர் அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து காசநோய் இல்லாத நகரங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அக்டோபர் 2017 முதல் மார்ச் 2019வரை உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்களுக்கான துணை இயக்குநர்கள் மூவரில் ஒருவராகப் பணியாற்றிய சௌமியா, மார்ச் 2019-ல் அதன் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். ‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் இவர்.
செயற்கைக்கோள் பெண்
முத்தையா வனிதா
இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்களை வழிநடத்தியவர்களில் ஒருவர் முத்தையா வனிதா. சந்திரயான் - 2 திட்ட இயக்குநர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றிவருகிறார். இளம் பொறியாளராகப் பணியில் சேர்ந்த இவர், வன்பொருள் சோதனை, மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்றி, நிர்வாகப் பணிகளிலும் பங்காற்றியிருக் கிறார். கார்டோசாட்-1, ஓசோன்சாட்-2 உள்ளிட்ட செயற்கைக்கோள்களின் திட்ட துணை இயக்குநராகப் பணி யாற்றியுள்ளார். 2013-ல் மங்கள்யான் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் முதல் திட்ட இயக்குநரான இவர், கோள்களுக்கு இடையேயான செயற்கைக்கோள் திட்டத்தை வழிநடத்திய முதல் பெண்.
பதக்க மங்கை
லாவண்யா
தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற லாவண்யா 32 பதக்கங்களைப் பெற்று கவனம்பெற்றவர். சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த இவர், ஐந்து வயதில் தந்தையை இழந்தவர். கிராமத்தில் தமிழ்வழிக் கல்வியில் படித்த இவர், கல்லூரியில் சக மாணவர்களின் அலட்சியத்துக்கு ஆளானார். அவர்களுடைய அலட்சியப் பார்வையை ஆச்சரியப் பார்வையாக மாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கடுமையாக உழைத்து, படிப்பின் நிறைவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். தமிழ்வழிக் கல்வியைப் பின்னணியாகக் கொண்ட லாவண்யாவுக்கு, ஆங்கிலத்தில் பயில்வது முதலில் சிரமமாகவே இருந்திருக்கிறது. இருந்தும், தீவிர பயிற்சிக்குப் பிறகு ஆங்கிலத்தை வசப்படுத்திவிட்டார்.
சேவையின் பாதையில்
கல்கி சுப்ரமணியம்
கவிஞர், ஓவியர், நடிகை, ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல ஆளுமைப் பண்புகளுடன் திகழ்பவர் கல்கி சுப்ரமணியம். ‘டிரான்ஸ்ஆர்ட்ஸ்’ என்னும் அமைப்பின் மூலமாக எண்ணற்ற திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பவர். கியூபிஸம், ஸ்பான்டேனியஸ், ரியலிஸம் போன்ற பாணிகளில் இவர் வரைந்த ஓவியங்களை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார். ‘சகோதரி’ என்னும் தன்னார்வ அமைப்பின்கீழ் எண்ணற்ற திருநங்கைகளின் கல்வி, பணி வாய்ப்புகள், கைவினைப் பயிற்சிகளை அளித்துவருகிறார். திருநங்கைகள் பலர் ஆண்களால் வல்லுறவுக்கு ஆளான கதைகளைத் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் திருநங்கைகள் தங்கள் கைப்பட எழுதியதை ‘மீடூ ஃபைல்ஸ்’ எனும் பெயரில் ஆவணப்படுத்திய பெரும் பணியையும் செய்திருக்கிறார் கல்கி.
முதல் விருது
ந. வளர்மதி
அரியலூரைச் சேர்ந்தவர் ந.வளர்மதி. தமிழ் வழியில் கல்வி கற்ற இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), இஸ்ரோ ஆகிய இரண்டு அமைப்புகளிலிருந்தும் பணிவாய்ப்பு வந்தபோது, வளர்மதி இஸ்ரோவைத் தேர்ந்தெடுத்தார். ஜிசாட்-7, இன்சாட்-2ஏ, ஐஆர்எஸ்-1சி, ஐஆர்எஸ்-1டி, ஜிசாட்-14 உள்ளிட்ட பல செயற்கைக்கோள் திட்டங்களில் வளர்மதியின் பங்களிப்பு உண்டு. ரிசாட்-1 திட்டம் தொடங்கப் பட்டபோது, திட்ட துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், 2011-ல் அதன் திட்ட இயக்குநராக உயர்ந்தார். உள்நாட்டிலேயே உருவான ரிசாட்-1 செயற்கைக்கோளின் வெற்றிப் பயணம் 2012-ல் சாத்தியமானது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு 2015-ல் நிறுவிய விருதைப் பெற்ற முதல் பெண்ணும் இவரே.
ஆடல் கலையே அடையாளம்
நர்த்தகி நடராஜ்
தூர்தர்ஷனில் நேரடியாக கிரேடு ஆர்ட்டிஸ்டாகத் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வெகு சிலரில் இடம்பிடிப்பவர், பிரபல நட்டுவனார் தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையின் மாணவியான நர்த்தகி நடராஜ். அவர் பத்ம விருதைப் பெற்றவுடன் அளித்த பேட்டியில், “நான் திருநங்கையாக இருப்பது என் அடையாளம். எனது கலைக்கான அங்கீகாரமே இந்த விருதுகள்” என்றார். பாரம்பரியமான பரதநாட்டிய கலையைப் பாதுகாப்பது, பரப்புவது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு, அது சார்ந்த ஆய்வுப் பணிகளிலும் பாரம்பரியம் மாறாத நடனத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதிலும் முனைப்போடு ஈடுபட்டுவருகிறார்.
உழவுப் புரட்சி
பிரசன்னா
மதுரை திருப்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் படிப்பும் முடித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டியவர், நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பெற்று, சிறந்த விளைச்சலுக்கான விருது பெற்றார். ஆண்களால் மட்டுமே ஆகக்கூடியது என்ற கருத்துக்கு வேளாண்மையும் தப்பவில்லை. ஆனால், பெண்களாலும் வேளாண்மையைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதற்கு பிரச்சன்னா ஓர் உதாரணம். நம் மரபு விவசாய முறைகளை விட்டுவிடாமல், காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிற நேர்த்திதான் பிரசன்னாவுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
பல்கலைக்கழக பெருமை
ஏ. ரேவதி
எழுத்தாளராகவும், திருநங்கைகளின் வலியைப் பேசும் தனிநபர் நாடக நிகழ்த்துக் கலைஞராகவும் கவனம் ஈர்த்துவருபவர் சமூகச் செயற்பாட்டாளர் ரேவதி. திருநங்கைகளைப் பற்றி மட்டும் எழுதாமல் திருநம்பிகள் குறித்தும் எழுதிவருபவர். இவரின் சுயசரிதையை ‘எ ட்ரூத் அபவுட் மீ’ என்னும் பெயரில் பெங்குவின் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதன்பின் தமிழிலும் ‘வெள்ளை மொழி’ எனும் பெயரில் வெளிவந்தது. இந்தப் புத்தகம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், லண்டன், சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பாலினம் குறித்த பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பட்லர் நூலகத்தின் முகப்பில் இடம்பெற்றுள்ள பதாகையில் மாயா ஆஞ்சலோ, டோனி மோரிசன் போன்ற பெண் படைப்பாளிகளின் பெயர்களோடு ரேவதியின் பெயரும் அண்மையில் இடம்பிடித்திருக்கிறது.
திறமைக்குப் பரிசு
பிரித்திகா யாஷினி
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்தபோதே, திருநங்கை என்ற காரணத்தால் பிரித்திகா யாஷினியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, தேர்வெழுதுவதற்கான உரிமை பெற்றார். உடல் தகுதித் தேர்வில் 100 மீ. தொலைவை 1 நிமிடம் கூடுதலாக எடுத்துக்கொண்டு கடந்ததால், உடல் தகுதித் தேர்வில் அவர் நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தனர். இதை எதிர்த்தும் மீண்டும் உடல் தகுதி பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். மீண்டும் 100 மீட்டர் தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் (17.5 நொடிகள்) கடந்து தனது உடல் தகுதியை நிரூபித்தார். சாதகமான இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியாவிலேயே முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்னும் பெருமைக்கு உரியவரானார் பிரித்திகா யாஷினி.