ஒய். ஆண்டனி செல்வராஜ்
பெண்களுக்கு இயல்பாக ஆகிவந்த குணங்களில் முக்கியமானது பொறுப்புணர்வு. பெண்களின் பொறுப்புணர்வே வீட்டையும் சமூகத்தையும் சமநிலை குலையாமல் வைத்திருக்க உதவுகிறது. மதுரை பாஸ்டியன் நகரைச் சேர்ந்த ஜாய் மோகனும் அப்படியான பொறுப்புணர்வு நிறைந்தவர். மதுரை மாநகராட்சியில் 60 சதவீதக் கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு இருக்கிறது.
மீதமுள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முயன்றும், பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. மழையும் ஓரளவு பெய்துவிட்டதால் மக்களிடம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை அமைக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. அதனால், ஜாய் மோகன், தன்னார்வத்துடன் வீடு, வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு சர்வே செய்தார்.
கல்விக்கும் உதவி
இதுவரை 520 வீடுகளை அவர் ஆய்வு செய்துள்ளார். வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களைப் பயன்படுத்தச் சொல்லியும் அமைக்காத வீடுகளில் அமைக்குமாறும் வலியுறுத்திவருகிறார். இவரது முயற்சிக்குத் தற்போது கைமேல் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
தான் சர்வே செய்த வீடுகளில் 110 வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைக்க வைத்துள்ளார். இவரது சேவையை அறிந்த மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், ஜாய் மோகனை அழைத்துப் பாராட்டியுள்ளார். அவரது சேவையை ஊக்கப்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாநகராட்சியின் விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கும் பொறுப்பை ஜாய் மோகனிடம் ஒப்படைத்துள்ளார்.
‘‘என்னோட வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் சேகரமாகும் தண்ணீரைத்தான் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். கடந்த ஆண்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்தபோது நாங்கள் மட்டுமே சேமித்து வைத்த தண்ணீரைப் பயன்படுத்தினோம்.
எங்க தேவைக்குப் போக இருந்த தண்ணீரை மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் அடைந்த இந்தப் பயனை மற்றவர்களும் பெறணும் என்பதற்காகத்தான் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு செய்கிறேன்.
காலை 10 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுவேன். மதியம் 3.30 மணிக்குத்தான் திரும்பி வருவேன். இந்தியன் வங்கி மேலாளராக இருந்த என் கணவர் இறந்துவிட்டார். ஒரு மகனும் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருக்கிறார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.
என் சகோதரர் சேவியர் பிரிட்டோ சென்னையில் தொழில் முனைவோராக உள்ளார். அவரும் நானும் சேர்ந்து கல்விக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வருகிறோம். குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு வருடமும் இரண்டேகால் லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறோம். இந்த ஆண்டு இதுவரை 17 பேர் பயனடைந்துள்ளனர்’’ என்கிறார் ஜாய் மோகன்.