பெண் இன்று

பாடல் சொல்லும் பாடு 5- பெண்ணை வெல்வதா ஆண்மை?

செய்திப்பிரிவு

நமக்குத் தெரிந்த வரையோ நண்ப ரையோ பார்த்து, “உங்க வீட்ல மதுரை ஆட்சியா சிதம்பரம் ஆட்சியா?” என்று கேட்பது இன்றும் தொடர்வதைப் பற்றி என் தோழி ரேவதியுடன் பேசிக்கொண்டிருந்தபோது தில்லைக்காளியைப் பற்றிய பேச்சு எழுந்தது. தன் உடலின் வகிர்பாகத்தை உமையாளுக்கு அளித்த மாதொருபாகனை விட்டு இந்தக் காளி ஏன் ஊரின் எல்லைக்குச் சென்றாள்?
நடனத்திலே யார் சிறந்தவர் என்பதைக் காண சிவனுக்கும் உமையவளுக்கும் இடையே போட்டி. தேவர்களும் முனிவர் களும் அதைக் கண்டு பிறவிப் பயனை அடையக் காத்திருக்க, போட்டி தொடங்கியது. இருவரும் சமமான ஆடல் திறமையுடன் பார்ப்போரை வசப்படுத்தினர். காளியின் நடனம், அவளுக்கென வாய்த்த நளினத்தால் பேரழகு கொண்டதாக இருக்க அவள் வெற்றி பெற்றுவிடுவாள் என்கிற நிலை.

எல்லை தாண்டிய தில்லைக்காளி

தனக்கு நிகராக ஆடும் காளியைத் தடுமாறச்செய்ய ஊர்த்துவத் தாண்டவமாடு கிறார் சிவன். இடக்காலை தரையில் ஊன்றி வலக்காலைத் தலைவரைக்கும் உயர்த்தியாடுகிறார். எதிர்நின்றாடிய காளியோ நாணத்தால் குனிந்து அந்த நடன அசைவை ஆட முடியாதவளாய்த் திகைக்க, சிவன் வெற்றிபெறுகிறார். போட்டியில் தோற்கடிக்கப் பட்டதால் கோபத்துடன் ஊரைவிட்டு வெளியேறுகிறாள் காளி. ‘தில்லைக்காளி எல்லைக்கு அப்பால்’ என்ற பழமொழி இன்றும் அப்பகுதியில் வழங்கிவருகிறது. ஆணைப் பெண் எதிர்க்க முடியுமா?

எதிர்த்தால் ஆணவத்தால் காளிக்கு நேர்ந்ததுதான் நேரும் என்பதையே இக்கதை சொல்கிறது.

போட்டியிடும் இருவரின் திறன், ஆயுதங்கள், உடல்கூறு என யாவும் சமமானதாக இருக்க வேண்டும். இங்கே, காளிக்கு இழைக்கப்பட்டது அநீதியல்லவா. காளியால் சிவனைப் போல் காலுயர்த்தி ஆட முடியவில்லை என்பதற்கு அவளின் பெண்ணியல்பு காரணமாக இருக்கக்கூடும். இதைக் கொண்டு அவளைத் தோற்கடித்தது அறமா? உன் அகந்தையை விட்டுவிடு பெண்ணே. ஆணின் பலத்தை, அவன் உனக்களித்த பாதியை உணர். அதை விடுத்து அவனிலும் நீ உயர்ந்தவளெனக் காட்ட முயன்றால் இதுவே நடக்கும் என்பதன் வெளிப்பாடுதானே இது?

பொது இடங்களில் கூச்சமற்றுச் சிறுநீர் கழிக்கும் ஆண், முட்டும் சிறுநீரை அடக்கியபடி கழிப்பறைகளைத் தேடித் துயருறும் பெண்ணின் வலியைச் சிந்தித் திருந்தால், அரைகுறைத் தடுப்புகளோடு தண்ணீரற்று மாநகரச் சாலையோரக் கழிப்பறைகள் நிற்குமா? குடும்பச் சுமைகளை மீறிப் பெண்கள் பொது வெளிக்கு வந்து ஆண்களுடன் களத்தில் நிற்கிறார்கள் என்பதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள், பெண் பெறும் வெற்றிகள் யாவும் அவள் பெண்ணாக இருப்பதன் விளைவாகக் கிடைத்தவை என்று அற்பத்தனமாகப் பேசக்கூடும்.

அல்லி அர்ச்சுனன் கதை

‘அல்லி அரசாணிமாலை’ என்னும் மகாபாரத கதைப் பாடலின் நாயகி அல்லி, பகைவர்களை வென்று 12 வயதில் ராணியானவள். ஆணினத்தை அடியோடு வெறுப்பவள். அல்லியை அடையும் வழியை கிருஷ்ணனிடம் கேட்டு, மாய உறக்கத்திலிருந்த அல்லியுடன் உறவுகொண்டு எவராலும் அறுக்கவியலாத தாலியை, அவள் கழுத்தில் கட்டிவிட்டுத் தப்புகிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனனின் மனைவியரான பாஞ்சாலி, சுபத்திரை, நாககன்னி ஆகியோரே அர்ச்சுனனுக்கு மணமுடிக்க, கர்ப்பமுற்ற அல்லியை உடன்பட வைக்கின்றனர். பெண் திறமையும் பலமும் அறிவும் மிக்கவளாக இருந்தாலும் தாலி என்ற கட்டுக்கு அடங்கிவிடுபவளாக, களங்கம் வந்துவிட்டால் தான் கொண்ட கொள்கையைப் புறந்தள்ளி, தன் தூய்மையை நிரூபிக்க, அநீதி இழைத்த ஆணையே மணந்துகொள்ள உடன்படுபவளாக, ஆணின் கயமைக்கு உடனிருப்பவளாகவே இருக்கிறாள். கற்பு, பணிவு, பொறுமை, அடக்கம், நாணம் போன்ற சொற்கள் ஒரு பெண்ணைத் தன் ஒழுக்கத்தைத் தானே மறுபரிசீலனை செய்யச் சொல்லும் சமூக ஆயுதங்களாகின்றன என்பதையே இக்கதைப்பாடல் உணர்த்துகிறது.

குறிப்பால் உணர்த்த வேண்டுமா?

‘சொல் எதிர் மொழிதல் கிழத்திக்கில்லை' எனும் தொல்காப்பியம், பெண், ஆணிடம் எதிர் பேசும் உரிமையற்றவள் என்பதோடு, தன் மனத்து வேட்கையை எந்த நிலையிலும் அவள் நேரடியாக ஆணிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது; பச்சை மண்கலத்தில் நீரூற்றினால், அந்தக் கலம் கசிந்து கசிந்து தன் நீர்மையைக் காட்டுவதைப் போலவே அவள் குறிப்பால் தன் விருப்பையும் காதலையும் காட்ட வேண்டும் என்கிறது. இதையே சங்கக் கவிதைகளின் பெண்கூற்றுகள் கவிதைக் களமாக்கியிருக்கின்றன. தலைவிக்காகத் தோழியே பேசுகிறாள். தலைவனை ‘நின்ற சொல்லர்’, ‘நீடு தோன்று இனியர்’ என்கிற பெண்ணின் நம்பிக்கைக்கு உரமூட்டுகிறாள். தலைவியும் நிலவினில் தீ தோன்றுவதும் கதிரவனில் இருள் புகுவதும் எவ்வாறு இயற்கைக்கு எதிரானதோ அதைப் போன்று நம்பத்தகாததுதான் தலைவன் பொய் உரைப்பான் என்பதும் எனத் தான் காதல் கொண்ட தலைவனின் அன்பில் நம்பிக்கை கொள்கிறாள்.

மாதவியைப் பிரியும் கோவலன்

எந்தக் கலைத் திறமைக்காக கோவலன், மாதவிமீது காதல் கொண்டானோ அதே திறமை அவர்களின் காதல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திரவிழாவில் அவள் ஆடிய பதினோரு வகை நடனங்கள், யாவரையும் கவர்ந்திருக்க, தனக்குரியவளை எல்லோரும் ரசிப்பதா என்று சலனம் கொள்கிறது கோவலனின் மனம். சிலப்பதிகாரத்தின் கானல் வரியில், கணவன் பிற பெண்களைக் கூடினாலும் அவனிடம் சினந்துகொள்ளாத பண்பே பெண்ணின் பெருங்கற்பு என்று கோவலன் சொல்ல, மாதவியோ ஒரு பெண்ணோ, நிலமோ நலமாகத் திகழ ஆண் நெறிபிறழாதவனாக இருக்க வேண்டும் என்கிறாள். கோவலனுக்கு மாதவியின் பதிலுரை உவப்பானதாக இல்லை. காதலியான அவள், இப்போது மாயப் பொய் பல கூட்டும் கணிகையாகிறாள். பெருங்கற்பு கொண்ட கண்ணகியை அவன் மனம் நாடுகிறது. மதுரைக்குச் செல்வோம் என்றதும் எந்தக் கேள்வியுமன்றி உடன் கிளம்பிய கண்ணகியை வியந்து, “எழுகென எழுந்தாய் என் செய்தனை’’ என்று அவள் பொறுமையைப் புகழ்கிறான். விடுதலறியா விருப்பினனாக மாதவியிடமிருந்த கோவலனை எது பிரித்தது? மாதவி எதிர்பேசிய வார்த்தைதானே!

தடையாகுமா பெண் இயல்பு?

‘பெண்ணுக்கழகு எதிர்பேசாதிருத்தல்’ எனும் ஒழுக்கம் இங்கே நடைமுறை வாழ்வின் பகுதியானதை, குடும்பநல நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் காட்டுகின்றன. மாதவியை நினைக்கும்போது ஏனோ நடிகையர் திலகம் சாவித்திரி நினைவுக்கு வருகிறார். மிகப் பெரும் கலை ஆளுமை கொண்ட அவரது தயாரிப்பு முயற்சிகளும் தொடர் தோல்விகளும் அவருடைய குடும்ப வாழ்க்கையைச் சிதைத்தன என்று சொல்லும் பலரும், கணவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொள்ளாத அவரின் பிடிவாதத்தையே அவருடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். சாவித்திரியின் தனித்துவமும் புகழும் நடிகையாக, நேயமுள்ள மனுசியாக அவர் பெற்றிருந்த நற்பெயரும் கணவனாகிய ஆணைத் தொந்தரவு செய்யாமலிருந்திருக்குமா என்ன?
சிவன், அர்ச்சுனன், கிருஷ்ணன், கோவலன் என யாவரும் இன்றும் வேறு பெயர்களுடன் உலவுகையில் பேதைமையற்ற, திராணியுள்ள பெண்ணியல்பைச் சாத்தியமாக்குவது எப்படி? பௌத்தப் பிக்குணியான சோமாவின் கவிதையும் அதைத்தான் கேட்கிறது.
மாரன்: முற்றுந் துறந்த முனிவரும் அடைய அரிதான நிலை எட்ட அவாவுகின்றாய் இரு விரல் நுனிகொண்டு வெந்த சோறு பதம் காணும் பெண் நீ… ஹூம்! உனக்கெப்படி அதை அடைய இயலும்?

சோமா: எமக்கு- வளரும் ஞான நெறியில் மனம் பதித்து உறுதியாக முற்செல்வோ ருக்கு- தம்மத்தின் நெறி நுழைபுலம் உணர்ந்தோருக்கு- பெண் இயல்பு எப்படித் தடையாகும்?

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

SCROLL FOR NEXT