பெண் இன்று

பெண்கள் தலைமைப் பொறுப்பு வரவேண்டும்- நேர்காணல்: ஆய்ஷி கோஷ்

செய்திப்பிரிவு

ஆய்ஷி கோஷ் - நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் உச்சரிக்கும் பெயர் இது. இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர், வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 2019 அக்டோபர் மாதம் விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். மாணவர் பேரவைத் தலைவர் ஆய்ஷி கோஷ் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது 2020 ஜனவரி 5 அன்று மர்ம நபர்கள் சிலர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேராசிரியர்கள், மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் இடக்கை உடைக்கப்பட்டு நெற்றியில் வெட்டுக் காயத்துடன் தாக்குதல் குறித்து ஆய்ஷி கோஷ் பேசிய காணொலி, வைரலானது.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகும் மாணவர்கள் தங்களுடைய போராட்டத்திலிருந்து பின்வாங்க வில்லை. இதன் பின்னர் ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் புதிய விடுதிக் கட்டணத்தை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த இந்த வெற்றி இந்திய மாணவர்கள் மத்தியில் புது நம்பிக்கையை விதைத்தது. இந்நிலையில் சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ‘தேசம் காக்க பல்கலைக்கழகங் களைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பிலான கருத்தரங் கில் கலந்துகொள்ள வந்திருந்த ஆய்ஷி கோஷ், மாணவர் சமூகம் குறித்த பல்வேறு கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்:

இன்றைய சூழலில் மாணவர் களுக்கு அரசியல் தேவையா?

நிச்சயமாக. இன்றைய சூழலில் தான் ஒவ்வொரு மாண வரும் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். குறிப்பாக மதத்தின் பெயரால் மாணவர்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக அணிதிரள்வது அவசியம். போராடினால்தான் கல்வி கிடைக்கும் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. மூன்றாம் வகுப்புக் குழந்தைக்குக்கூடப் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப் படுகிறது. உயர்கல்வி நிறுவனங் களில் இட ஒதுக்கீட்டு அடிப்படை யில் வழங்கப்படும் இடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் ‘நீட் தேர்வு’ பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால், பாதிக்கப் படுகிறவர்கள் ஏழை மாணவர்கள்தாம். இப்படியொரு சூழலில் மாணவர்கள் தங்களுடைய உரிமைக்காக அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

நீங்கள் மாணவ செயற்பாட்டாளராக மாறியதன் பின்னணி என்ன?

பள்ளியில் படிக்கும்போது நானும் மற்ற மாணவர்களைப் போல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவள்தான். ஆனால், இளங்கலைப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் போராட்டக் களம் எனக்கு அறிமுகமானது. அப்போது மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நானும் அதில் கலந்துகொண்டேன். இதுதான் என் முதல் போராட்ட அனுபவம். அதன் பின்னர் இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினரானேன். படிப்பதுடன் மாணவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகப் போராடிவருகிறேன்.

நீங்கள் ஜேஎன்யூ மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என நினைத்ததுண்டா?

நிச்சயமாக இல்லை. ஜேஎன்யூவில் படிக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. இளங்கலை அரசியல் அறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது, சமூகவியல் சார்ந்து படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பை ஜேஎன்யூவில் படிக்க வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்தினார்கள். ஏனென்றால், ஜேஎன்யூ மற்ற பல்கலைக் கழகங்களைப் போல் அல்லாமல் மாணவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய இடம். இந்தியாவின் மாறுபட்ட முகத்தை இங்கே பார்க்க முடியும். இதனால், எப்படியாவது ஜேஎன்யூவில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். தற்போது ஜேஎன்யூவில் பன்னாட்டு உறவுகள் துறையில் பருவநிலை மாற்றம் குறித்த முனைவர் பட்ட ஆய்வை நான்கு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளேன். படிப்பது முதல் விஷயமாக இருந்தாலும் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தக் கோரி போராட வேண்டியும் உள்ளது.

குறிப்பாக ஜேஎன்யூ மாணவர் நஜீப் அகமத் காணாமல் போனது, பல்கலைக்கழகம் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவருகிறது என்பதை உணர வைத்தது. மாணவர்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் இடமாக ஜேஎன்யூ மாறக் கூடாது என்பதற்காகத்தான் மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்டேன். முதுநிலை படிக்கும்போது துறை கவுன்சிலராக இருந்தேன். இப்போது மாணவர் பேரவைத் தலைவராகப் பணியாற்றிவருகிறேன்.

பெண் என்பதால் நீங்கள் பாகுபாட்டைச் சந்தித்தது உண்டா?

ஆமாம். பொதுவாக மாணவர் பேரவைத் தலைவர் ஆணாக இருந்தால் அவருடைய தோற்றம், நிறம், உடல்வாகு போன்ற எந்தக் கேள்வியும் மற்றவர்களுக்குத் தோன்றாது. ஆணாக இருப்பதே அவர்களுக்குப் போதுமான தகுதி யாகிவிடும். ஆனால், பெண் ஒருவர் மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருடைய உருவம், உயரம் உள்ளிட்டவை பேசுபொருளாக உள்ளன. பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிறையப் பேர் “இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய். நீயா மத்திய அரசைக் கேள்வி கேட்கிறாய்?” எனக் கேலி பேசியதுண்டு. தலைமைப் பொறுப்பில் உள்ள பெண்களின் உருவமோ உயரமோ நிறமோ முக்கியமல்ல. நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்படுவதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறிர்கள்?

பொதுவெளியில் இயங்கும் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்வது இது. நான் மனத்தளவில் உறுதியாக உள்ளேன். என்னைப் பற்றிய தவறான கருத்துகள் எழுதப்பட்டால் நான் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இதுபோன்ற முட்டாள்தானமான விஷயங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஜேஎன்யூ தாக்குதலுக்குப் பிறகு என் ஒளிப்படத்தை இந்துத்துவ அமைப்பினர் தவறாகச் சித்தரித்தனர். அவர்களின் இந்தச் செயல் கொஞ்சம் யோசிக்கவைத்தது. பொதுமக்கள் என்னைப் பற்றித் தவறாக நினைப்பார்களோ என எண்ணினேன். ஆனால், நான் இன்றைக்குச் செல்லும் இடங்களில் அன்புடன் என்னை வரவேற்கிறார்கள். அப்போதுதான் வலைத்தளத்தில் நடக்கும் கேலிகள் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்தேன்.

பெண்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்துத்தான் ராணுவத்தில் பெண்களுக்கு உயர்பதவிகளில் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் குஜராத் மாநிலத்தில் மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை நடத்தப்படுகிறது. இதுபோன்ற ஒடுக்குமுறை அனைத்து மட்டங்களிலும் உள்ளது. என் குடும்பத்திலேயே மேற்கு வங்கம் தாண்டி வெளியே வந்து படிக்கப் பல போராட்டங்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. கல்வி மூலம் நான் பெற்ற அறிவால் குடும்பத்தினரின் எண்ணத்தை மாற்ற முடிந்தது. பெண்களுக்குக் கல்வி அவசியம். சமூகத்தில் நிலவும் பாகுபாட்டை, பெண் கல்வியால் மாற்ற முடியும்.

இந்திய மாணவர்களின் முகமாகக் கருதப்படு கிறீர்கள். உங்களைப் பெண் செயற்பாட்டாளராக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

நான் தைரியமாகப் போராடுகிறேன் என்றால் அதற்கு சாவித்திரிபாய் புலே, கேப்டன் லட்சுமி ஷெகல் போன்ற சமூக மாற்றத்துக்காகப் போராடிய பெண்களே காரணம். தற்போது மற்றப் பெண்களுக்கு நானும் சிறு உந்துசக்தியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. கல்வியைத் தனியார்மயப்படுத்துதல், கல்விக்குக் குறைந்த அளவு ஒதுக்கப்படும் நிதி, மாணவர்களை சாதி, மத ரீதியாகப் பிரிப்பது போன்றவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறேன். இன்று நாட்டில் நடக்கும் பல போராட்டங்களுக்குப் பெண்களே தலைமை வகிக்கிறார்கள்.

மக்களைப் பாதிக்கும் விஷயத்துக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அதற்கு எதிராக எழுப்பப்படும் குரல்களில் என்னுடையதும் இருக்கும்.

SCROLL FOR NEXT