பெண் இன்று

நாயகி 07: விஜயலஷ்மியின் வாழ்க்கைத் துணை

செய்திப்பிரிவு

ஸ்ரீதேவி மோகன்

வாழ்க்கைத் துணை என்னும் வார்த்தை ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு ஒருவிதமாகவும் அர்த்தம் கொடுப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை அப்படித்தானே வளர்க்கப்பட்டிருக்கிறோம்; வார்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், ‘வாழ்க்கைத் துணை என்பது வாழ்நாள் சுமையாக இருக்கக் கூடாது’ என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறாள் ‘துணை’ (தொகுப்பு: ஒரு பெண்ணின் கதை, தெலுங்கில் – ஓல்கா, மொழிபெயர்ப்பு – கௌரி கிருபானந்தன்) கதையின் நாயகி விஜயலஷ்மி.

மனைவி சுசிலாவை இழந்த கங்காதரனுக்குப் பிள்ளைகளின் வீட்டுக்குச் சென்று வாழ விருப்பமில்லை. அதே நேரம், தன்னைக் கவனித்துக்கொள்ள மனைவி இல்லாத சோகத்தில் வீட்டைப் பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை. வீட்டில் எல்லாமே போட்டது போட்டபடி குப்பையாக இருக்கிறது.

சுசிலா இறந்த இரண்டு மாதங்களில் பக்கத்து வீட்டில் இருக்கும் விஜயலஷ்மி, ஒரு விபத்தில் தன் கணவரை இழக்கிறாள். ஆனால், சில நாட்களிலேயே துக்கத்திலிருந்து மீண்டு வந்து தன் வீட்டு வேலை, ஆசிரியப் பணி என இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுகிறாள். மகன்கள் இருந்தும் விஜயலஷ்மி தானே சம்பாதித்து தனியே வாழவே விரும்புகிறாள்.

மலர்ந்த நட்பு

அவளுடைய இயல்பு நிலை கங்காதரனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து கிறது. அதை விஜயலஷ்மியிடம் வெளிப்படுத்துகிறான். அதற்கு விஜயலஷ்மி, “நீங்கள் எல்லா விஷயத்திலும் உங்கள் மனைவியின் சேவையில் சுகித்திருந்தீர்கள். ஆனால், நானோ அவருக்குத்தான் பணிவிடைகள் செய்து வந்தேன். இதுதான் வித்தியாசம்” என்கிறாள்.

ஏற்கெனவே குடும்ப நண்பர்களாக இருந்த இவர்கள் இப்போது மேலும் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள். ஒருநாள் கங்காதரன் விஜயலஷ்மியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்கிறான். அதற்கு அவள், “இந்த வயதில் நான் எனக்காக வாழ வேண்டும். யாருக்காகவும் அட்ஜஸ்ட் செய்து வாழ விருப்பமில்லை.

உங்களுக்கு சிசுருஷை செய்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை” என்று கூறி மறுத்துவிடுகிறாள். அதன் பிறகு கங்காதரன், ஆண் என்ற தன் கர்வத்தைத் தவிர்த்து, வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்கிற இல்லற சமத்துவத்தின் பொருளையும் அவள் மனத்தையும் அவள் விரும்பும் சுதந்திரத்தையும் பரிபூரணமாக உணர்கிறான். அதன் பின் விஜயலஷ்மி அவனை ஏற்றுக்கொள்கிறாள்.

சமநிலையற்ற இல்லறம்

குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி என்று பெயரில் சம உரிமை இருந்தாலும் குடும்பத்தில் பெரும் முடிவுகளை எடுப்பதில் தொடங்கி, அதிகபட்ச அதிகாரம் அனைத்தும் ஆணிடமே இருக்கிறது. பல வீடுகளில் வாழ்க்கைத் துணையானவள் கணவனின் முழுத் தேவையையும் கவனித்துக்கொள்ளும் சேவகிதான். சின்ன சின்ன உரிமைகள், சின்ன சின்ன சலுகைகள் என்று கயிறு கட்டிவிடப்பட்ட, சுதந்திரம் மறுக்கப்பட்ட அடிமைதான்.

தன் எண்ணங்களை வெளிப்படுத்தவோ தன் ரசனைகளைக் கொண்டாடவோ இயலாத வெறுமைதான் பல பெண்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. ஒருவேளை அந்த வீட்டின் பெண், கணவனைவிட அதிகம் சம்பாதிப்பவளாக இருந்தாலுமே அங்கே ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மைதான் உண்டாகுமே தவிர இயல்பான சமநிலை என்பது குதிரைக்கொம்புதான்.

அதனால்தான், “ஒரு ஆணுக்குத் துணையாய் இருக்கணும் என்றால் சிசுருஷைதான் என்பது என் எண்ணம். அந்தத் துணை உங்களுக்கு எதற்காகத் தேவையோ சரியாக அதே காரணத்துக்காக எனக்குத் துணை வேண்டியதில்லை” என்கிறாள் விஜி. உலகம் வரையறுத்திருக்கும் விதிமுறைகளை மாற்றி, கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் பெருமுயற்சி விஜயலஷ்மியினுடையது.

SCROLL FOR NEXT