பெண் இன்று

வானவில் பெண்கள்: முயலால் கிடைத்த முன்னேற்றம்

செய்திப்பிரிவு

கி.மகாராஜன்

நாம் ஒருவரைத் தோற்கடித்துவிட முடியும்; ஆனால், வீழ்த்த முடியாது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டுவருபவர் சத்யா. மண வாழ்க்கை ஏற்படுத்திய ரணத்தின் வலியில் தொலைந்துபோகாமல் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சத்யாவுக்கு 32 வயது. ‘முயல் சத்யா’ என்றே பலரும் அவரை அழைக்கின்றனர். எம்ஏ., பிஎட்., படித்துள்ளார். தந்தை திடீரென இறந்துபோக, கட்டாயத் திருமண பந்தத்துக்குள் தள்ளப்பட்டார்.

“என்னைத் மணந்துகொண்டவர் ஆசிரியராகப் பணிபுரிவதாகச் சொல்லித்தான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆசிரியரல்ல என்பது திருமணத்துக்குப் பிறகே தெரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு அவர் வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்தினார்.

அவரது அடிக்குப் பயந்து அடிக்கடி வீட்டிலி ருந்து பணம் வாங்கி வந்து கொடுத்தேன். பணம் போதவில்லை என்று என்னை அடித்து பிறந்த வீட்டுக்கே அனுப்பிவைத்தார். நான் அப்போது கருவுற்றிருந்தேன். கர்ப்பிணி என்றுகூட அவர் நினைக்கவில்லை” என்று கசப்பின் கசடுகளைத் துடைத்தெறிந்தபடி சொன்னார் சத்யா.

சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் அவருடன் சேர்ந்து வாழ அவருடைய கணவர் முடிவுசெய்தார். ஆனால், குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது தெரிந்ததும் சத்யாவை மீண்டும் பிரிந்துவிட்டார். அம்மா, அண்ணனின் ஆதரவுடன் மிகுந்த சிரமத்துக்கு இடையே இதய அறுவை சிகிச்சை செய்து மகன் அபிஷேக்கைக் காப்பாற்றினார் சத்யா.

முன்னேற்றமே பதில்

கருங்காலகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினக்கூலிப் பணியாளராக இருந்தபோது, முதியவர் ஒருவரைச் சந்தித்தார் சத்யா. அவருக்கு ஐந்து பிள்ளைகள். யாரும் அவரைக் கவனிக்கவில்லை. தான் வளர்க்கும் முயல்களே தனக்குச் சோறு போடுகின்றன என்று அவர் சத்யாவிடம் தெரிவித்தார்.

தள்ளாடும் வயதில் முயல் பண்ணை நடத்தும் அவரைப் போல் நாமும் சுயதொழில் செய்யலாமே என்று சத்யா யோசித்தார். ஐந்து முயல்கள் வாங்கி வீட்டில் வைத்து வளர்த்தார். அது பல்கிப் பெருகி இப்போது 350 முயல்களாகப் பெருக்கமடைந்திருக்கிறது.

“முயல்களைக் காலை, மாலை மட்டும் பராமரித்தால் போதும். இதனால், பகலில் மற்ற வேலைகளுக்குச் செல்கிறேன். என் பண்ணையில் பிறக்கும் முயல் குட்டிகள் திருச்சி, கரூர், நாமக்கல் உட்படப் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாதம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது” என்கிறார் சத்யா.

முயல்களைக் குழந்தைகள்போல் பெயர் வைத்துப் பார்த்துக்கொள்ளும் சத்யா, நோய்த் தொற்று ஏற்பட்டால் இயற்கை முறையில் மருந்து கொடுப்பது, மண்பானை மூலம் சொட்டுநீர் வழங்குவது, மூலிகை உணவு வழங்குவது எனப் பரபரப்பாக இயங்கிவருகிறார்.
“தொடக்கத்துல நிறையச் சிரமங்களைச் சந்தித்தேன்.

ஆனால், முறையாகக் கவனித்தால் வருமானத்தை அள்ளலாம் என்பதைப் போகப் போக உணர்ந்துகொண்டேன். முயல் வளர்ப்புக்கு என் பண்ணையிலேயே இலவசப் பயிற்சி வழங்குகிறேன். பயிற்சி பெற்றவர்கள் வளர்த்துக் கொடுக்கும் முயல்களை நானே சந்தைப்படுத்திக்கொடுக்கிறேன்” என்கிறார் சத்யா.

தான் மட்டும் முன்னேறினால் போதாது; தன்னைப் போல் வாழ்வில் விரக்தியை எதிர்கொண்டவர்கள் பலரும் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதுவரை 21 பேர் முயல் பண்ணை தொடங்க உதவியுள்ளார் சத்யா. தற்போது கொட்டாம்பட்டியில் 20 சென்ட் இடத்தில் முயல்களுடன் கின்னிக்கோழி, கின்னிபெக், நாட்டுக் கோழி, கருங்கோழி, புறா, நாய் போன்றவற்றை வைத்து ஒருங்கிணைந்த பண்ணையை நடத்திவருகிறார். தன்னைச் சுழற்றியடித்த துரோகத்துக்கு இந்த முன்னேற்றத்தின் மூலம் தன்னால் முடிந்த அளவுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் சத்யா.

SCROLL FOR NEXT