பெண் இன்று

நாயகி 05: சம்யுக்தாவின் செகண்ட் ஷோ

செய்திப்பிரிவு

“எவ்ளோ வேணா அழுதுக்கோ. ஆனா, நீ அழறது இன்னியோட கடைசியா இருக்கட்டும்” - இது, செய்யாத தவறுகளுக்காக நிதம் நிதம் அழுதுகொண்டிருக்கும் பெண்களுக்கு அருணா ராஜ் எழுதிய ‘செகண்ட் ஷோ’ (தொகுப்பு: கருப்பி) சிறுகதையில் வரும் சம்யுக்தா சொல்லும் ஆலோசனை. அதானே, நாம் ஏன் அழவேண்டும்? தவறு செய்தவர்களை அழவைக்கும் துணிவு உண்டானால் பெண்களே இனி அழுகைக்கு இடமில்லை.

கணவருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தும் தன் இரு மகள்களின் வாழ்கைக்காக அமைதிகாக்கும் தாய் மேகலா, அதைத் தன் மகள்களுக்குத் தெரியாமலும் பார்த்துக்கொள்கிறார். ஒருநாள் அப்பாவின் விஷயம் சம்யுக்தாவுக்குத் தெரியவருகிறது. அதைத் தன் அம்மாவிடம் அதிர்ச்சியாகச் சொல்லும்போது, அதற்கு அவளுடைய தாய் கொடுக்கும் எதிர்வினை அவளுடைய கோபத்தைக் கூட்டுகிறது.

தவறு செய்யும் அப்பாவை விடவும் அந்தத் தவறு தெரிந்தும் அதை இவ்வளவு ஆண்டுகளாகத் தங்களிடமிருந்து மறைத்து அமைதிகாக்கும் அம்மாவின் மேல் அதீத கோபம் வருகிறது. ஆனால், அம்மா அதை மறைப்பதற்கான காரணம் தெரிந்தவுடன் அம்மாவுக்குத் தைரியம் சொல்லி, திடமான முடிவெடுக்கச் செய்து அம்மாவை முன் நகர்த்துகிறாள் சம்யுக்தா.

ஆணுக்குத் தனி நீதியா?

புருஷன் வேறொருத்தியுடன் போய் விட்டால் பெண் பிள்ளைகளுக்குத் திருமண வாழ்வு அமையாதோ என்ற தட்டையான சிந்தனையோடு இருக்கும் தன் தாய்க்கு மட்டுமல்ல, இது போன்ற சிந்தனைகொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் தன் வார்த்தைகளால் நிதர்சனத்தை உணர்த்துகிறாள் சம்யுக்தா.

“ம்மா, இதுதான் என் ஃபேமிலி. இதுதான் நான். இந்த அடிப்படையான விஷயத்தைக்கூடப் புரிஞ்சிக்க முடியாதவனை எல்லாம் ஆம்பளைன்னு எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற?” என்று கேட்கும் அவள், அப்படிப் புரிந்துகொள்ள முடியாதவனைத் திருமணம் செய்வதைவிட முட்டாள்தனம் இல்லை என்பதையும் தாய்க்குப் புரிய வைக்கிறாள்.

“நீ இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணிட்டு வந்து, அவருக்கும் மேட்டர் தெரிஞ்சு போய், அவரை மாதிரியே ஒண்ணுமே நடக்காத மாதிரி அஞ்சு வருஷம் உன்னை இந்த வீட்ல வாழ உட்ருப்பாரா உன் புருஷன்?” என்கிற சம்யுக்தாவின் கேள்வி எவ்வளவு நிதர்சனமானது!
“சரி ஒரு பேச்சுக்குக் கேக்கறேன். எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்த ஆளு, வேற ஒரு செட்டப் வச்சிருக்கான்னு தெரிஞ்சுபோய் உன்கிட்ட வந்து நான் அழறேன்னு வை. என்ன சொல்லுவ? ‘அவன் வச்சா வச்சிக்கட்டும். நீ அட்ஜஸ்ட் பண்ணி இரு சம்யு’ன்னு சொல்லுவியா?” என்கிற சவுக்கடியான கேள்விகளால் தாயின் பத்தாம்பசலித்தனத்தை நீக்க முயல்கிறாள். “இது உன் வாழ்க்கைம்மா. நீ நல்லா வாழ வேண்டாமா?” என்று தாய்க்கு மந்திரம் சொல்லும் தகப்பன்சாமியாகிறாள் சம்யுக்தா.

கதையில் வரும் வழக்கறிஞரின், “நீங்க உங்க குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூடக் காட்டாம இருக்கறதுதான் அவரோட பலமே” என்கிற வார்த்தைகள், அறியாமை இருளில் உள்ள பெண்களுக்குக் குன்றிலிட்ட விளக்கு.

உலகம் நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பெண்களும் இருள் படிந்து கிடக்கும் பழைய பஞ்சாங்கத்திலிருந்து தைரியமாக வெளிவரலாம். நமக்காகப் புத்தம் புதிய சிந்தனைகளைக் கொண்ட உலகம் காத்துக்கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT