பெண் இன்று

போகிற போக்கில்: அழியாத கோலங்கள்

செய்திப்பிரிவு

என்.கணேஷ்ராஜ்

புள்ளிக்கோலம், ரங்கோலி போன்றவற்றை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் அமிர்தா. ஓவியத்தை விஞ்சிவிடுகிற நேர்த்தியுடன் கோலம் வரைவது அமிர்தாவின் சிறப்பு.

விசேஷ நாட்களில் கோலம் போடவே பலரும் அலுத்துக்கொள்வோம். ஆனால், 32 ஆண்டுகளாக விதம் விதமாகக் கோலம் வரைந்துவருகிறார் அமிர்தா. தேனியைச் சேர்ந்த ஆசிரியையான இவர் கோலத்தில் கூடக் கண்ணைக் கவரும் உருவங்களை உருவாக்கி ஒளியின் ஜாலங்களைப் பிரதிபலிக்கவும் முப்பரிமாண முறையில் அசத்தவும் முடியும் என்று நிரூபித்துவருகிறார். இவர் வரையும் உருவக் கோலங்களை ரசிக்காதவர் குறைவு.

தினமும் இவரது வீட்டைக் கடந்து செல்பவர்கள் இவர் வரைந்திருக்கும் கோலத்தைச் சில நொடிகளாவது ரசித்துவிட்டே கடக்கின்றனர். வாசலை நிறைந்திருப்பது ஓவியமா கோலமா என்று குழம்புகிறவர்களும் உண்டு. கோலம்தான் என்று சொன்னாலும் அவ்வளவு எளிதில் நம்புவதில்லை. அவ்வளவு நேர்த்தியுடன் இருப்பவை அமிர்தா வரையும் கோலங்கள்.

எண்ணமெல்லாம் வண்ணம்

பொதுவாக ஒவ்வொரு வண்ணத்திலும் அடர் நிறம், வெளிர் நிறம் ஆகிய இரு வகையைத்தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், அமிர்தாவோ ஒவ்வொரு வண்ணத்திலும் 50, 60 வகையான பொடிகளை வைத்திருக்கிறார். மொத்தத்தில் 600-க்கும் மேற்பட்ட வண்ணப் பொடிகளை வைத்திருக்கிறார்.

உருவக் கோலங்களை இவை உயிர்பெறச் செய்கின்றன. மணலை மட்டுமே வைத்து ஒரு கோலம், மார்பிள் தூளை வைத்து ஒரு கோலம் என்று கோலக்கலையில் புதுப்புது உத்திகளைக் கைக்கொள்கிறார். அதற்காகப் பல ஊர்களுக்கும் சென்று பலநிற மண்ணைச் சேகரித்துவருகிறார்.

"எங்கள் குடும்பத்தில் பலருக்கும் கலையார்வமும் ரசனையும் அதிகம். இதனால், எனக்கும் இயல்பாகவே கோலம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. மற்றவர்களைப் போல் இல்லாமல் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கோலங்களில் உருவங்களை வரையத் தொடங்கினேன். மண்ணின் தன்மையே நூற்றுக்கணக்கான வண்ணங்களை உருவாக்குகிறது.

இதற்காக தூத்துக்குடி, திருச்செந்தூர், உவரி, முயல்தீவு, ராமேஸ்வரம் என்று கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று மண்ணைச் சேகரிப்பேன். பார்க்க ஒரே வண்ணம் போலத் தெரிந்தாலும் அதில் நுணுக்கமான வேறுபாடு இருக்கும். புத்தர், கங்கைகொண்ட சோழபுரம், ராதை, கோழிக் குஞ்சுகள், ஆண்டாள், முப்பரிமாண வண்ணத்துப்பூச்சி என்று ஏராளமான உருவங்களைக் கோலத்தில் உருவாக்கி இருக்கிறேன்.

கடந்த ஓராண்டாகவே இயற்கைக் காட்சிகளைக் கோலமாக வரைந்துவருகிறேன். சில கோலங்களை வரைய 16 மணி நேரம்கூட ஆகும். கோலத்தை வரைந்து முடிக்கும்வரை யாருடனும் பேச மாட்டேன்; தண்ணீர்கூடக் குடிக்க மாட்டேன்" என்கிறார் அமிர்தா. கோலத்தைக்கூடக் காலத்தைக் கடந்து நிற்கும் வகையில் கலையாக மாற்றிக் காட்டிய இவரின் ஈடுபாடும் ரசனையும் பாராட்டுக்குரியவை.

SCROLL FOR NEXT