என்.சன்னாசி
தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியில் சேர்வதற்காகப் போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. வசதி படைத்த பலர் நகர்ப்புறப் பயிற்சி மையங்களில் சேர்ந்து, போட்டித் தேர்வுகளை எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த காமாட்சிக்கு அதெல்லாம் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், தன் முயற்சியை அவர் கைவிடவே இல்லை. அதுதான் இன்று அவரை டி.எஸ்.பி. நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. அவருடைய அப்பா பாலகிருஷ்ணன் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு 2005-ல் காமாட்சிக்குத் திருமணம் நடந்தது. கணவர் மகாலிங்கம் பட்டாசு ஏஜென்ஸியை நடத்திவருகிறார்.
இவர்களுக்கு 12 வயதில் மகனும் எட்டு வயதில் மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு தையல் பழகுவது, இந்தி படிப்பது எனத் தனக்கெனச் சிறு அளவு நேரத்தை ஒதுக்கினார். பத்தாவதுடன் முடிந்துவிட்ட கல்விப் பயணத்தை மீண்டும் தொடர நினைத்தார் காமாட்சி. 2013-ல் தனித்தேர்வராகப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதினார்.
முதல் முயற்சியிலேயே 1070 மதிப்பெண்களை எடுத்து அனைவரையும் வியக்கவைத்தார். அந்த வெற்றி அவரது கனவையும் லட்சியத்தையும் விசாலமாக்கியது. போட்டித் தேர்வெழுதி அரசு வேலையில் சேர விரும்பினார். கிராமத்துச் சூழலில் வளர்ந்த நம்மால் அது முடியுமா என்ற தயக்கம் தோன்றினாலும் நொடிப்பொழுதில் அந்தத் தயக்கத்தை விரட்டினார்.
சிவகாசியிலுள்ள சுப்புராம் என்பவரை அணுகினார். அவரது வழிகாட்டுதலில் 2014-ல் குரூப்-4 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிபெற்றார். மதுரையின் வேளாண்மைத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
தமிழ் வழியில் வெற்றி
அடுத்தடுத்து இரு வெற்றி, உடனே அரசுப் பணி போன்றவை காமாட்சியின் தன்னம்பிக் கையை அதிகரித்தன. தேர்வு குறித்த புரிதலுடன் நம்பிக்கை வலுத்தது. அஞ்சல் வழியில் 2018-ல் பி.ஏ. தமிழ் இலக்கியம் முடித்தார். குரூப்-1 தேர்வெழுத நினைத்தார். மதுரை கே.கே.நகரில் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்திவரும் ராஜராஜனைச் சந்தித்தார். காமாட்சியின் ஆர்வத்தை உணர்ந்த அவர், காமாட்சியால் சாதிக்க முடியும் என ஊக்குவித்தார்.
குரூப் -1 தேர்வைத் தமிழில் எழுதி முதல்நிலைத் தேர்வில் வென்றார். முதன்மைத் தேர்வுக்குக் குறுகிய காலமே இருந்தது. பயிற்சி மையத்திலும் சில மாதங்களே படித்தார். ஆனால், அந்தப் பயிற்சி காமாட்சியின் தேடலைச் செம்மையாக்கியது. 2019-ல் நடந்த குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் ஒரே முயற்சியில் தேர்வானார். நேர்காணலிலும் வென்றார்.
“தேர்வில் வென்றபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எந்தப் பணியைத் தேர்வு செய்வது என்ற நிலை. பெண்களுக்குத்தான் இங்கே ஆபத்து அதிகம். நானும் பெண் என்ற முறையில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவலாம் என்ற நம்பிக்கையில் காவல் துறைப் பணியைத் தேர்ந்தேடுத்தேன்.
நான் டி.எஸ்.பி.யாகத் தேர்வானதில் என் கிராமத்துக்கே பெருமை. நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதாக என் கிராமத்தினரும் உறவினர்களும் நினைத்திருந்தனர். நான் டி.எஸ்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். நிச்சயம் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பர்” என்று சிரிக்கும் காமாட்சி, தன் வெற்றிக்குத் தன் கணவர் மகாலிங்கமே காரணம் என்கிறார்.
திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் வீட்டு வேலைகளைச் செய்தபடிதான் படித்தார் காமாட்சி. தினமும் வேலையெல்லாம் முடித்து இரவு பத்து மணிக்குத் தொடங்கி அதிகாலை நான்கு மணிவரை படிப்பார். மனைவி படிக்கிறார் என்பதற்காக காமாட்சியின் கணவரும் விழித்திருப்பார்.
“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம். இலக்கு நிர்ணயித்து உழைத்தால் இந்திய ஆட்சிப் பணி, குரூப்-1 தேர்வு போன்றவற்றில் எல்லாம் நிச்சயம் வெல்லலாம். வசதி படைத்தவர்களால் மட்டுமே இவை முடியும் என்பதெல்லாம் கிடையாது.
பார்வையற்றோருக்கு நல்ல கல்வியைத் தருவதும் வேலை வாய்ப்பை உருவாக்க உதவுவதும் எனது லட்சியம். தேர்வுகளை எதிர்கொள்ளத் தரமான புத்தகங் களைப் படித்தாலும் பயிற்சி மையத்தின் வழிகாட்டுதலும் தேவை. வேளாண் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் இயக்குநர்கள், ஊழியர்கள், மதுரை ஐஏஎஸ் அகாடமி ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பாலும் இந்த இலக்கை எட்டினேன்” என்கிறார் டி.எஸ்.பி. காமாட்சி!